» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் வீடுகளுக்கான மின்சார கட்டணம் திடீர் உயர்வு? அதிகாரிகள் விளக்கம்

வெள்ளி 24, அக்டோபர் 2025 8:34:53 AM (IST)

தமிழகத்தில் வீடுகளுக்கான மின்சார கட்டண உயர்வு குறித்து எந்த உத்தரவும் தற்போது பிறப்பிக்கவில்லை என்று  அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

மின்சார வாரியங்களின் நிதி நிலைமை சீராக இருப்பதற்காக அந்தந்த மாநிலங்களின் ஒழுங்குமுறை ஆணையம் அவ்வப்போது மின்சார கட்டணத்தில் மாற்றம் செய்து வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்கட்டண உயர்வை ஆண்டுதோறும் நுகர்வோர் விலை குறியீட்டு அடிப்படையில் மின்நுகர்வோர்களுக்கான மின்சார கட்டணத்தை மாற்றி அமைத்து உத்தரவு வெளியிடுகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் வீடுகளுக்கான மின்சார கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டதாக பொதுமக்கள் பரபரப்பு புகார் தெரிவித்தனர். இதுகுறித்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் சிலர் தங்கள் வீடுகளில் இந்த மாத மின்சார கட்டணம் அதிகரித்து இருப்பதாக மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் கூறி வருகின்றனர். அதுவும் தீபாவளி பண்டிகை காலம் என்பதால் செலவு மிகுந்த மாதத்தில் மின்சார கட்டண உயர்வு என்பது தங்களை அதிகம் பாதித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் மின்சார கட்டணம் கணக்கீடு செய்ய வருபவர்கள் சரியான நேரத்தில் வந்து கணக்கீடு செய்யாததால் 500 யூனிட்டுக்கு கீழே பயன்பாடு உள்ளவர்களுக்கு அதனை கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. 500 யூனிட்டுக்கு மேல் பயன்பாடு இருந்தால் மின்சார கட்டணம் உயர்கிறது. இதனை முறைப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து மின்வாரிய உயர் அதிகாரிகள் கூறும்போது, ‘மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்கட்டணம் தொடர்பான உத்தரவுகளை பிறப்பிக்கும் போதும், அதை நடைமுறைப்படுத்தும்போதும், வீட்டு நுகர்வு மின்சாரத்திற்கான கட்டணத்தை உயர்த்தக்கூடாது. அதேநேரம், அனைவருக்கும் வழங்கப்படும் இலவச மின்சார சலுகையும் தொடர வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் கட்டண உயர்வு குறித்து எந்த உத்தரவும் தற்போது பிறப்பிக்கவில்லை. எனவே பொதுமக்கள் கூறுவதுபோல் மின்சார கட்டணம் உயரவில்லை.

ஆனால் பல இடங்களில் மின்சார கட்டணம் கணக்கீடு செய்யும் பணி முறையாக நடக்கவில்லை, பிரச்சினை இருப்பதாக பொதுமக்களிடம் இருந்து புகார் வருகிறது. காலம் கடந்து மின்சார கணக்கீடு செய்யும்போது மின்சார கட்டணமும் உயர வாய்ப்பு உள்ளது. 

குறிப்பாக 60 நாட்களுக்கு 400 யூனிட் வரை ரூ.4.95 கட்டணமும், 401 முதல் 500 யூனிட் வரை ரூ.6.65-ம், 501 யூனிட் முதல் 600 யூனிட் வரை ரூ.8.80-ம், 601 யூனிட் முதல் 800 யூனிட் வரை ரூ.9.95-ம், 801 யூனிட் முதல் 1,000 யூனிட் வரை ரூ.11.05-ம், 1,000 யூனிட்டுக்கு மேல் ரூ.12.15 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வரும் காலங்களில் மின்சார கட்டணம் கணக்கீடு முறையாக எடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory