» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தி.மு.க.வினர் கூடும்போது கொள்கைப் பட்டாளமாகக் கூடுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை!
சனி 13, செப்டம்பர் 2025 12:25:23 PM (IST)
தி.மு.க.வினர் கூடும்போது கொள்கைப் பட்டாளமாகக் கூடுவோம் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது; "பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்தநாள் - தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் – திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட நாள் - இந்த மூன்றும் நிகழ்ந்தது செப்டம்பர் மாதம் என்பதால் முப்பெரும் விழாவாக -உடன்பிறப்புகளின் திருவிழாவாகக் கொண்டாடும் வழக்கத்தைத் தொடங்கியவர் கலைஞர் கருணாநிதி.
கொள்கை முழக்கமிடும் கருத்தரங்குகள் – பட்டிமன்றங்கள் - கவியரங்குகள்-பொதுக்கூட்டம் என மூன்று நாள் திருவிழாவாக முப்பெரும் விழாவை முன்னெடுத்து, பெரியார் – அண்ணா – பாவேந்தர் - கலைஞர் பெயர்களில் கழகத்தின் மூத்த முன்னோடிகளுக்கு விருதுகள் வழங்கும் வழக்கத்தையும் முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கினார்.
அப்போதைய முப்பெரும் விழாக்களின்போது, இளைஞரணிச் செயலாளராக வெண்சீருடை அணிந்த பட்டாளத்துடன் பேரணியை வழிநடத்தியவன்தான், உங்களில் ஒருவனான இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். நம் கழகத்தின் தலைமை நிலையமாக - உடன்பிறப்புகளின் தலைமைச் செயலகமாகத் திகழும் அண்ணா அறிவாலயம் திறக்கப்பட்டது 1987-ம் ஆண்டு நடைபெற்ற முப்பெரும் விழாவின்போதுதான்.
சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது 1990-ம் ஆண்டு செப்டம்பரில் முப்பெரும் விழாவுடன் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள், மண்டல் கமிஷன் வெற்றிவிழா ஆகியவற்றையும் இணைத்து ஐம்பெரும் விழாவாக நடத்தியதும், தேசிய முன்னணியின் தலைவர்கள் மேடையிலிருந்து பார்வையிட, சென்னை அண்ணாசாலை குலுங்கிட இளைஞரணியின் பேரணியை வழிநடத்தியதும் இன்னமும் என் மனதில் நிழலாடுகின்றன.
நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞரை இயற்கை சதி செய்து நம்மிடமிருந்து பிரித்த பிறகு, கழகத்தின் தலைமைப் பொறுப்பை உங்களில் ஒருவனான நான் ஏற்றுக்கொண்டது முதல், சென்னைக்கு வெளியே ஏதேனும் ஒரு மாவட்டத்தில் முப்பெரும் விழாவைக் கொண்டாடி வருகிறோம். அந்த வகையில், இந்த ஆண்டு 2025 செப்டம்பர் 17 அன்று கரூர் மாநகரின் புறவழிச்சாலையில் கோடாங்கிப்பட்டி எனும் இடத்தில் முப்பெரும் விழா எனும் கொள்கைத் திருவிழா நடைபெற இருக்கிறது.
செப்டம்பர் 17 மாலை 5 மணியளவில் தொடங்கும் முப்பெரும் விழாவுக்குக் கழகத்தின் பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார். கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி, கழக முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, கழகத் துணைப் பொதுச்செயலாளர்கள் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.
இந்த லட்சிய விழாவில் பெரியார் விருது கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர், கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கவிஞர் கனிமொழி கருணாநிதி எம்.பி.க்கு வழங்கப்பட விருக்கிறது. அண்ணா விருது பாளையங்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவர் சுப.சீதாராமனுக்கு வழங்கப்படவிருக்கிறது. கலைஞர் விருது, அண்ணாநகர் பகுதி முன்னாள் செயலாளர், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் சோ.மா.ராமச்சந்திரனுக்கு வழங்கப்படுகிறது.
பாவேந்தர் பாரதிதாசன் விருது, தலைமைச் செயற்குழு உறுப்பினர் குளித்தலை சிவராமனுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், எதிர்பாராதவிதமாக அவர் நம்மை விட்டுப் பிரிந்து துயரத்தில் ஆழ்த்தினாலும், என்றும் நினைவில் வாழும் அந்த மாவீரரின் தியாகத்தைப் போற்றி அவரது குடும்பத்தாரிடம் வழங்கப்படவிருக்கிறது. பேராசிரியர் விருது கழக ஆதிதிராவிடர் நலக்குழுத் தலைவர், சட்டப்பேரவை முன்னாள் கொறடா மருதூர் ராமலிங்கத்துக்கு வழங்கப்படுகிறது. உங்களில் ஒருவனான என் பெயரிலான மு.க.ஸ்டாலின் விருது ஒருங்கிணைந்த கோவை மாவட்ட முன்னாள் செயலாளர், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் ந.பழனிசாமிக்கு வழங்கப்படுகிறது.
முப்பெரும் விழா நிகழ்வுகளில் முத்தாய்ப்பாகத் தமிழ்நாட்டின் நான்கு மண்டலங்களில் ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர் ஆகியவற்றில் கழகப் பணியைச் சிறப்பாகச் செய்து வருபவர்களில் தலா ஒருவர் என்ற அடிப்படையில் நற்சான்றிதழும் பணமுடிப்பும் வழங்கப்படும். முரசொலி அறக்கட்டளை சார்பில், அண்ணன் முரசொலி செல்வம் பெயரிலான முதல் விருது மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வனுக்கு வழங்கப்படுகிறது. இந்த விருதுகளை வழங்கிச் சிறப்புரை ஆற்றும்படி தலைமைக் கழகம் உங்களில் ஒருவனான என்னைப் பணித்துள்ளது.
நான் எப்போதும் விரும்புவது ஓய்வில்லாக் கழகப் பணிதான். உடன்பிறப்புகளான உங்களிடம் எதிர்பார்ப்பதும் அத்தகைய பணிகளைத்தான். கரூரில் செப்டம்பர் 17-ம் நாள் நடைபெறவிருக்கும் முப்பெரும் விழாவில் அலைகடலென ஆர்ப்பரித்து உடன்பிறப்புகளாகிய நீங்கள் கூடுவீர்கள் என்பதும், உங்கள் முகம் கண்டு நான் உற்சாகம் பெறுவேன் என்பதும் உறுதியானது. அதுபோலவே செப்டம்பர் 15 பேரறிஞர் பெருந்தகை அண்ணா பிறந்தநாளில்,
- ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்துள்ள 1 கோடிக் குடும்பத்தினரும் சேர்ந்து, "தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்!" என உறுதி ஏற்கிறோம்!
- நான், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விகிதாசாரத்தைக் குறைக்கும் நியாயமற்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராகப் போராடுவேன்; தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.
- நான், வாக்காளர் பட்டியல் மோசடி மூலம் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் #SIR-க்கு எதிராக நிற்பேன்; தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.
- நான், நீட் மற்றும் இளைஞர்களை முடக்கும் எந்தவொரு திட்டத்தையும் எதிர்த்து நிற்பேன், நம் மாணவர்களுக்கு உரிய கல்வி நிதிக்காகப் போராடுவேன்; ஒருபோதும் தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.
- நான், தமிழ் மொழி, பண்பாடு மற்றும் பெருமைக்கு (நன்மதிப்பிற்கு) எதிரான எந்தவொரு பாகுபாட்டையும் எதிர்த்துப் போராடுவேன். எதற்காகவும் தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.
- நான், ‘பெண்கள் - விவசாயிகள் - மீனவர்கள் - நெசவாளர்கள் - தொழிலாளர்கள்’ என ஒவ்வொரு உழைக்கும் வர்க்கத்தின் நலன்களையும் பாதுகாக்கத் தேவையான நிதிக்காகப் போராடுவேன். தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.
என்று ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் மாநிலம் முழுவதுமுள்ள 68 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குச்சாவடிகளில் உறுப்பினராக சேர்ந்துள்ள ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பத்தினரை, அந்தந்த வாக்குச்சாவடிக்குட்பட்ட பகுதியில் ஒன்றுதிரட்டி, உறுதிமொழியேற்றிட வேண்டும்.
‘ஏ..தாழ்ந்த தமிழகமே’ என்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அன்றய தமிழ்நாட்டின் நிலையை எடுத்துக்காட்டிச் சொற்பொழிவாற்றினார் பேரறிஞர் பெருந்தகை அண்ணா. அதன்பின், அவரே இந்த மாநிலத்தின் முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்று, தமிழ்நாடு என்று பெயர் சூட்டி, இருமொழிக் கொள்கையை நிலைநாட்டி, சுயமரியாதைத் திருமணச் சட்டத்தை நிறைவேற்றி, இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டை நடத்தி தமிழரின் மானத்தையும் தமிழ்நாட்டின் பெருமையையும் மீட்டார்.
அவரைத் தொடர்ந்து முதல்-அமைச்சரான நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் 5 முறை தமிழ்நாட்டை ஆட்சி செய்து, இன்று நாம் காணும் நவீனத் தமிழ்நாட்டைக் கட்டமைத்துத் தந்தார். இடையில் ஒரு சில முறை தமிழ்நாட்டு அரசியலில் விபத்து ஏற்பட்டு, ஆட்சி மாற்றத்தினால் மாநிலத்தின் வளர்ச்சி படுபாதாளத்திற்குச் சென்ற நிலையில், கடந்த 4 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு இலக்குகளில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது.
மத்திய பா.ஜ.க அரசின் வஞ்சகத்தாலும், அதனிடம் அடிமையாக இருக்கின்ற அ.தி.மு.க.வின் துரோகத்தாலும் நாம் இழந்தவற்றை மீட்கும் முயற்சியில் கடந்த நான்காண்டுகளில் பெருமளவு முன்னேறியுள்ளோம். பொருளாதாரத்தில் இரட்டை இலக்கத்திலான வளர்ச்சி, பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியில் உயர்ந்த நிலை, மருத்துவத்துறையில் மக்களின் நலன் காக்கும் சிறந்த கட்டமைப்பு, இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகளைக் கொண்ட மாநிலம், அதிகளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்குகிற மாநிலம், பெண்களின் முன்னேற்றத்திற்கும் தற்சார்பு நிலைக்கும் வழிவகுக்கும் மாநிலம் என்று ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்களே தமிழ்நாட்டின் சாதனைகளை எடுத்துச் சொல்லும் அளவுக்குத் திராவிட மாடல் அரசு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
அண்மையில் ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்குச் சென்று தமிழ்நாட்டுக்கான தொழில் முதலீடுகளை ஈர்த்த நிலையில், அங்கு வாழும் தமிழர்கள் நம் மாநிலத்தின் நிலைகண்டு பெருமிதம் கொள்வதாகத் தெரிவித்தனர். உலகப்புகழ் பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டுக் கருத்தரங்கில் தந்தை பெரியாரின் உருவப்படத்தை அவரது கொள்கை வாரிசாகத் திறந்து வைக்கும் வாய்ப்பு கிடைத்தபோது நம் ஆட்சியின் சாதனைகள் யாவும் பெரியார் – அண்ணா - கலைஞர் ஆகியோரின் வழித்தடத்தில் தொடர்வதை உணர்ந்தேன். திராவிடத்தை உலக நாடுகள் அறிந்துகொண்டு ஆய்வு செய்கின்ற காலத்தில் நாம் இருக்கிறோம்.
உலகம் போற்றும் திராவிடத்தின் பெருமை தொடர்ந்திட, தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி நீடித்து நிலைத்திட, ஏழாவது முறையாக கழக ஆட்சி மலர்ந்திட கரூரில் நடைபெறும் முப்பெரும் விழா வெற்றிப்பாதையாக அமையட்டும். கொள்கையில்லாக் கூட்டத்தைச் சேர்த்து, கூக்குரலிட்டு, கும்மாளம் போட்டு, பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் இயக்கமல்ல தி.மு.கழகம். நாம் கூடும்போது கொள்கைப் பட்டாளமாகக் கூடுவோம். கூட்டம் முடிந்து லட்சிய வீரர்களாகப் புறப்படுவோம்.
பேரறிஞர் அண்ணா போதித்த கட்டுப்பாட்டை முத்தமிழறிஞர் கலைஞர் கட்டிக்காத்து, இன்று உங்களில் ஒருவனான என் தலைமையிலும் அதே கட்டுப்பாட்டுடன் கொள்கைக் கூட்டமாக உடன்பிறப்புகள் திரள்வதை கரூரிலும் காண இருக்கிறேன். லட்சிய வீரர்களாக 2026 தேர்தல் களத்தில் வெற்றி வாகை சூடுவதற்கான முன்னோட்ட அணிவகுப்புதான் இந்த முப்பெரும் விழா.
இருவண்ணக் கொடியேந்தி கொள்கைக் குடும்பமாக அணிதிரள்வீர்! லட்சியத்தை நெஞ்சில் ஏந்தி, பாதுகாப்பாகத் திரும்பிச் செல்வீர். பெரியார் – அண்ணா - கலைஞர் புகழ் நிலைக்கட்டும்! கழகத்தின் வெற்றிச் சரித்திரம் தொடரட்டும்!” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நகைக்கடை நிறுவனம் ரூ.51.17 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு: உரிமையாளர் கைது
சனி 13, செப்டம்பர் 2025 12:02:22 PM (IST)

தவெக தலைவர் விஜய் திருச்சி வருகை: ஆயிரக் கணக்கான தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!
சனி 13, செப்டம்பர் 2025 11:01:55 AM (IST)

யூ18 கூடைப்பந்து போட்டியில் தமிழக அணி சாதனை: தூத்துக்குடி மாணவ, மாணவிகள் அசத்தல்
சனி 13, செப்டம்பர் 2025 8:52:16 AM (IST)

சுரங்கத் திட்டங்களுக்கு பொதுமக்கள் கருத்துக் கேட்க விலக்கு: முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:48:19 PM (IST)

விஜய் சுற்றுப் பயணம் நாளை தொடக்கம்: தவெக தொண்டர்களுக்கு நெறிமுறைகள் அறிவிப்பு!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:40:50 PM (IST)

வாரச்சந்தையில் பயங்கர தீ விபத்து: ரூ.9 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:35:42 PM (IST)
