» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தீயணைப்பு அதிகாரியை சிக்க வைக்க சதித்திட்டம்: லஞ்ச பணம் விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 8:16:45 AM (IST)
நெல்லை தீயணைப்பு மண்டல அலுவலகத்தில் லஞ்ச பணம் சிக்கிய விவகாரத்தில் மேலும் ஒரு தீயணைப்பு வீரர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. ‘பி' காலனியில் தீயணைப்புத்துறை நெல்லை மண்டல துணை இயக்குனர் அலுவலகம் உள்ளது. இங்கு துணை இயக்குனராக சரவணபாபு பணிபுரிந்து வருகிறார். இந்த அலுவலகத்தில், கடந்த நவம்பர் மாதம் 18-ஆம் தேதி, லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அவரது அறையில் இருந்து கவர்களில் வைக்கப்பட்டிருந்த ரூ.2.25 லட்சம் லஞ்ச பணம் கைப்பற்றப்பட்டது. மேலும் அவரது உதவியாளர் செந்தில்குமார் அறையில் இருந்தும் ரூ.27,400 கைப்பற்றப்பட்டது. இதையடுத்து துணை இயக்குனர் சரவணபாபு மற்றும் செந்தில்குமார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் அதிரடி திருப்பமாக லஞ்ச பணம் கைப்பற்றப்பட்டதற்கு முந்தைய தினம் நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் துணை இயக்குனர் அலுவலகத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். அவர் அங்கு பணத்தை வைத்துவிட்டு செல்லும் காட்சிகள் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
எனவே தன்னை யாரோ சிக்க வைப்பதற்காக, வேண்டுமென்றே பணத்தை வைத்துள்ளதாக கூறி, இந்த வீடியோ ஆதாரத்துடன் துணை இயக்குனர் சரவணபாபு, நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹடிமணியிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் மாநகர துணை கமிஷனர் வினோத் சந்தாராம் மேற்பார்வையில், பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
தீயணைப்புத்துறை அலுவலகத்தில் பணத்தை வைத்துச்சென்ற சம்பவத்தின் பின்னணியில், தூத்துக்குடி மாவட்ட தீயணைப்பு அலுவலக தீயணைப்பு வீரர் ஆனந்த் (வயது 30) மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த உறவினர் முத்துச்சுடலை ஆகிய இருவரையும் கடந்த 26-ஆம் தேதி பெருமாள்புரம் போலீசார் கைது செய்தனர். அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில், மேலப்பாளையத்தை சேர்ந்த விஜய் என்பவரை மும்பையில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
தீயணைப்பு துணை இயக்குனரை சிக்க வைப்பதில் விஜய் கூலிப்படையாக செயல்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அதனடிப்படையில் இந்த வழக்கு விசாரணையில் தோண்ட தோண்ட திடுக்கிடும் தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. இந்த விவகாரத்தில் நெல்லை டவுன் தீயணைப்பு நிலைய வீரர் மூர்த்தி என்பவருக்கும் தொடர்பு இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அவரை நேற்று அதிரடியாக கைது செய்தனர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் சென்னை அம்பத்தூரை சேர்ந்த தீயணைப்பு வீரர் முருகேசன் என்பவரும் போலீசாரிடம் நேற்று சிக்கினார். இந்த விவகாரத்தின் பின்னணியில் மாவட்ட தீயணைப்பு அதிகாரி ஒருவர் மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையில் பணிபுரியும் முக்கிய அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
குறிப்பாக லஞ்ச ஒழிப்பு துறை சூப்பிரண்டு அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கும், திருப்பூரில் பணிபுரியும் அதிகாரி ஒருவருக்கும் இடையே நடந்த செல்போன் தகவல் தொடர்பு விவரங்கள் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் அதிகாரி, அவருடைய உறவினரான பதிவுத்துறை முன்னாள் அலுவலர் ஆகியோருடன் நெல்லை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் இணைந்து செயல்பட்டு வந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சரவணபாபு குமரி மாவட்டத்தில் பணிபுரிந்தபோது, போலி தீயணைப்பு சான்று வழங்கிய முறைகேடுகளை கண்டுபிடித்து வெளியே கொண்டு வந்தார். இதில் பாதிக்கப்பட்ட நபர்கள், ஊழல் அதிகாரிகளுடன் ஒன்று சேர்ந்து அவரை பழிவாங்கும் நோக்கில் இவ்வாறு சதித்திட்டம் தீட்டி இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே, இந்த விவகாரத்தில் மேலும் பல முக்கிய அதிகாரிகளும் சிக்குகிறார்கள். நெல்லை தீயணைப்பு மண்டல அலுவலகத்தில் லஞ்ச பணம் சிக்கிய விவகாரம் சூடுபிடித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஈரோட்டில் தவெக தலைவா் விஜய் தேர்தல் பிரசார கூட்டத்துக்கு அனுமதி
ஞாயிறு 14, டிசம்பர் 2025 7:18:40 PM (IST)

தென்காசியில் மக்கள் நீதிமன்றம்: ரூ. 5 கோடி மதிப்புள்ள வழக்குகளுக்கு தீர்வு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 11:07:49 AM (IST)

தமிழகத்தில் 2 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
சனி 13, டிசம்பர் 2025 5:50:12 PM (IST)

திருப்பரங்குன்றம் பிரச்சினைக்கு பாஜக, திமுக அரசுதான் காரணம் : சீமான் குற்றச்சாட்டு!
சனி 13, டிசம்பர் 2025 4:04:43 PM (IST)

தூத்துக்குடியில் ஸ்டால் இன் மால் விற்பனை கண்காட்சி : மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்
சனி 13, டிசம்பர் 2025 3:13:37 PM (IST)

பெருமாநிலங்களை பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு சாதனை : முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
சனி 13, டிசம்பர் 2025 12:53:04 PM (IST)


.gif)