» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அதிகாரியை சிக்கவைக்க பணத்தை மறைத்து வைத்த தூத்துக்குடி தீயணைப்பு வீரர் கைது!

வியாழன் 27, நவம்பர் 2025 4:31:33 PM (IST)

நெல்லையில், தீயணைப்பு துணை இயக்குனர் அலுவலகத்தில் ரூ.2லட்சம் பணத்தை வைத்து அதிகாரியை லஞ்ச ஒழிப்பு வழக்கில் சிக்க வைக்க முயன்ற சம்பவத்தில் தூத்துக்குடி தீயணைப்பு வீரர் உட்பட 2பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

திருநெல்வேலி மண்டல தீயணைப்பு துணை இயக்குனராக சரவண பாபு பணியாற்றுகிறார். இவரது அலுவலகத்தில் நவம்பர் 18ம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அவரது இருக்கைக்கு எதிரே உள்ள அலமாரியில் இருந்து ரூ.2 லட்சத்திற்கும் மேலான ரொக்க பணத்தை 6 கவர்களிலிருந்து எடுத்துச் சென்றனர்.

கணக்கில் காட்டாத பணம் என லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவத்துக்கு முன்தினம், தீயணைப்பு துணை இயக்குனர் அலுவலகத்திற்கு எதிர்வீட்டில் உள்ள கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது 17ம் தேதி அதிகாலை 12:10 மணிக்கு கைகளில் கிளவுஸ், முகமூடி அணிந்து வந்த நபர் கவர்களில் பணத்தை கொண்டு வந்து அலுவலகத்தில் மறைத்து வைத்து செல்வது உறுதியானது.

இது குறித்து துணை இயக்குனர் சரவணபாபு போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணியிடம் புகார் தெரிவித்தார். அதன்பேரில் பெருமாள்புரம் போலீசார் விசாரித்தனர். பெரிய நெட்ஒர்க் இதில் தொடர்புடையதாக தூத்துக்குடி தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றும் தீயணைப்பு வீரர் ஆனந்த் (30), அவரது அக்காள் மகன் முத்து சுடலை (29) ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

இந்த திட்டத்தின் பின்னணியில் தீயணைப்பு துறை உயர்அதிகாரிகள், லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் அதிகாரிகளும் உள்ளனர். இந்த வழக்கை விசாரிக்கும் ஒரு அதிகாரி கூறுகையில், 2021ல் சரவண பாபு நாகர்கோவிலில் தீயணைப்பு அதிகாரியாக பணியாற்றும்போது, இரண்டு பெரிய நிறுவனங்கள் தீயணைப்பு துறையின் தடையில்லா சான்றினை போலியாக வைத்திருந்ததை கண்டுபிடித்தார்.

இதையடுத்து தமிழகம் முழுவதும் இவ்வாறு போலியான தீயணைப்பு தடையின்மை சான்றிதழ்கள் வழங்கிய சென்னை தீயணைப்பு வீரர் கைது செய்யப்பட்டார்.இந்த சம்பவத்திற்கு பிறகு துணை இயக்குனராக பதவி உயர்வு பெற்ற சரவண பாபுவிற்கு எதிராக, பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் ஒரு குழுவினராக சேர்ந்து கொண்டு அவரை பழிவாங்க திட்டமிட்டனர். இந்தக் குழுவில் தீயணைப்பு துறையின் தற்போதைய சென்னை உயரதிகாரி முதற்கொண்டு சாதாரண வீரர்கள் வரை உள்ளனர். இவர்களுடன் லஞ்ச ஒழிப்பு போலீசில் பணியாற்றும் சிலருக்கும் தொடர்பு உள்ளது.

சரவண பாபு அலுவலகத்தில் அதிகாலையில் பணத்தை வைத்து சென்ற நபர் இன்னும் கைதாகவில்லை. இதே உயர் அதிகாரிகளின் கும்பலால் மேலும் பல தீயணைப்பு அதிகாரிகள் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் போலியான புகார்களில் சிக்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நெட்ஒர்க் முழுவதும் விசாரித்து அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory