» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்!

வெள்ளி 13, மார்ச் 2026 12:13:57 PM (IST)



நாம் தமிழர் கட்சியின் முன்னாள் மாநில நிர்வாகியும், பிரபல மேடைப் பேச்சாளருமான பி. காளியம்மாள், இன்று காலை சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமையகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.

நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்த காளியம்மாள், தனது ஆவேசமான பேச்சுகளால் குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் பிரபலமானார். 2019 மக்களவைத் தேர்தலில் வட சென்னை தொகுதியில் போட்டியிட்டு சுமார் 60,000 வாக்குகளைப் பெற்றார். கடந்த பிப்ரவரி மாதம் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய அவர், சுமார் ஓராண்டு காலமாக எந்தக் கட்சியிலும் சேராமல் இருந்தார். பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், இன்று அதிகாரப்பூர்வமாக அதிமுகவில் ஐக்கியமானார்.

அதிமுகவில் இணைந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய காளியம்மாள்,   "ஒரு சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்து வந்து, ஒரு தமிழனின் தலைமையில் இயங்கும் இயக்கமான அதிமுகவில் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையை ஏற்று இன்று முதல் எனது அரசியல் பயணம் தொடரும்," என்று தெரிவித்தார்.

அதிமுகவில் தற்போது துடிப்பான பெண் முகங்களுக்கான தேவை இருக்கும் நிலையில், காளியம்மாளின் வருகை அக்கட்சியின் மகளிரணிக்கு பெரும் பலமாக அமையும் எனக் கருதப்படுகிறது. குறிப்பாக, அவரது மேடைப் பேச்சுத் திறன் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் வாக்கு வங்கியை அதிகரிக்க உதவும் என்று அக்கட்சி மேலிடம் கணிக்கிறது. அவருக்குக் கட்சியில் முக்கியப் பொறுப்பும், வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

யார் இந்த காளியம்மாள்?

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த இவர், தொடக்க காலத்தில் மீனவப் பெண்களின் உரிமைகளுக்காகப் போராடியவர். 15 கடலோர மாவட்டங்களை ஒருங்கிணைத்து, 'தமிழக மீனவப் பெண் தொழிலாளர்கள் சங்கம்' என்ற அமைப்பை உருவாக்கி அதன் மாநில பொதுச்செயலாளராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory