» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பெண்ணை கொலை செய்து சூட்கேசில் உடலை கொண்டு வந்த கொடூரம்: தந்தை-மகள் கைது!

புதன் 6, நவம்பர் 2024 11:56:46 AM (IST)



ஆந்திராவில் 6 பவுன் நகைக்காக பெண்ணை கொலை செய்து, உடலை சூட்கேஸில் ரயிலில் எடுத்து வந்து மீஞ்சூர் ரயில் நிலையத்தில் வைத்துவிட்டு தப்ப முயன்றதாக தந்தை, மகளை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு சென்னை சென்டிரல் ரயில் நிலையத்துக்கு மின்சார ரயில் புறப்பட்டது. இரவு 8 மணிக்கு திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அதில் இருந்து பயணிகள் இறங்கினர். அவர்களில் தந்தையும், மகளும் அடங்குவர். அவர்கள் இருவரும் பெரிய டிராலி சூட்கேசை 3-வது நடைமேடையில் வைத்துவிட்டு நடந்து சென்று கொண்டிருந்தனர். இதை பார்த்த அங்கு இருந்தவர்கள் சந்தேகம் அடைந்து பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரர் மகேஷ் சூட்கேசை பார்த்தபோது அதில் இருந்து ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. இதை தொடர்ந்து சூட்கேசை விட்டு சென்ற ஆண், பெண் இருவரையும் போலீஸ்காரர் மடக்கி பிடித்தார். இது குறித்து சென்னை கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசாருக்கும், கும்மிடிப்பூண்டி ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட போலீசார் வருவதற்கு நேரமானதால் சூட்கேசை நடைமேடையில் வைத்து விட்டு சென்றவர்களிடம் அவர் விசாரித்தார். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதை தொடர்ந்து இரவு 10.30 மணிக்கு வந்த கொருக்குப்போட்டை போலீசார் அவர்களிடம் விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் சேலத்தை சேர்ந்த தச்சுத்தொழிலாளி பாலசுப்பிரமணியம் (43), அவரது 17 வயது மகள் என்பது தெரியவந்தது. அவர்கள் தற்போது ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் குக்கலு குண்டா சந்த பேட்டையில் வசித்து வருவதும் தெரியவந்தது.

சூட்கேசை திறந்து பார்த்த போது அதில் 65 மதிக்கத்தக்க பெண்ணின் உடல் ரத்த வெள்ளத்தில் காணப்பட்டது. இதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது அந்த பெண்ணின் விவரம் தெரியாது என்று அவர்கள் தெரிவித்தனர். அந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பாலசுப்பிரமணியம் மற்றும் அவரது 17 வயது மகளை போலீசார் கைது செய்தனர்.

போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். தன்னுடைய மகளை பாலியல் தொழிலுக்கு அழைத்ததால் அடித்த போது அந்த பெண் இறந்து விட்டதாக முதலில் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார். தொடர்ந்து நடந்தப்பட்ட விசாரணையில் திடீர் திருப்பமாக, நகைக்காக இந்த கொலை அரங்கேறியது விசாரணையில் அம்பலமானது.

தனது பக்கத்து வீட்டில் வசித்து வந்த வெள்ளை முடி ஆயா என்கிற மன்னம் ரமணியை தன்னுடைய வீட்டுக்கு பாலசுப்பிரமணியம் அழைத்துள்ளார். அவரது முகத்தில் பெட்ஷீட்டை போட்டு தாக்கி கொலை செய்துள்ளார்.

அவரிடம் இருந்த தங்கத்தாலி சரடு, தங்கச்சங்கிலி, கம்மல் என 50 கிராம் தங்க நகைகளை பறித்துள்ளனர். கொலையை மறைப்பதற்காக உடலை பெரிய சூட்கேசில் அடைத்து கொண்டு வந்து மீஞ்சூர் ரயில் நிலையத்தில் வீசி செல்ல முயன்றதாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர். இதுகுறித்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory