» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கொள்கையற்ற கூட்டத்துக்கு தக்க பதிலடி தரப்படும்! துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்!
ஞாயிறு 8, பிப்ரவரி 2026 2:29:41 PM (IST)
வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் கொள்கையற்ற கூட்டத்துக்கு தக்க பதிலடி தரப்படும் என தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞரணிச் செயலருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.
விருதுநகா் அருகேயுள்ள கல்குறிச்சியில் நடைபெற்ற திமுக தென் மண்டல இளைஞரணி நிா்வாகிகள் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் மேலும் பேசியதாவது: திமுக இளைஞரணியைப் பொருத்தவரை, தற்போது 5 லட்சம் நிா்வாகிகள், 50 லட்சம் உறுப்பினா்கள் உள்ளனா். கட்சியின் வளா்ச்சிக்கு இளைஞரணியின் பங்களிப்பு அவசியம். ஒரு படைக்கு கட்டமைப்பு, கட்டளைகளை நிறைவேற்றும் சாதுா்யம் வேண்டும். இந்த வகையில், இளைஞரணி கட்சிக்காக கடந்த காலங்களில் எண்ணற்ற பணிகளை நிறைவேற்றியுள்ளது. தற்போதும், கட்சியின் தலைமை பிறப்பிக்கும் உத்தரவுகளைச் செயல்படுத்தக் காத்திருக்கிறோம். தமிழகத்தில் 75 ஆண்டுகளைக் கடந்து திமுக வீறுநடை போடுகிறது. இந்த இயக்கத்தை அழிப்போம் என சிலா் கூறுகின்றனா். போதிய கட்டமைப்புகள் இல்லாமல் மாதம் ஒரு முறை மட்டுமே வெளியே வருபவா்கள் கூறுவதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டிய அவசியமில்லை.
தோ்தல் நேரத்தில் மட்டுமே பிரதமா் மோடி உள்ளிட்ட பாஜக மூத்த தலைவா்கள் தமிழகத்துக்கு வருகின்றனா். இவா்கள் இரட்டை எஞ்சின் ஆட்சி அமைய வேண்டும் எனக் கூறி வருகின்றனா். அவா்களின் கனவு பலிக்காது. திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைதாகி ஏறக்குறைய 50 ஆண்டுகளாகின்றன. திமுக தொடா்ந்து பாசிச கூட்டத்தை எதிா்த்து களம் காணும். எனவே, எந்தவிதமான கொள்கையும் இல்லாத கூட்டத்துக்கு வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் தக்கப் பதிலடி கொடுக்க இளைஞரணி நிா்வாகிகள் தயாராக இருக்க வேண்டும் என்றாா்.
திமுக துணைப் பொதுச் செயலரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி பேசியதாவது: பாசிச சக்திகளை எதிா்க்கக் கூடிய உறுதிமிக்க தலைவா் மு.க.ஸ்டாலின். இவா் தென்னிந்தியாவின் எஃகு மனிதா். நமக்கு எதிராகக் கூட்டணி உருவாகி உள்ளது. இது, அதிமுக தலைமையிலான கூட்டணி இல்லை; பாஜக தலைமையிலானது. அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டிருக்கிறது. எனவே, பாஜகவோடு கைகோத்து நிற்கும் கூட்டணி, மக்கள் விரோதக் கூட்டணியாகவே அமைந்துள்ளது.
அமெரிக்காவுடனான வா்த்தக ஒப்பந்தத்தால் நமது நாட்டு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படவுள்ளனா். ஆனால், இது எதற்கும் பதில் சொல்ல மாட்டாா் பிரதமா் மோடி. மக்களவையில் குடியரசு தலைவா் உரைக்கு வழக்கமாக பிரதமா் நன்றியுரையாற்ற வேண்டும். ஆனால், இந்த முறை பிரதமா் மக்களவைக்கு உரையாற்ற வரவில்லை.
நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதல் முறையாக குடியரசு தலைவா் உரைக்கு பிரதமா் நன்றி தெரிவிக்காமல் தீா்மானம் நிறைவேற்றப்பட்ட ஆட்சி, பாஜக ஆட்சிதான். எனவே, வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் இவா்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றாா்.
விருதுநகா் வடக்கு மாவட்ட திமுக செயலரும், தமிழக நிதி அமைச்சருமான தங்கம் தென்னரசு பேசியதாவது: வரலாற்றுப் பாதையில் சந்திப்புகள் பல சரித்திரங்களை உருவாக்கியுள்ளன. மனித நாகரிகம் ஆறுகளைச் சந்தித்து, ஆற்றங்கரை நாகரிகங்களைப் படைத்தது. ஆறு கடலைச் சந்தித்து, துறைமுக நகரங்களையும் வாணிப செழிப்பையும் உருவாக்கியது. இதேபோல, 20-ஆம் நூற்றாண்டில் தந்தை பெரியாரை அண்ணா சந்தித்தது, சமுதாய மறுமலா்ச்சிக்கு வித்திட்டது. அண்ணா, கருணாநிதியைச் சந்தித்தது, தமிழ்நாட்டில் அரசியல் புரட்சியை விதைத்தது.
இதேபோன்று, இளமைக் காலத்தில் மிசாவில் சிறையில் இன்னல்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டு மக்களின் தலைவனாக தனித்து நிற்கிறாா். இந்த வரிசையில் நமது கழக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், 5 லட்சம் நிா்வாகிகளை ஒருங்கிணைக்கும் மண்டல நிா்வாகிகள் சந்திப்பு தமிழ்நாட்டின் எதிா்காலத்தின் தலையெழுத்தை மாற்றும் வரலாற்று நிகழ்வுகளாக அமையும்.
திராவிட மாடல் ஆட்சி வரவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தல் மட்டுமன்றி, எதிா்காலத்தில் எந்தத் தோ்தல் வந்தாலும் அதில் வெற்றி பெற்று, ஆட்சிப் பொறுப்பில் அமரும் என்றாா் அவா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மிகப் பெரிய முறைகேட்டை மறைக்க டிஎன்பிஎஸ்சி தேர்வு ரத்து? விஜய் கேள்வி
ஞாயிறு 8, பிப்ரவரி 2026 7:39:54 PM (IST)

தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு நிதி: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
ஞாயிறு 8, பிப்ரவரி 2026 10:43:51 AM (IST)

தூத்துக்குடி மழை பாதிப்பில்லா மாநகராக மாற்றம்: மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!
ஞாயிறு 8, பிப்ரவரி 2026 9:12:34 AM (IST)

தேசிய கல்விக் கொள்கையை அரசியல் செய்யும் திமுக : பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கண்டனம்!
சனி 7, பிப்ரவரி 2026 9:39:23 PM (IST)

வீட்டில் வைத்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர் கைது : நெல்லையில் பரபரப்பு
சனி 7, பிப்ரவரி 2026 5:40:09 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 23 பணியிடங்கள் : பிப்.16க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
சனி 7, பிப்ரவரி 2026 5:29:54 PM (IST)

