» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சொத்துத்தகராறில் தந்தையை சரமாரியாக வெட்டிக் கொன்ற மகன்: நெல்லை அருகே பயங்கரம்!

புதன் 2, ஏப்ரல் 2025 8:17:04 AM (IST)

நெல்லை அருகே சொத்துத்தகராறில் தந்தையை  சரமாரியாக வெட்டிக்கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை அருகே சிவந்திபட்டி முத்தூர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் பூலையா (75), விவசாயி. இவருைடய மனைவி முத்துலட்சுமி (68). இவர்களுடைய மகன் கணேசன் (45). கொத்தனாரான இவர் மனைவி, குழந்தைகளுடன் முத்தூர் மெயின் ரோட்டில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.

பூலையா கடந்த சில நாட்களுக்கு முன்பு தனக்கு சொந்தமான நிலத்தை சுமார் ரூ.1 கோடியே 46 லட்சத்துக்கு விற்பனை செய்தார். இதில் சுமார் ரூ.46 லட்சத்தை மகன் கணேசனுக்கு வழங்கினார். கணேசன் தனது வீட்டின் அருகில் புதிதாக வீடு கட்டி வருகிறார். எனவே, சொத்தை விற்றதில் கிடைத்த பணத்தில் தனக்கு கூடுதலாக ரூ.10 லட்சம் தருமாறு தந்தையிடம் கேட்டார். 

அதன்படி, பூலையாவும் கூடுதலாக பணம் தருவதாக மகன் கணேசனிடம் கூறினார். ஆனால், அவர் கணேசனுக்கு கூடுதலாக பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. முத்தூர் பஸ் நிறுத்தம் அருகில் நேற்று மதியம் பூலையா வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கணேசன், தந்தை பூலையாவிடம் வீடு கட்டுவதற்காக கூடுதலாக ரூ.10 லட்சம் தருமாறு கேட்டார். 

இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றி தகராறாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த கணேசன் அரிவாளால் தந்தை என்றும் பாராமல் பூலையாவை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் தலை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதனைப் பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்து, சிவந்திபட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி மற்றும் போலீசார் விரைந்து சென்று, இறந்த பூலையாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கணேசனை பிடித்து கைது செய்தனர். இந்த கொடூர கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory