» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தவெக - காங்கிரஸ் கூட்டணி? விஜய் உடன் ராகுலின் முக்கிய ஆலோசகர் திடீர் சந்திப்பு!

வெள்ளி 5, டிசம்பர் 2025 3:50:57 PM (IST)

ராகுல்காந்திக்கு நெருக்கமானவரும், தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரவீன் சக்கரவர்த்தி தவெக தலைவர் விஜய்யை சந்தித்து பேசியுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக களம் காண இருக்கிறது. விக்கிரவாண்டியில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் விஜய் பேசும்போதே, "எங்களுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு ஆட்சியிலும் பங்குதரப்படும்" என்று அறிவித்தார். அதாவது, அமைச்சரவையிலும் இடம் வழங்கப்படும் என்பதுதான் அது.

விஜய்யின் இந்த அறிவிப்பு, தமிழக அரசியலுக்கு புதிது. தமிழ்நாட்டில் இதுவரை ஆண்ட கட்சிகளான காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க. ஆகியவை கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்ததே இல்லை. தற்போது, தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி தி.மு.க. கூட்டணியிலேயே தொடர்கிறது. இந்த நிலையில், விஜய்யுடன் கூட்டணி அமைப்பது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சமீபத்தில் பேசியதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இதை மறுத்தார்.

இந்த பரபரப்புக்கு மத்தியில், தமிழக சட்டசபை தேர்தலில் கூட்டணி குறித்து பேச அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமை 5 பேர் கொண்ட குழுவை அமைத்தது. இந்த குழுவினரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்புக்கு பிறகு பேட்டியளித்த செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் கட்சி தி.மு.க. கூட்டணியில் தொடர்கிறது என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ராகுல்காந்தியின் நெருக்கம் காட்டும் முக்கிய நிர்வாகியும், தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரவீன் சக்கரவர்த்தி, தவெக தலைவர் விஜய்யை சந்தித்து பேசியிருக்கிறார். இதை ஒப்புக்கொண்ட அவர், அரசியல் நிலவரம் குறித்து பேசியதாகவும், மேற்கொண்டு எதையும் இப்போதைக்கு கூற முடியாது என்றும் கூறிவிட்டார்.

இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே, விஜய்யுடன் ராகுல் காந்தி பேசியதாக தகவல் வெளியான நிலையில், இப்போது மற்றொரு நிர்வாகியான பிரவீன் சக்கரவர்த்தியும் சந்தித்து பேசியிருப்பது, சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அணி மாறுகிறதா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory