» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருச்செந்தூர் கோவிலில் குவியும் பக்தர்கள் : 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!

திங்கள் 13, ஜனவரி 2025 8:24:18 AM (IST)



பொங்கல் திருநாளை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள் 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பொங்கல் திருநாளை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். பெரும்பாலான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும், பால்குடம் எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுகின்றனர்.

பல்வேறு ஊர்களில் இருந்தும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் முருகப்பெருமானின் திருவுருவப் படத்தை வைத்தும், அவரது திருப்புகழை பாடியவாறும் பாதயாத்திரையாக வருகின்றனர். கோவில் வளாகம், கடற்கரையில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

நேற்று அதிகாலை முதலே கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கடலில் புனித நீராடும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இலவச பொது தரிசனம், ரூ.100 கட்டண தரிசனத்தில் 5 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து முருகப்பெருமானை தரிசித்தனர்.

பாதயாத்திரை பக்தர்கள் எளிதில் சாமி தரிசனம் செய்யும் வகையில், மூத்த குடிமக்கள் செல்லும் வழியில் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். கடலில் புனித நீராடும் பக்தர்கள் ஆழமான பகுதிக்கு செல்லாதவாறு தடுப்பு மிதவைகள் மிதக்கவிடப்பட்டன. கோவில் கடற்கரையில் சில பக்தர்கள் சுவாமி பூடம் அமைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். கோவிலில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் தைப்பொங்கல் தினத்தன்று தங்களது வீடுகளுக்கு சென்று பொங்கலிடுவார்கள்.

திருச்செந்தூரில் காணும் இடமெல்லாம் முருகபக்தர்களாகவே காட்சி அளித்ததால் விழாக்கோலம் பூண்டது. கோவில் வளாகம் மற்றும் தற்காலிக வாகன காப்பகங்களில் வாகனங்கள் நிரம்பியதால், பக்தர்கள் புறநகரில் சாலையோரம் வாகனங்களை நிறுத்தி சென்றனர். திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தைப்பொங்கல் திருநாளான நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. காலையில் தை மாதப்பிறப்பு உத்திராயண புண்ணிய காலத்தை முன்னிட்டு சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை, மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபாராதனையை தொடர்ந்து மற்றகால பூஜைகள் நடைபெறும்.

நாளை மறுநாள் (புதன்கிழமை) அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகத்தை தொடர்ந்து தீபாராதனை நடைபெறும். மதியம் 3 மணியளவில் சுவாமி அலைவாயுகந்த பெருமான் கனி பரிவேட்டைக்காக வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள வேட்டைவெளி மண்டபத்திற்கு செல்கிறார். அங்கு கனி பரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து சுவாமி ரதவீதிகள், சன்னதி தெரு வழியாக கோவிலை சேர்கிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory