» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஜடேஜா போராட்டம் வீண்: இந்திய அணி போராடி தோல்வி!
செவ்வாய் 15, ஜூலை 2025 8:28:42 AM (IST)

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்திய அணி 22 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஆல்-ரவுண்டர் ஜடேஜா போராடியும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.
இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி கடந்த 10-ந்தேதி லண்டன் லார்ட்சில் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் இரு அணிகளும் ஒரே மாதிரி 387 ரன்கள் எடுத்தன. 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து 192 ரன்னில் அடங்கியது. இதனால் இந்தியாவுக்கு 193 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. சுலப இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை விளையாடிய இந்தியா 4-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 58 ரன்கள் எடுத்திருந்தது. லோகேஷ் ராகுல் 33 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார்.
இந்த நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. லோகேஷ் ராகுலுடன், விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இணைந்து ஆடினார். கச்சிதமான பீல்டிங், ஆக்ரோஷமான பந்து வீச்சு என்று இங்கிலாந்து தொடக்கம் முதலே மிரட்டியது. சிறிது நேரத்தில் ரிஷப் பண்ட் (9 ரன்) ஜோப்ரா ஆர்ச்சரின் பந்தில் போல்டு ஆனார். அவருக்கு ஆப்-ஸ்டம்பு பல்டி அடித்தது. தொடர்ந்து லோகேஷ் ராகுல் (39 ரன்) பென் ஸ்டோக்சின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். இரு பிரதான பேட்ஸ்மேன்கள் பெவிலியன் திரும்பியதால் இந்தியா நெருடிக்குள்ளானது.
இதன் பின்னர் ஆல்-ரவுண்டர் ஜடேஜா ஒரு பக்கம் போராட மறுமுனையில் வாஷிங்டன் சுந்தர் (0), நிதிஷ்குமார் ரெட்டி (13 ரன்) வீழ்ந்தனர். அப்போது இந்திய அணி 8 விக்கெட்டுக்கு 112 ரன்களுடன் ஊசலாடியது. இதையடுத்து 9-வது விக்கெட்டுக்கு ஜடேஜாவுடன், ஜஸ்பிரித் பும்ரா கூட்டு சேர்ந்தார். பும்ரா முழுக்க முழுக்க தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தினார். கைதேர்ந்த பேட்ஸ்மேன் போல் ஆடிய பும்ரா ஒரு மணி நேரத்திற்கு மேலாக இங்கிலாந்து பவுலர்களை சோதித்தார்.
இருவரும் ஓவருக்கு ஒரு ரன் அல்லது மெய்டன் என்ற ரீதியில் கணக்கு போட்டு ஆடினர். இதனால் இந்தியா கொஞ்சம் சரிவில் இருந்து மீள்வது போல் தெரிந்தது. ஸ்கோர் 147-ஐ எட்டிய போது பும்ரா (5 ரன், 54 பந்து) ஸ்டோக்ஸ் வீசிய பந்தை தேவையில்லாமல் தூக்கியடித்து கேட்ச் ஆனார். ஆனாலும் ஜடேஜா களத்தில் நின்றதால் நம்பிக்கை குறையவில்லை. கடைசி விக்கெட்டுக்கு நுழைந்த முகமது சிராஜ் துணையுடன் ஜடேஜா தொடர்ந்து 4-வது அரைசதத்தை கடந்தார்.
ஜடேஜா வலுவாக காலூன்றியதால், இங்கிலாந்து வீரர்கள் முகமது சிராஜியை குறி வைத்தனர். அவர் பேட் செய்யும் போது மட்டும் அவரை சுற்றி அரண் போல் பீல்டர்களை நிறுத்தி பவுலிங் தாக்குதல் தொடுத்தனர். இருப்பினும் இவர்கள் 14 ஓவர்கள் வரை சமாளித்ததுடன், வெற்றியையும் நெருங்கினர். இதனால் களத்தில் பரபரப்பும், பதற்றமும் தொற்றியது.
இந்த சூழலில் சுழற்பந்து வீச்சாளர் சோயிப் பஷீர் வீசிய பந்தை எதிர்கொண்ட சிராஜ் அதை தடுத்து ஆடினார். பந்து பேட்டில் பட்டு உருண்டு ஸ்டம்பை தட்டியது. அதை சிராஜ் வேடிக்கை பார்த்தாரே தவிர காலால் பந்தை தள்ளிவிட முயற்சிக்கவில்லை. சிராஜ் 4 ரன்னில் (30 பந்து) போல்டு ஆனார். தேனீர் இடைவேளைக்கு பிறகு இந்திய அணி 2-வது இன்னிங்சில் 74.5 ஓவர்களில் 170 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து 22 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது.
ஜடேஜா 61 ரன்களுடன் (181 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) கடைசி வரை களத்தில் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. முதலாவது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி கண்டிருந்தன. இவ்விரு அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி வருகிற 23-ந்தேதி மான்செஸ்டரில் தொடங்குகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆசிய கோப்பை டி.20 தொடர்: இந்திய கிரிக்கெட் அணி நாளை துபாய் பயணம்
புதன் 3, செப்டம்பர் 2025 5:37:17 PM (IST)

பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து விலகிய ரோஜர் பின்னி: ராஜீவ் சுக்லா பொறுப்பேற்பு!
வெள்ளி 29, ஆகஸ்ட் 2025 5:12:23 PM (IST)

மகிழ்ச்சியுடன் திரும்பவில்லை.. ஆனால் அக்கறையுடன்.. 3 மாதங்களுக்கு பிறகு ஆர்சிபி பதிவு!
வியாழன் 28, ஆகஸ்ட் 2025 5:41:31 PM (IST)

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு: அஸ்வின் அறிவிப்பு
புதன் 27, ஆகஸ்ட் 2025 11:39:07 AM (IST)

தென் ஆப்பிரிக்க டி20 லீக் : பயிற்சியாளராக கங்குலி நியமனம்!
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 4:50:05 PM (IST)

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து புஜாரா ஓய்வு: முன்னாள் வீரர்கள் வாழ்த்து
திங்கள் 25, ஆகஸ்ட் 2025 12:18:00 PM (IST)
