» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பொங்கல் முதல் ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம்: சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு

திங்கள் 24, ஆகஸ்ட் 2026 10:37:37 AM (IST)

அன்ன பூரணி சூப்பர் 6 திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ஆண்டிற்கு 3 விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள் வழங்கும் திட்டம் வரும் பொங்கல் பண்டிகை முதல் அமலுக்கு வரும். சிலிண்டருக்கான விலை நேரடியாக பயனாளியின் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. 2 நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று நடைபெறும் சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை, தமிழ் வளர்ச்சி செய்தி மற்றும் விளம்பரம் ஆகிய துறைகளின் மீதான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது. 

இந்தநிலையில்,சட்டமன்றத்தில் விதி எண் 110-ன் கீழ் முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், போர் சூழல் காரணமாக சிலிண்டர் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை முதல் அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் செயல்படுத்தப்படும். சிலிண்டர் வழங்கும் திட்டம் பொங்கல் பண்டிகை முதல் செயல்பாட்டுக்கு வரும். அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தில் முதற்கட்டமாக ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும்.

வரும் பொங்கல் பண்டிகை முதல் இந்த திட்டம் அமலுக்கு வரும். இதற்காக ஆண்டுக்கு 4,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். எரிவாயு சிலிண்டருக்கான விலை நேரடியாக பயனாளியின் கணக்கில் வரவு வைக்கப்படும்.

பரந்தூர் விமான நிலையம் 

பரந்தூர் விமான நிலையம் அமைக்க கூடாது என போராடிய மக்களுடன் உறுதியாக நிற்கிறேன். நீண்ட நாட்களுக்கு மேலாக இந்த திட்டத்திற்கு எதிராக போராடிவரும் விவசாயிகளுக்கு எனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன். விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு, இந்த விவசாய நிலங்களை பாதுகாக்க இந்த மக்கள் போராடி வருகிறார்கள். விக்கிரவாண்டியில் அக்டோபர் 2024 நடந்த பொதுக் கூட்டத்திலேயே பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறேன். தொழில் வளர்ச்சி மற்றும் அதற்கான விமான நிலையங்களின் பங்கு பற்றி நான் நன்கு அறிவேன். அதற்கான என்னுடைய முழு ஆதரவும் உண்டு. ஆனால் பரந்தூரில் இந்த திட்டம் அமையக்கூடாது.

இந்த திட்டம் குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும், குறைவான விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் வகையிலும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையிலும் மாற்று இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என தெரிவித்தேன். மக்கள் மத்தியிலே நான் அன்று அறிவித்ததை நிறைவேற்றும் பொருட்டு புதிய விமான நிலையம் அமைப்பது குறித்து உயர் அதிகாரிகளிடமும், துறை வல்லுனர்களிடமும் விரிவாக ஆலோசனை நடத்தினேன். 

ஏற்கனவே நான் உறுதி அளித்தவாறு பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் இந்த அரசால் கைவிடப்படும். புதிய விமான நிலையம் அமைப்பதற்கு புதிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

மகளிர் கட்டணமில்லாப் பயணத் திட்டம்

மகளிர் கட்டணமில்லாப் பயணத் திட்டம் 'வெற்றிப் பயணம்' என்ற பெயரில் காந்தியடிகள் பிறந்த நாளான அக்.2ம் தேதி முதல் விரிவாக்கம் செய்யப்படும். முதற்கட்டமாக மாநகரம், நகரப் பகுதிகளில் இயங்கும் Express, LSS, டீலக்ஸ் (Deluxe) அரசுப் பேருந்துகளிலும், மகளிர் கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளலாம். 

மாவட்டங்களுக்கிடையே பயணம் மேற்கொள்ள ஏதுவாக புறநகர் (Mofussil) மற்றும் மலைப் பகுதிகளில், சாதாரணக் கட்டண பேருந்துகளிலும், மகளிர் கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளலாம். வருமான உச்சவரம்போ மற்றும் மேற்கொள்ளவிரும்பும் பயண எண்ணிக்கையிலோ கட்டுப்பாடுகள் இல்லை. திருநரும் (Transgender) கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory