» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வேட்பு மனு பரிசீலனை குழப்பங்கள்: ஈரோடு கிழக்கு தேர்தல் நடத்தும் அதிகாரி திடீர் மாற்றம்!:
புதன் 22, ஜனவரி 2025 11:57:21 AM (IST)
ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பு மனு பரிசீலனை குழப்பங்கள் எதிரொலியாக இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரி திடீரென மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப். 5ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலை பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., புறக்கணித்துவிட்டது. பா.ஜ., தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகளும் தேர்தலில் போட்டியிடவில்லை. தி.மு.க., வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி மட்மே பிரதான தேர்தல் களத்தில் உள்ளனர். மொத்தம் 46 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளன.
இந் நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரி மனீஷ் மாற்றப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக ஓசூர் மாநகராட்சி கமிஷனர் ஸ்ரீகாந்த் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். புதிய தேர்தல் அதிகாரியாக ஸ்ரீகாந்த் நேற்று (ஜன.21) இரவு பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் சென்னை தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் இணை தலைமை தேர்தல் அதிகாரியாக பணியாற்றியவர்.
முன்னதாக இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. முதலில் 47 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அவர்களில் பத்மாவதி என்ற பெண் சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அவருக்கு கர்நாடகாவில் ஓட்டு இருப்பதை சுட்டிக்காட்டிய மற்ற போட்டியாளர்கள் வேட்பு மனுவை ஏற்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
அதன் காரணமாக முதலில் 47 வேட்பு மனுக்கள் ஏற்பு என்று அறிவிக்கப்பட்டு பின்னர் 46 ஆக மாற்றி அறிவிக்கப்பட்டது. வேட்பு மனு பரிசீலனை, வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஆகிய குழப்பங்கள் எதிரொலியாக தேர்தல் அதிகாரி மனீஷ் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.