» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகம் பறிமுதல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

வியாழன் 8, ஜனவரி 2026 11:04:13 AM (IST)

திருப்பரங்குன்ற தீபம் விவகாரத்தில் நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகத்தை பறிமுதல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், பதிப்பகத்துக்கு எதிராக, தாமாக முன் வந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்துள்ளது.

வேலுார் மாவட்டம், அணைக்கட்டு பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் பி.நவீன் பிரசாத் என்பவர் தாக்கல் செய்த மனு: சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.,வில், இன்று 49வது புத்தக காட்சி நடக்கிறது. இந்த புத்தக காட்சியில், திருப்பரங்குன்றம் விவகாரத்தில், தீபத்துாணில் தீபம் ஏற்ற உத்தரவு பிறப்பித்த, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகம், விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

இப்புத்தகத்தை, கீழைக்காற்று பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இப்புத்தகம், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிராக எழுதப் பட்டுள்ளது. இடையூறு புத்தகத்தின் தலைப்பே, அவதுாறாக, இழிவாக மற்றும் தரக்குறைவாக உள்ளது. புத்தகத்தின் அட்டை படமானது, நீதித்துறையின் அதிகாரத்தை அவமதிக்கும் மற்றும் பலவீனப்படுத்தும் தெளிவான நோக்கத்துடன், நீதிபதியை கேலி செய்வதுடன், வெறுக்கத்தக்க முறையில் சித்தரிக்கிறது. 

புத்தகத்தின் தலைப்பிலும், அதன் உள்ளடக்கத்திலும், பயன்படுத்தப்பட்டு இருக்கும் மொழி, இயல்பாகவே அவமதிக்கும் தன்மையுடன் உள்ளது. நீதிமன்றத்தின் கண்ணியத்தை குறைக்கும் நோக்கத்துடன், புத்தகம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இப்புத்தகத்தை, பொது மக்கள் மத்தியில் விற்பனை செய்ய அனுமதிப்பது, நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை சரி செய்ய முடியாத வகையில் சிதைத்து, நீதி நிர்வாகத்திற்கு இடையூறு ஏற்படுத்தும். 

குறிப்பாக, நீதி நிர்வாகத்தில் தலையிடுவதை போல் ஆகிவிடும். புத்தகத்தை விற்கக் கூடாது என, அரசு அதிகாரிகளுக்கு, புகார் மனு அனுப்பியும், நடவடிக்கை இல்லை. எனவே, புத்தகத்தை பறிமுதல் செய்து, விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, ''தீர்ப்பு குறித்து கருத்துக்களை தெரியப்படுத்தலாம். ஆனால், அந்த நீதிபதியை களங்கப்படுத்தும் வகையில் பேசக்கூடாது. 

புத்தகத்தின் தலைப்பை பார்க்கும்போது, அது வெளிப்படையாக இழிவு படுத்தும் வகையிலும், அவதுாறானதாகவும் உள்ளது. குறிப்பாக, நீதிமன்றத்தை களங்கப்படுத்தி, நீதி அமைப்பின் மீதான, பொது மக்களின் நம்பிக்கையை சிதைக்க முற்படுகிறது. தற்போது உள்ள ஆவணங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம்,'' என்றார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, ''மிகவும் அவதுாறான, களங்கம் ஏற்படுத்தும் வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. 

இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகார் மீது, விசாரணை நடத்தியிருக்க வேண்டும். ''அதற்கும், இந்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டுமா; மிகவும் தீவிரமான இந்த விவகாரம் குறித்த புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. புத்தக காட்சியில் இந்த புத்தகத்தை விற்பனை செய்ய எப்படி அனுமதி வழங்கப்பட்டது,'' என, தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினார். 

மேலும், அறிவுசார் தளமான புத்தக காட்சியில், இது மாதிரியான செயல்களுக்கு அனுமதி வழங்க முடியாது என, தலைமை நீதிபதி தெரிவித்தார். தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ''புத்தக காட்சி, இன்று முதல்வரால் துவக்கி வைக்கப்பட உள்ளது. இது போன்ற செயல்களை முதல்வரும் விரும்பவில்லை. புத்தக காட்சி அரசால் நடத்தப்படவில்லை. பதிப்பாளர்களால் நடத்தப்படுகிறது. புத்தக காட்சியில், இந்த புத்தகம் விற்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்படும். அதற்கு ஏற்ப, காவல் துறையால் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். 

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இன்று நடக்க உள்ள புத்தக காட்சி துவக்க விழாவில் வெளியிடப்பட உள்ள புத்தகத்தின் முகப்பு, இடம்பெற்ற கேலிச்சித்திரம் மற்றும் சொற்கள் ஆகியவற்றை பார்க்கும்போது, மிகவும் இழிவானவை மட்டுமல்லாமல், அவதுாறானவையாகவும் உள்ளன. புத்தகத்தின் பட விளக்கம், இந்த நீதிமன்றத்தின் பதவியில் இருக்கும், ஒரு நீதிபதியின் முகத்தையும், பெயரையும் நேரடியாகச் சுட்டிக்காட்டுகிறது. இது, மிகவும் இழிவான தாகவும், அவதுாறானதாகவும் உள்ளது. அதுமட்டு மின்றி, அனைத்து வரம்புகளையும் மீறுவதாக அமைந்துள்ளது. எனவே, புத்தகத்தை பறிமுதல் செய்ய வேண்டும். புத்தகம் விற்பனைக்கு வரவில்லை என்பதை, காவல்துறை உறுதி செய்ய வேண்டும். புத்தக பதிப்பாளர் மீது, தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுக்கிறோம். இதுதொடர்பாக, மூன்று வாரங்களில், பதிப்பகம் பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory