» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகம் உட்பட 5 மாநில தேர்தல் தேதி விரைவில் அறிவிப்பு: தேர்தல் ஆணையக் குழு ஆய்வு நிறைவு!

சனி 28, பிப்ரவரி 2026 5:16:35 PM (IST)



தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் சட்டசபை பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், தேர்தல் தேதியை அறிவிப்பதற்கான இறுதிக்கட்டப் பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

தமிழகத்தில் ஆளும் திமுக அரசின் பதவிக்காலம் வரும் மே 10-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதேபோல் புதுச்சேரி (ஜூன் 15), மேற்கு வங்காளம் (மே 7), அசாம் (மே 20) மற்றும் கேரளா (மே 23) ஆகிய மாநிலங்களின் பதவிக்காலமும் முடிவுக்கு வருகிறது. மொத்தம் உள்ள 824 தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்துவது குறித்து மாநில தேர்தல் அதிகாரிகளுடன் ஆணையம் ஆலோசித்து வருகிறது.

தமிழகத்தில் வன்முறை குறைவு என்பதால் எப்போதும் ஒரே கட்டமாகவே தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். இருப்பினும், இந்த 5 மாநில தேர்தலையும் கண்காணிக்க714 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் (தேர்தல் பார்வையாளர்கள்), 233 ஐ.பி.எஸ் அதிகாரிகள், 497 செலவின பார்வையாளர்கள், ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2021-ல் கொரோனா காரணமாக ஏப்ரல் 6-லேயே தேர்தல் நடத்தப்பட்டது. ஆனால், இந்த முறை கோடை வெயிலின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, 5 கட்டங்களாகத் தேர்தலை நடத்தத் திட்டமிட்டுள்ள ஆணையம், தமிழகத்திற்கான தேர்தலை மே மாதத்தில் கடைசி கட்டமாக நடத்த வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் தலைமையிலான 7 பேர் கொண்ட குழு, 3 நாட்கள் பயணமாகத் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு வருகை தந்து ஆய்வு நடத்தியது. புதுச்சேரியில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய குழு, பின்னர் சென்னையில் விரிவான ஆய்வுக் கூட்டங்களை நடத்தியது.

ஆய்வை முடித்துக்கொண்டு டெல்லி புறப்பட்ட இந்தக் குழுவினரை, தமிழக டி.ஜி.பி. (பொறுப்பு) வெங்கட்ராமன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் அருண் ஆகியோர் வழி அனுப்பி வைத்தனர். இன்னும் ஓரிரு வாரங்களில் தமிழக சட்டசபை தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory