» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம்: டிச.20ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!

செவ்வாய் 9, டிசம்பர் 2025 4:07:19 PM (IST)



திருநெல்வேலி மாவட்டத்தில் பொருநை அருங்காட்சியக பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு ஆகியோர், விரைவில் பணிகள் நிறைவுற்று வருகிற 20ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக தெரிவித்தனர். 

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், குலவணிகர்கிராமம் பொருநை அருங்காட்சியக பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, நிதி மற்றும் சுற்றுசூழல் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் மாவட்ட ஆட்சியர் மரு.இரா.சுகுமார், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல்வஹாப், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா, திருநெல்வேலி மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, தொல்லியல் துறை இயக்குநர் து.யத்தீஷ் குமார் ஆகியோர் முன்னிலையில் இன்று (09.12.2025) பார்வையிட்டு, ஆய்வு செய்தார்கள்.

பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், "தமிழகத்தின் தொன்மையான வரலாற்றினை உலகரிய செய்யும் பொருட்டு கொற்கை, ஆதிச்சநல்லூர், சிவகளை ஆகிய இடங்களில் கிடைத்த தொல்பொருட்களை காட்சிப்படுத்திட திருநெல்வேலி மாவட்டம் குலவணிகர்புரம் கிராமத்தில் அருங்காட்சியகம் அமைக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் 18.05.2023 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது.

பொதுப்பணித்துறை சார்பில் ரூ.56.60 கோடி மதிப்பீட்டில் 13 ஏக்கர் நிலத்தில் 54 ஆயிரம் சதுர அடியில் ஆதிச்சநல்லூர் தொகுதி A மற்றும் B கட்டடம் 16,486 சதுர அடியில் தரைதளம் மற்றும் முதல் தளமும், சிவகளை கட்டடம் 8,991 சதுர அடியில் தரைதளம், முதல் தளமும், கொற்கை தொகுதி A மற்றும் B கட்டடம் 17,429 சதுர அடி தரைதளம், முதல் தளத்துடன் கட்டுமானப் பணிகள் முடிவுற்றுள்ளன.

மேலும், ஒவ்வொரு கட்டடத்திற்கு இணைப்பு சாலை அமைக்கவும், அழகுநிறைந்த குளமும், குளத்தின் மீது பாலம் அமைக்கவும், சுற்றுச்சுவர், பூங்காக்கள், வண்ண விளக்குகள், நீறுற்று, சுற்றுச்சூழல் திறந்தவெளி திரையரங்கு அமைப்புகள், திறந்தவெளி கூட்டரங்கம் போன்ற பல்வேறு பணிகள் மக்களை கவரும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வயதானவர்கள் சென்று பார்க்கும் வகையில் பேட்டரியால் இயங்கும் வாகன வசதி செய்துதரப்படவுள்ளது. 

தொல்லியல் துறையின் மூலம் ரூ.6 கோடி மதிப்பில் காட்சிப்படுத்தும் கூடங்கள் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, காட்சிப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பொருநை அருங்காட்சியகம் பொதுமக்களின் பார்வைக்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் வரும் 20.12.2025 அன்று திறந்து வைத்து பார்வையிடவுள்ளார்.

தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு, முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்  என்று தெரிவித்தனர். மேலும், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறவுள்ள திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தினை  பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் மு.துரை, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன், கண்காணிப்பு பொறியாளர் ஸ்ரீதரன், செயற்பொறியாளர் ஜோசப் ரன்சட் பெரஸ், ஸ்ரீராம், முன்னாள் சட்டமன்றப் பேரவைத்தலைவர் இரா.ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சா.ஞானதிரவியம், முக்கிய பிரமுகர்கள் கிரகாம்பெல், அலெக்ஸ் அப்பாவு மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory