» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வீடுபுகுந்து கல்லூரி மாணவிக்கு வெட்டு: கஞ்சா போதை இளைஞர் கைது; இருவருக்கு வலை!

புதன் 15, ஏப்ரல் 2026 5:19:42 PM (IST)

மீஞ்சூர் சென்னையை அடுத்த மீஞ்சூரில், கல்லூரித் தேர்வுக்காக வீட்டில் படித்துக் கொண்டிருந்த மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதோடு, கத்தியால் வெட்டிக் கொலை செய்ய முயன்ற கஞ்சா போதை கும்பலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே உள்ள வல்லூர் ஊராட்சியைச் சேர்ந்தவர் முகமது அஸ்கர். இவரது மகள் சுமையா ஃபாத்திமா (18), தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். தற்போது கல்லூரியில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று வருவதால், நேற்று இரவு மாணவி தனது வீட்டின் மாடியில் உள்ள அறையில் தனியாகப் படித்துக் கொண்டிருந்தார்.

அப்போது, கஞ்சா போதையில் இருந்த மூன்று இளைஞர்கள், வீட்டின் பின்புறம் உள்ள முட்புதர் வழியாகப் பக்கத்து வீட்டு மாடிக்குச் சென்று, அங்கிருந்து மாணவி ஃபாத்திமாவின் வீட்டு மாடியில் குதித்துள்ளனர். அறையில் புகுந்த அந்த கும்பல், மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது. மாணவி கூச்சலிடவே, ஆத்திரமடைந்த அந்த கும்பல் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஃபாத்திமாவின் தலை, கை மற்றும் கால் பகுதிகளில் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடியது.

மாணவியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர், தப்பியோட முயன்றவர்களில் ஒருவனை விரட்டிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவன் மீஞ்சூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டான். படுகாயமடைந்த மாணவி ஃபாத்திமா, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கைது செய்யப்பட்ட இளைஞர் டில்லி பாபு என்பவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள மற்ற இருவரைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட டில்லி பாபு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கத்தி மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் 'ரீல்ஸ்' பதிவிட்டு அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தேர்வுக்காகப் படித்துக் கொண்டிருந்த மாணவி மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல், அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory