» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சிந்துவெளி புதிருக்கு விடை கண்டுபிடித்தால் ரூ.8½ கோடி பரிசு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
திங்கள் 6, ஜனவரி 2025 8:27:08 AM (IST)
சிந்துவெளி எழுத்துகளில் புதைந்திருக்கும் புதிருக்கு 100 ஆண்டுகளாக தீர்வு காணப் படவில்லை. இதற்கு விடை கண்டு பிடித்தால் ரூ.8½ கோடி பரிசு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பில் சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கம் தொடக்க விழா, சென்னையில் நேற்று நடந்தது. எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற விழாவிற்கு தலைமைச் செயலாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மு.பெ.சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, ‘சிந்துவெளி வரிவடிவங்களும், தமிழ்நாட்டுக் குறியீடுகளும் ஒரு வடிவவியல் ஆய்வு' என்ற நூலை வெளியிட்டும், சர் ஜான் ஹீபர்ட் மார்ஷல் சிலைக்கு அடிக்கல் நாட்டியும் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடந்து வரும் அகழ்வாராய்ச்சி உலக அளவில் அனைவர் கவனத்தையும் கவர்ந்திருக்கிறது.
தமிழ்நாடு தொல்லியல் துறையால் நடந்து வரும் அகழாய்வில் ஆதிச்சநல்லூருக்கு அருகே சிவகளை ஆய்வு மூலம் ‘தண் பொருநை' என்று அழைக்கப்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம், 3,200 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இதனை அறிவியல் வழிபட்ட ஆய்வுகள் அடிப்படையில் உறுதி செய்திருக்கிறோம்.
கீழடி அருங்காட்சியகம் போல், பொருநையிலும் ஒரு அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டு வருகிறது. 8 இடங்களில் நடந்து வரும் அகழ்வாராய்ச்சி பணிகளின் முடிவு உற்சாகத்தை தருகிறது. மண்பாண்ட குறியீடுகளில், சிந்துவெளி எழுத்துகளின் ஒப்பீட்டளவில் ஒற்றுமைகள் காணப்படுவதை இந்த மேடையில் வெளியிடப்பட்ட ஆய்வு நூல் விரிவாக விளக்குகிறது.
சிந்துவெளி நாகரிக வணிக முத்திரைகளில் உள்ள குறியீடுகளையும், தமிழ்நாட்டில் அகழாய்வுகளில் கிடைக்கும் குறியீடுகளையும் ஒப்பிடும் போது 60 சதவீதமும், சிந்துவெளி மண்பாண்டங்களில் உள்ள குறியீடுகளும், தமிழ்நாட்டு மண்பாண்ட குறியீடுகளும் 90 சதவீதமும் ஒரே தன்மை கொண்டவை என்று நம் தொல்லியல் ஆய்வாளர்கள் நிரூபித்து உள்ளனர்.
சிவகளை, ஆதிச்சநல்லூர், மயிலாடும்பாறை, மாங்காடு, தெலுங்கானூர், கீழ்நமண்டி போன்ற இடங்களில் சமீபத்தில் கிடைத்த அறிவியல் காலக்கணக்கீடுகள் சிந்துவெளி நாகரிகமும், தமிழ்நாட்டின் இரும்புக் காலமும் சமகாலத்தவை என்பதை உறுதி செய்கிறது என்று அறிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
அறிஞர்கள் நிறைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்ச்சியில் தமிழ்ப் பண்பாட்டை பேணிப் பாதுகாப்பதுதான் தமிழ்நாடு அரசின் தலையாய கடமை என்று உலகுக்கு உணர்த்தும் வகையில், 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட விரும்புகிறேன்.
செழித்து வளர்ந்த சிந்துவெளிப் பண்பாட்டின் எழுத்து முறையை இன்னும் நம்மால் தெளிவாக புரிந்துகொள்ள முடியவில்லை. 100 ஆண்டுகளை கடந்தும் தீர்க்கப்படாத இந்த சிந்துவெளி புதிர் பற்றி உலகெங்கும் உள்ள தொல்லியல் ஆய்வாளர்கள், மொழியியல் தமிழ் அறிஞர்கள் மற்றும் கணினி வல்லுனர்கள் உள்பட பலரும் இன்றளவும் பெரும் முயற்சி செய்து வருகிறார்கள்.
அந்த முயற்சிகளை ஊக்கப்படுத்தும் வகையில், சிந்துவெளிப் புதிருக்கான உரிய விடையை கண்டுபிடித்து, சிந்துவெளி எழுத்து முறையை தெளிவாக புரிந்து கொள்ள உதவும் வழிவகையை தொல்லியல் அறிஞர்கள் ஏற்கும்படி வெளிக்கொணரும் நபர்கள் அல்லது அமைப்புக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.8 கோடியே 57 லட்சத்து 70 ஆயிரம்) பரிசாக வழங்கப்படும். தலைசிறந்த தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் பெயரில் ஓர் ஆய்வு இருக்கை அமைக்க ரூ.2 கோடி வழங்கப்படும்.
அதேபோல், தமிழ்ப் பண்பாட்டின் தொன்மையை உலகமே தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஓயாமல் உழைக்கும் தலைசிறந்த தொல்லியல் அறிஞர்கள் மட்டுமின்றி, கல்வெட்டியல் ஆய்வாளர்கள், நாணயவியல் வல்லுநர்கள் ஆகியோரையும் ஊக்கப்படுத்தும் விதமாக, ஆண்டுதோறும் 2 அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். இந்த 3 அறிவிப்புகளும் இந்தத் துறை ஆய்வுகளுக்கு வேகத்தையும், ஊக்கத்தையும் வழங்கும் என்று நம்புகிறேன்.
அறிவியல் சான்றுகள் அடிப்படையில், தமிழ்ச் சமூகத்தின் தொன்மையை அறிவுலகம் இப்போது ஏற்றுக்கொள்ள தொடங்கி இருக்கிறது. இந்திய வரலாற்றை தமிழை தவிர்த்துவிட்டு இனி எழுத முடியாது என்று நாம் உரக்கச் சொல்வோம். ஜான் மார்ஷல் கண்டுபிடிப்பின் நூற்றாண்டில் அவருக்கு நாம் நன்றியை உரித்தாக்கி, அவர் விட்டுச் சென்றப் பணியை நாம் தொடர்வோம். இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
முன்னதாக தொல்லியல்துறை முதன்மைச் செயலாளர் உதயசந்திரன் வரவேற்றார். சிந்து வெளியில் உள்ள வெண்கலத்திலான காளை சிலை நினைவு பரிசாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டது. விழாவில் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தொல்லியல் வல்லுநர்கள் கிரெக் ஜாமிசன், ராஜன், நயன்ஜோத் லஹிரி, பாலகிருஷ்ணன், டோனி ஜோசப் உள்பட பலர் கலந்து கொண்டனர். சுற்றுலா மற்றும் பண்பாட்டுத்துறை முதன்மைச் செயலாளர் சந்தரமோகன் நன்றி கூறினார்.