» சினிமா » செய்திகள்

வாழை திரைப்படத்தின் கதை 10 ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய சிறுகதை: எழுத்தாளர் சோ.தர்மன்

வியாழன் 29, ஆகஸ்ட் 2024 11:20:45 AM (IST)



‘வாழை’ திரைப்படத்தில் வரும் விஷயங்கள் அனைத்தும் தன்னுடைய சிறுகதையில் 10 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு செய்யப்பட்டிருப்பதாக எழுத்தாளர் சோ.தர்மன் தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: "’வாழை’ படம் பார்த்தேன். நான் எழுதிய சிறுகதை அப்படத்தில் அப்படியே இருப்பதாக நண்பர்கள் நிறைய பேர் சொன்னார்கள். படத்தில் உள்ள அனைத்து விஷயங்களையும் 10 ஆண்டுகளுக்கு முன்பே ‘வாழையடி’ என்ற சிறுகதையில் நான் எழுதியுள்ளேன். அதில் காட்சிப்படுத்தப்பட்ட அனைத்தும் ‘வாழை’ படத்தில் அப்படியே இருக்கிறது.

சினிமாவுக்காக ஒரு சில விஷயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால் அதில் வரும் சிறுவனுடைய உழைப்பு, தரகர், கூலி உயர்வு, ரஜினி - கமல் என எல்லாமே கிட்டத்தட்ட என் சிறுகதையில் இருப்பவைதான். வாழைத்தார் சுமப்பதன் மூலமாக இரண்டு சிறுவர்களுடைய உழைப்பு எப்படி சுரண்டப்படுகிறது? இதுதான் என் கதையிலும் நான் பதிவு செய்திருக்கிறேன். மாரி செல்வராஜும் அதைத்தான் செய்திருக்கிறார்.

ஒருவேளை அவர் என்னுடைய கதையை படிக்காமல் கூட இருந்திருக்கலாம். அவரே வாழையையும் சுமந்திருக்கலாம். ஆனால் அந்த சிறுவர்கள் படக்கூடிய கஷ்டங்களுக்கு உருவம் கொடுத்தவன் என்ற முறையில் நான்தான் அதற்கு முழு உரிமையானவன்” இவ்வாறு சோ.தர்மன் தெரிவித்துள்ளார்.

சோ.தர்மனின் இந்த பேட்டி வெளியாகி சில மணி நேரங்களில் இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள இயக்குநர் மாரி செல்வராஜ், "வாழைக்காய் சுமை தூக்கும் தொழிலாளர்களை பற்றி எழுத்தாளர் சோ. தர்மன் ‘வாழையடி’ என்கிற பெயரில் எழுதிய சிறுகதையை இப்போதுதான் வாசித்தேன். அவசியம் இந்த கதையை அனைவரும் வாசியுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory