» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

லக்னோ அணியை வீழ்த்தியது சென்னை :தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி!

செவ்வாய் 15, ஏப்ரல் 2025 11:27:09 AM (IST)



லக்னோவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 

10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 30-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 63 ரன்கள் அடித்தார். சென்னை தரப்பில் ஜடேஜா, பதிரானா தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

பின்னர் 167 ரன் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி 19.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 168 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷிவம் துபே 43 ரன்களுடனும் (37 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), தோனி 26 ரன்களுடனும் (11 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தனர். தோனி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் இந்த வெற்றிக்குப்பின் சென்னை கேப்டன் மகேந்திரசிங் தோனி அளித்த பேட்டியில், "இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றது நல்லது. இதுபோன்ற ஒரு தொடரில் நீங்கள் விளையாடும்போது, வெற்றி பெற விரும்புகிறீர்கள். துரதிர்ஷ்டவசமாக முந்தைய போட்டிகள் எங்கள் வழியில் செல்லவில்லை. அதற்கு நிறைய காரணங்கள் இருக்கலாம். இந்த வெற்றி முழு அணிக்கும் நம்பிக்கையைத் தருகிறது. மேலும் நாங்கள் முன்னேற வேண்டிய பகுதிகளை கண்டறிந்து முன்னேற உதவுகிறது.

கிரிக்கெட் உங்கள் வழியில் வராதபோது, கடவுள் அதை மிகவும் கடினமாக்குகிறார் என்பதை நாங்கள் அனைவரும் அறிவோம். பவர்பிளேவைப் பார்த்தால், அது பார்ட்னர்ஷிப்பாக இருந்தாலும் சரி அல்லது சூழ்நிலையாக இருந்தாலும் சரி, நாங்கள் சிரமப்பட்டோம். ஒரு பேட்டிங் யூனிட்டாக நாங்கள் விரும்பிய தொடக்கத்தைப் பெற முடியவில்லை. தவறான நேரத்தில் நாங்கள் விக்கெட்டுகளை இழந்து வருகிறோம்.

சேப்பாக்கம் பிட்ச் சற்று மெதுவாக இருப்பதும் விக்கெட்டுகளை இழப்பதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். நாங்கள் சொந்த மண்ணிலிருந்து வெளியே விளையாடியபோது, பேட்டிங் யூனிட் சற்று சிறப்பாக செயல்பட்டது. நாங்கள் பயமுறுத்தும் கிரிக்கெட்டை விளையாட விரும்பவில்லை.

ஷேக் ரசீத் இன்று மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்தார் என்று நினைக்கிறேன். அவர் சில ஆண்டுகளாக எங்களுடன் இருக்கிறார். இந்த ஆண்டு அவர் வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் இருவருக்கும் எதிராக வலைகளில் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். இது வெறும் ஆரம்பம். பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தும் திறன் அவருக்கு உள்ளது" என்று கூறினார்.

சென்னை கேப்டனும், விக்கெட் கீப்பருமான தோனி நேற்றைய ஆட்டத்தில் ஆயுஷ் பதோனியை ஸ்டம்பிங் செய்து வெளியேற்றினார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 200 முறை ஸ்டம்பிங் செய்த முதல் முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை தோனி படைத்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory