» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ரோகித், விராட் சிறப்பான ஆட்டம்: ஆஸி.யை வீழ்த்தி இந்தியா ஆறுதல் வெற்றி
சனி 25, அக்டோபர் 2025 5:08:12 PM (IST)

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் பெர்த் மற்றும் அடிலெய்டில் நடந்த முதல் இரு ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 46.4 ஓவர்களில் 236 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ரென்ஷா 56 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் 237 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் - ரோகித் சர்மா களமிறங்கினர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் பிரிந்தது. சுப்மன் கில் 24 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து ரோகித் சர்மா உடன் விராட் கோலி கைகோர்த்தார். முதல் 2 போட்டிகளில் டக் அவுட் ஆன விராட் கோலி இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் கடந்த ஆட்டத்தில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய ரோகித் அதனை இந்த போட்டியிலும் தொடர்ந்தார். சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதத்தை கடந்தனர்.
நேரம் செல்ல செல்ல அதிரடி காட்டிய ரோகித் சதம் அடித்து அசத்தினார். இவர்களின் சிறப்பான பேட்டிங்கால் இந்திய அணி எந்தவித சிக்கலுமின்றி இலக்கை எட்டி ஆறுதல் வெற்றி பெற்றது. வெறும் 38.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் அடித்த இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 121 ரன்களுடனும், விராட் கோலி 74 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 29-ம் தேதி ஆரம்பமாக உள்ளது.
விராட் கோலி புதிய சாதனை
இந்த ஆட்டத்தில் அடித்த 74 ரன்களையும் சேர்த்து சர்வதேச வெள்ளைப்பந்து (ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள்) கிரிக்கெட்டில் விராட் கோலி இதுவரை 18,443 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் வெள்ளைப்பந்து போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரர் என்ற உலக சாதனையை இவர் படைத்துள்ளார்.
இதற்கு முன்னர் சச்சின் 18,436 ரன்கள் அடித்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது அதனை முறியடித்துள்ள விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார்.
அந்த பட்டியல்:
1. விராட் கோலி - 18,443 ரன்கள்
2. சச்சின் - 18,436 ரன்கள்
3. குமார் சங்கக்கரா - 15,616 ரன்கள்
4. ரோகித் சர்மா - 15,589 ரன்கள்
5. ஜெயவர்த்தனே - 14,143 ரன்கள்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கு 4-வது டி20 போட்டி: இந்தியா அபார வெற்றி!
வியாழன் 6, நவம்பர் 2025 5:46:10 PM (IST)

ரைசிங் ஸ்டார் ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஜிதேஷ் சர்மா தலைமையில் இந்திய அணி அறிவிப்பு
புதன் 5, நவம்பர் 2025 5:30:26 PM (IST)

இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா டிஎஸ்பி-யாக நியமனம்!
செவ்வாய் 4, நவம்பர் 2025 4:48:01 PM (IST)

பிக்-பாஸ் தொடரில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகல்!
செவ்வாய் 4, நவம்பர் 2025 4:44:46 PM (IST)

பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன்
திங்கள் 3, நவம்பர் 2025 8:50:21 AM (IST)

வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப்சிங் அசத்தல்: 3-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி
திங்கள் 3, நவம்பர் 2025 8:47:06 AM (IST)


.gif)