» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சென்னை தலைமை செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூடுதல் போலீஸ் பாதுகாப்பு
திங்கள் 6, ஜனவரி 2025 10:02:51 AM (IST)
தமிழக சட்டப் பேரவைக் கூட்டம் இன்று தொடங்க உள்ள நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், தலைமைச் செயலகத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூரில் உள்ள காவல்துறை தலைமை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு அழைப்பு ஒன்று வந்தது. எதிர்முனையில் பேசிய நபர், ‘சென்னையில் உள்ள தலைமைச் செயலகம், டிஜிபி அலுவலகம் ஆகியவற்றுக்கு வெடிகுண்டு வைத்துள்ளேன். அது சற்றுநேரத்தில் வெடித்துச் சிதறும். முடிந்தால் தடுத்துப் பாருங்கள்’ எனக் கூறியுள்ளார்.
இதையடுத்து, 2 இடங்களுக்கும் வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் கருவிகளுடன் சென்றனர். தலைமைச் செயலகம் மற்றும் டிஜிபி அலுவலகம் முழுவதும் சோதனை மற்றும் ஆய்வு நடத்தப்பட்டது. சந்தேகப்படும்படியான பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், மிரட்டல் விடுத்தது ராஜபாளையத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (47) என்பது தெரியவந்தது. மேலும், மது போதையில் அவர் மிரட்டல் விடுத்தார் என்பதையறிந்த போலீஸார், அவரை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.