» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
269 ரன்கள் விளாசி ஷுப்மன் கில் சாதனை: இந்திய அணி 587 ரன் குவித்து அசத்தல்!
வெள்ளி 4, ஜூலை 2025 11:05:26 AM (IST)

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 587 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. கேப்டன் ஷூப்மன் கில் 269 ரன்கள் விளாசி அசத்தினார்.
பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தில் 85 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 310 ரன்கள் குவித்தது. கே.எல்.ராகுல் 2, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 87, கருண் நாயர் 31, ரிஷப் பந்த் 25, நித்திஷ் குமார் ரெட்டி 1 ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஷுப்மன் கில் 114, ரவீந்திர ஜடோ 41 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
நேற்று 2-வது நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடர்ந்து விளையாடியது. ஷுப்மன் கில்லும், ஜடேஜாவும் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுத்து ரன்கள் சேர்த்தனர். தனது 23-வது அரை சதத்தை கடந்த ஜடேஜா 137 பந்து களில், ஒரு சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 89 ரன்கள் விளாசிய நிலையில் ஜோஷ் டங்க் பந்தில் ஆட்டமிழந்தார். ஜோஷ் டங்க் வீசிய ஷார்ட் பாலை, ஜடேஜா குதிகாலை தூக்கியபடி தற்காப்பு ஆட்டம் விளையாட முயன்றார். ஆனால் பந்து கையுறையில் பட்டு விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித்திடம் எளிதாக கேட்ச் ஆனது.
6-வது விக்கெட்டுக்கு ஷுப்மன் கில், ஜடேஜா ஜோடி சுமார் 47 ஓவர்கள் களத்தில் நின்று 203 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் நிதானமாக விளையாட ஷுப்மன் கில் தாக்குதல் ஆட்டம் மேற்கொண்டார். அபாரமாக விளையாடிய ஷுப்மன் கில் 311 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 21 பவுண்டரிகளுடன் இரட்டை சதம் விளாசினார். இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் இரட்டை சதம் விளாசிய 3-வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார் ஷுப்மன் கில். இதற்கு முன்னர் 1979-ல் சுனில் கவாஸ்கர் (221), 2002-ல் ராகுல் திராவிட் (217) ஆகியோர் இரட்டை சதம் அடித்திருந்தனர்.
ஷுப்மன் கில்லின் அற்புதமான ஆட்டத்தால் இந்திய அணி 129-வது ஓவரில் 500 ரன்களை கடந்தது. நிதானமாக விளையாடிய வாஷிங்டன் சுந்தர் 103 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் எடுத்த நிலையில் ஜோ ரூட் பந்தில் போல்டானார். 7-வது விக்கெட்டுக்கு வாஷிங்டன் சுந்தர், ஷுப்மன் கில் ஜோடி 144 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து ஆகாஷ் தீப் களமிறங்கினார்.
அபாரமாக விளையாடி வந்த ஷுப்மன் கில் 387 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 30 பவுண்டரிகளுடன் 269 ரன்கள் குவித்த நிலையில் ஜோஷ் டங்க் வீசிய பந்தை ஸ்கொயர் லெக் திசையில் அடித்த போது ஆலி போப்பிடம் கேட்ச் ஆனது. இதைத் தொடர்ந்து ஆகாஷ் தீப் 6 ரன்னில் ஷோயிப் பஷிர் பந்தில் ஆட்டமிழந்தார்.
கடைசி விக்கெட்டாக முகமது சிராஜ் 23 பந்துகளில் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஷோயிப் பஷிர் பந்தில் ஸ்டெம்பிங் ஆனார். முடிவில் இந்திய அணி 151 ஓவர்களில் 587 ரன்கள் குவித்து முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது. பிரசித் கிருஷ்ணா 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து அணி சார்பில் ஷோயிப் பஷிர் 3 விக்கெட்களை வீழ்த்தினார். கிறிஸ் வோக்ஸ், ஜோஷ் டங்க் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர். இதையடுத்து இங்கிலாந்து அணி பேட்டிங் செய்யத் தொடங்கியது.
இங்கிலாந்து தடுமாற்றம்: இங்கிலாந்து அணிக்காக ஸாக் கிராவ்லி மற்றும் பென் டக்கெட் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். அந்த இன்னிங்ஸின் மூன்றாவது ஓவரை இந்தியாவின் ஆகாஷ் தீப் வீசினார். அந்த ஓவரின் நான்காவது பந்தில் டக்கெட் மற்றும் ஐந்தாவது பந்தில் ஆலி போப் என அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட் வீழ்த்தி இங்கிலாந்தை அப்செட் செய்தார் ஆகாஷ். அதற்கடுத்த பந்தில் ஹாட்ரிக் வீழ்த்தும் வாய்ப்பை மிஸ் செய்தார். ஜோ ரூட் அந்த பந்தை தடுத்து ஆடி இருந்தார்.
8-வது ஓவரில் கிராவ்லி விக்கெட்டை கைப்பற்றினார் முகமது சிராஜ். பின்னர் 4-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் இணை 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 20 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்துள்ளது இங்கிலாந்து. இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்குகிறது.
பர்மிங்காம் டெஸ்டில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் 269 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஓர் இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார் ஷுப்மன் கில். இதற்கு முன்னர் 1979-ல் தி ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்டின் 4-வது இன்னிங்ஸில் சுனில் கவாஸ்கர் 221 ரன்கள் விளாசியிருந்தார். மேலும் சுப்மன் கில், இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக இரட்டை சதம் விளாசிய இளம் வீரர் என்ற சாதனையை கில் படைத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கேப்டனாக பொறுப்பேற்ற முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் சதம்: சுப்மன் கில் அசத்தல்!
வியாழன் 3, ஜூலை 2025 10:10:20 AM (IST)

கவுண்டி கிரிக்கெட்டில் 820 ரன்கள் குவிப்பு: சர்ரே அணி வரலாற்று சாதனை!
செவ்வாய் 1, ஜூலை 2025 4:44:50 PM (IST)

டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்: கேசவ் மகராஜ் வரலாற்று சாதனை!!
திங்கள் 30, ஜூன் 2025 12:39:44 PM (IST)

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் : பும்ரா நீக்கம்!
வெள்ளி 27, ஜூன் 2025 10:51:40 AM (IST)

ரிங்கு சிங் - பிரியா சரோஜ் எம்.பி. திருமணம் ஒத்திவைப்பு..?
வியாழன் 26, ஜூன் 2025 5:36:32 PM (IST)

லீட்ஸ் டெஸ்ட்: இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து!
புதன் 25, ஜூன் 2025 8:50:17 AM (IST)
