» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நாளை நிறைவு: தயார் நிலையில் விசைப்படகுகள்!
சனி 13, ஜூன் 2026 8:28:32 AM (IST)
தமிழகத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் ஆண்டுதோறும் அமல்படுத்தப்படும் 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் நாளையுடன் (ஜூன் 14) நிறைவடைவதைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்ல தீவிரமாகத் தயாராகி வருகின்றனர்.
மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு, தமிழகக் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் ஆண்டுதோறும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இக்காலக்கட்டத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் கடலில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது.
நிகழாண்டிற்கான தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தின் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகம், வேம்பார், தருவைகுளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் 545-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாமல் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இந்த 61 நாட்கள் தடைக்காலத்தைப் பயன்படுத்திய மீனவர்கள், தங்களது படகுகளைச் சீரமைத்தல், என்ஜின் பழுதுபார்த்தல் மற்றும் வலைகளைச் சரிசெய்தல் போன்ற பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
இதனிடையே, தடைக்கால விதிமுறைகளை மீறித் தூத்துக்குடி கடல் பகுதியில் கேரள விசைப்படகு மீனவர்கள் எவரேனும் அத்துமீறி மீன்பிடிக்கிறார்களா என்பதைக் கண்காணிக்க மீன்வளத்துறை, கடலோரக் காவல் படை, உள்ளூர் போலீசார் மற்றும் மீனவர்கள் அடங்கிய கூட்டு ரோந்துக் குழு அமைக்கப்பட்டுத் தீவிரக் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தடைக்காலம் ஞாயிற்றுக்கிழமையுடன் (நாளை) நிறைவடைவதைத் தொடர்ந்து, புதுப்பித்துத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள படகுகளில் டீசல் நிரப்புதல், சீரமைக்கப்பட்ட வலைகளைப் படகுகளில் ஏற்றுதல் மற்றும் பனிமட்டிகளை (Ice boxes) தயார் செய்தல் போன்ற முன்னேற்பாடு பணிகளில் மீனவர்கள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். மேலும், படகுகளின் இயந்திரங்கள் சீராக இயங்குகிறதா என்பதை உறுதி செய்ய விசைப்படகுகளை இயக்கிச் சோதனை ஓட்டமும் நடத்தி வருகின்றனர்.
நாளை நள்ளிரவு முதல் தடைக்காலம் முடிவுக்கு வருவதால், தூத்துக்குடியிலிருந்து மட்டும் சுமார் 250-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், தருவைகுளம், வேம்பார் போன்ற பகுதிகளில் இருந்து மற்ற படகுகளும் மீன்பிடிக்கக் கடலுக்குள் செல்லவுள்ளன. நீண்ட நாட்களுக்குப் பிறகு கடலுக்குச் செல்வதால், இந்த முறை மீன்கள் அதிக அளவில் கிடைக்கும் என்ற பலத்த எதிர்பார்ப்பு மீனவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வெறும் கம்பமாக நிற்கும் செக்போஸ்ட் சிசிடிவி : ஆவணங்களின்றிப் பறக்கும் லாரிகள்!
சனி 13, ஜூன் 2026 9:21:41 PM (IST)

சேலத்தில் பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் அதிரடி கைது!
சனி 13, ஜூன் 2026 12:22:44 PM (IST)

மாணவி கொலை வழக்கு: மரண தண்டனை பெற்ற குற்றவாளி மேல்முறையீடு செய்ய மீண்டும் அவகாசம்!
சனி 13, ஜூன் 2026 10:40:05 AM (IST)

புகையிலைக்கு நாடு முழுவதும் முழுமையான தடை : மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
சனி 13, ஜூன் 2026 10:32:37 AM (IST)

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் போலி சிபிஐ அதிகாரி கைது: போலி அடையாள அட்டைகள் பறிமுதல்
சனி 13, ஜூன் 2026 8:57:57 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்திற்கு என்எல்சி நிறுவனம் ரூ.3.65 கோடி சிஎஸ்ஆர் நிதி: 11 திட்டங்களுக்கு ஒப்புதல்!
சனி 13, ஜூன் 2026 8:52:16 AM (IST)


