» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆளுநரால் தி.மு.க.வுக்கு ஆதரவும் அதிகரிக்கிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!!

வெள்ளி 24, ஜனவரி 2025 12:24:51 PM (IST)

தமிழக ஆளுநரால் தி.மு.க.வுக்கு ஆதரவும் அதிகரிக்கிறது. தயவு செய்து ஆளுநரை மாற்றி விடாதீர்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் 3000-க்கும் மேற்பட்ட நா.த.க உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். அப்போது உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: பிற கட்சி பொறுப்பில் பணியாற்றிய நீங்கள் தலைமை முறையாக இல்லை என்பதால் தி.மு.க.வில் இணைந்துள்ளீர்கள். பிற கட்சியிலிருந்த நீங்கள் தலைமை சரியில்லை என்பதை உணர்ந்து வர வேண்டிய கட்சிக்கு வந்து சேர்ந்துள்ளீர்கள். தி.மு.க. நேற்று முளைத்த காளான் அல்ல. 1949-ல் அண்ணா வடசென்னையில் கொட்டும் மழையில் தொடங்கிய இயக்கம்.

1949-ல் தி.மு.க. தொடங்கப்பட்ட நிலையில் 1957-ல் தான் தேர்தல் களத்தை சந்தித்த வளர்த்தெடுக்க இயக்கம் தி.மு.க. 1957-ல் 15 இடங்களில் தான் வெற்றி பெற்றோம். 1962-ல் 50-க்கும் மேற்பட்ட இடத்தில் வென்று எதிர்க்கட்சியானது தி.மு.க. ஆட்சியில் அமர்வதற்கு அல்ல; ஏழை - எளிய ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தொண்டாற்ற தான் தி.மு.க. தொடங்கப்பட்டது. நாம் தமிழர் கட்சி என்ற பெயரை சொல்லவே நாங்கள் தயாராக இல்லை. தமிழருக்காக பாடுபடும் கட்சி என்றால் அக்கட்சியின் பெயரை உச்சரிக்கலாம்.

தற்போது கட்சி ஆரம்பிப்பவர்கள் உடனேயே ஆட்சி அதிகாரத்தில் அமர்வதாக பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள். வேஷம் கட்டிக்கொண்டு திரிபவர்களை அடையாளப்படுத்துவதற்கு நான் விரும்பவில்லை. திராவிட மாடல் என்று சொன்னாலே சிலருக்கு ஆவேசம் வருகிறது.

மதத்தை மையமாக வைத்து பேசும் ஆளுநரால் தி.மு.க. மேலும் வளருகிறது. தி.மு.க.வுக்கு ஆதரவும் அதிகரிக்கிறது. தமிழக ஆளுநரை தயவு செய்து மாற்றி விடாதீர்கள் என்று பிரதமர், உள்துறை அமைச்சருக்கு கோரிக்கை வைக்கிறேன். 7-வது முறையாக நிச்சயமாக தி.மு.க. தான் ஆட்சி அமைக்கும் என உறுதியாக சொல்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory