» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கேஸ் சிலிண்டர் வெடித்து வீடு தரைமட்டம்: 7 பவுன் நகை, ரூ.2 லட்சம் பணம் தீயில் கருகின!

ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:33:16 AM (IST)



திருச்செந்தூர் அருகே சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் வீடு இடிந்து தரைமட்டமானது. இதில் வீட்டிலிருந்த நகை மற்றும் பணம் தீயில் கருகிச் சாம்பலாகின.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள கீழ நாலுமூலைக்கிணறு, அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி சந்திமுத்து. கூலித் தொழிலாளர்களான இவர்கள் ஆஸ்பெஸ்டாஸ் சீட் அமைக்கப்பட்ட வீட்டில் வசித்து வந்தனர். நேற்று மாலை இவர்கள் வேலை முடிந்து வீடு திரும்பியபோது, வீட்டின் உள்ளே துணிகள் தீப்பற்றி எரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாகத் தண்ணீரை ஊற்றித் தீயை அணைக்க முயன்றபோது, சமையலறையில் இருந்த சிலிண்டரில் எரிவாயு கசிவு ஏற்பட்டுத் தீப்பற்றி எரிவதைக் கவனித்தனர். ஆபத்தை உணர்ந்த இருவரும் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறினர். இது குறித்துத் திருச்செந்தூர் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்பாகவே, சமையல் எரிவாயு சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த அதிர்வில் வீட்டின் மேற்கூரை மற்றும் சுவர்கள் இடிந்து விழுந்து வீடு தரைமட்டமானது. தம்பதியினர் முன்னதாகவே வெளியேறியதால் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை முழுமையாக அணைத்தனர். இருப்பினும், வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 7 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கப் பணம் தீயில் கருகிச் சேதமடைந்தன. இந்த விபத்து மின்கசிவினால் ஏற்பட்டதா அல்லது சமையல் எரிவாயு கசிவு காரணமா என்பது குறித்துத் திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory