» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

36 ஆண்டுக்கு பிறகு இந்திய மண்ணில் வெற்றி: வரலாறு படைத்தது நியூசிலாந்து!

திங்கள் 21, அக்டோபர் 2024 9:28:32 PM (IST)


பெங்களூருவில் நடந்த முதலாவது டெஸ்டில் நியூசிலாந்து அணி, இந்தியாவை அதன் சொந்த மண்ணிலேயே 36 ஆண்டுக்கு பிறகு வீழ்த்தி வரலாறு படைத்தது.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் கடந்த 16-ந்தேதி தொடங்கியது. மழையால் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்ட நிலையில் 2-வது நாளில் முதலில் பேட் செய்த இந்திய அணி வெறும் 46 ரன்னில் சுருண்டு அதிர்ச்சி அளித்தது. ஆசிய மண்ணில் ஒரு அணி 50 ரன்னுக்குள் அடங்கியது இதுவே முதல்முறையாகும்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி ரச்சின் ரவீந்திராவின் அபார சதத்தால் (134 ரன்) 402 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து 356 ரன்கள் பின்தங்கிய இந்திய அணி 2-வது இன்னிங்சில் சர்ப்ராஸ்கான் (150 ரன்), ரிஷப் பண்ட் (99 ரன்) ஆகியோரின் பொறுப்பான பேட்டிங்கால் ஒரு வழியாக இன்னிங்ஸ் தோல்வி ஆபத்தில் இருந்து தப்பியதுடன், 462 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் நியூசிலாந்துக்கு 107 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை நோக்கி நியூசிலாந்து ஆடிய போது 4 பந்து மட்டுமே வீசப்பட்ட நிலையில் போதிய வெளிச்சமின்மையால் அத்துடன் 4-வது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி நாளான நேற்று காலையில் பெய்த மழையால் ஆட்டம் ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கியது. 20 ஆண்டுக்கு முன்பு மும்பை ஸ்டேடியத்தில் இதே போல் 107 ரன் இலக்கை நிர்ணயித்து இந்திய அணி அதற்குள் ஆஸ்திரேலியாவை மடக்கி வரலாறு படைத்தது. அதே போன்ற ஒரு மாயாஜால பந்து வீச்சை நியூசிலாந்துக்கு எதிராகவும் இந்திய பவுலர்கள் வெளிப்படுத்துவார்களா? என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் டாம் லாதமும், டிவான் கான்வேவும் களம் புகுந்தனர். வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ராவும், முகமது சிராஜியும் தாக்குதலை தொடுத்தனர். 6-வது பந்தில் லாதம் (0) பும்ரா பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். மற்றொரு தொடக்க வீரர் கான்வேயும் (17 ரன்) அவரது பந்துவீச்சில் வீழ்ந்தார். இதனால் இந்தியா பக்கம் நம்பிக்கை லேசாக எட்டிப் பார்த்தது. ரசிகர்களும் உற்சாகமானார்கள். ஆனால் 3-வது விக்கெட்டுக்கு வில் யங்கும், ரச்சின் ரவீந்திராவும் இணைந்து சில பவுண்டரிகளை ஓடவிட்டு நெருக்கடியை குறைத்ததுடன் வெற்றிப்பாதைக்கும் அடித்தளமிட்டனர். ஜடேஜா, குல்தீப், அஸ்வின் ஆகிய மும்மூர்த்திகளின் சுழல் ஜாலம் இந்த தடவை எடுபடவில்லை.

மதிய உணவு இடைவேளைக்கு முன்பாக நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 27.4 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 110 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வில் யங் 48 ரன்களுடனும் (76 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்), ரவீந்திரா 39 ரன்களுடனும் (46 பந்து, 6 பவுண்டரி) களத்தில் இருந்தனர். ரவீந்திரா ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

நியூசிலாந்து அணி இந்திய மண்ணில் டெஸ்டில் வெற்றி காண்பது 36 ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். இந்திய மண்ணில் இந்தியாவுக்கு எதிராக இதுவரை 37 டெஸ்டுகளில் ஆடியுள்ள நியூசிலாந்து அணி இதையும் சேர்த்து 3-ல் வெற்றி பெற்றுள்ளது. 17-ல் டிராவும், 17-ல் தோல்வியும் கண்டுள்ளது. இதற்கு முன்பு 1969 (நாக்பூரில் 167 ரன் வித்தியாசம்) மற்றும் 1988-ம் (மும்பையில் 136 ரன் வித்தியாசம்) ஆண்டுகளில் நியூசிலாந்து வெற்றி கண்டிருந்தது.

ஸ்டீபன் பிளமிங், பிரன்டன் மெக்கல்லம், கேன் வில்லியன்சன் போன்றவர்களால் முடியாததை நியூசிலாந்தின் முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற முதல் டெஸ்டியே டாம் லாதம் சாதித்து காட்டியிருக்கிறார்.

வாஷிங்டன் சுந்தர் சேர்ப்பு

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 24-ந்தேதி புனேயில் தொடங்குகிறது.

அடுத்த இரு டெஸ்டுக்கான இந்திய அணியில் சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் தமிழகத்ைத சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளார். ரஞ்சி கிரிக்கெட்டில் டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்து கவனத்தை ஈர்த்த வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியுடன் இணைகிறார்.

நியூசிலாந்து முன்னேற்றம்

நியூசிலாந்துக்கு எதிரான தோல்வியின் மூலம் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிபட்டியலில் 6 புள்ளிகளை இழந்துள்ளது. என்றாலும் 68.06 சதவீத புள்ளியுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலியா 2-வது இடத்திலும் (62.60 புள்ளி), இலங்கை (55.56) 3-வது இடத்திலும் உள்ளன. அதே சமயம் வெற்றியால் 7 சதவீத புள்ளிகளை கூடுதலாக சேகரித்த நியூசிலாந்து 44.44 சதவீத புள்ளியுடன் 6-ல் இருந்து 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இங்கிலாந்து 5-வது இடம் (43.06) வகிக்கிறது.

19 ஆண்டுக்கு பிறகு பெங்களூருவில் முதல் அடி

* உள்நாட்டில் இந்திய அணி ஒரு இன்னிங்சில் 450 ரன்களுக்கு மேல் (2-வது இன்னிங்ஸ் 462 ரன்) எடுத்தும் தோல்வி அடைவது இதுவே முதல் முறையாகும்.

* இந்திய மண்ணில் கடந்த 24 ஆண்டுகளில் 100 ரன்களுக்கு மேல் இலக்கை விரட்டிப்பிடித்த முதல் வெளிநாட்டு அணி என்ற பெருமையை நியூசிலாந்து பெற்றது. இந்த வகையில் கடைசியாக தென்ஆப்பிரிக்க அணி 2000-ம் ஆண்டு மும்பையில் நடந்த டெஸ்டில் 163 ரன் இலக்கை வெற்றிகரமாக ‘சேசிங்’ செய்திருந்தது.

* இந்திய அணி பெங்களூரு மைதானத்தில் 2005-ம் ஆண்டில் பாகிஸ்தானிடம் தோற்றிருந்தது. அதன் பிறகு இங்கு நடந்த 8 டெஸ்டுகளில் (5-ல் வெற்றி, 3-ல் டிரா) தோல்வியே சந்திக்காமல் வீறுநடை போட்ட இந்தியா 19 ஆண்டுக்கு பிறகு இப்போது சறுக்கலை சந்தித்து இருக்கிறது. அதே சமயம் நியூசிலாந்துக்கு இந்த மைதானத்தில் கிடைத்த முதல் வெற்றி இதுவாகும். இதற்கு முன்பு இங்கு விளையாடி இருந்த 3 டெஸ்டுகளிலும் தோல்வியை தழுவியிருந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory