» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் 3 முறை விசில் ஊதிய த.வெ.க. கவுன்சிலர் இடைநீக்கம்!

செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 7:57:59 AM (IST)

tvkCounselorvisil.jpg

நெல்லை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் 3 முறை விசில் ஊதிய த.வெ.க. கவுன்சிலர் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அவையின் மாண்பைக் குறைக்கும் வகையில் நடந்துகொண்ட அக்கவுன்சிலரை 2 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்து மேயர் உத்தரவிட்டார்.

நெல்லை மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று மேயர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களது வார்டு சார்ந்த பிரச்சனைகளைப் பேசி வந்தனர்.

அப்போது, உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, சமீபத்தில் த.வெ.க.-வில் இணைந்த 19-வது வார்டு கவுன்சிலர் அல்லாபிச்சை த.வெ.க. துண்டுடன் கூட்டத்திற்கு வந்தார். அரங்கிற்கு வந்த அவர், கூட்டணி கட்சி கவுன்சிலர்களுக்குச் சால்வை அணிவித்துவிட்டுத் தனது இருக்கையில் சென்று அமர்ந்தார்.

அமர்ந்த சிறிது நேரத்தில், கவுன்சிலர் அல்லாபிச்சை தனது கையில் வைத்திருந்த விசிலை எடுத்துத் திடீரென ஊதினார். இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க. கவுன்சிலர்கள் அவருடன் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேயரும், மண்டலத் தலைவருமான பிரான்சிஸும் தலையிட்டு அவரைச் சமரசம் செய்து, "இனி விசில் அடிக்கக் கூடாது" என எச்சரித்தனர்.

இருப்பினும் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் அவர் மேலும் 2 முறை விசில் ஊதியதால் கூட்ட அரங்கம் போராட்டக் களமாக மாறியது. ஆத்திரமடைந்த தி.மு.க. கவுன்சிலர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு கோஷமிட்டனர். அந்தச் சமயத்தில் அல்லாபிச்சை மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டது.

"விசில் தான் எங்கள் கட்சியின் சின்னம், அதைத் தெரியப்படுத்தவே விசில் அடித்தேன்; என் மீது பாட்டில் வீசியவர் மீது நடவடிக்கை எடுங்கள்" என அல்லாபிச்சை பதிலளித்தார்.

அவையில் நிலைமை மோசமடைந்ததையடுத்து, மேயர் ராமகிருஷ்ணன் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டார். "அவையின் மாண்பைக் குறைக்கும் வகையில் நடந்துகொண்ட கவுன்சிலர் அல்லாபிச்சை, அடுத்து வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் ஆகிய 2 மாத மாமன்றக் கூட்டங்களில் பங்கேற்கக் கூடாது என சஸ்பெண்ட் செய்து உத்தரவிடுகிறேன்" என அறிவித்தார்.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட பின்னரும் அவர் வெளியற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களில் 70-வது தீர்மானத்தைத் தவிர மற்ற அனைத்துத் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்துவிட்டு மேயர் கூட்டத்தை முடித்துக் கொண்டு புறப்பட்டார். இச்சம்பவத்தால் மாநகராட்சி வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory