» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சட்டவிரோத கடைகளுக்கு மின் இணைப்பு வழங்க கூடாது: உயர்நீதிமன்றம் உத்தரவு

சனி 2, நவம்பர் 2024 11:52:23 AM (IST)

சட்டவிரோதமாக கட்டப்படும் கடைகளுக்கு மின் வினியோகம் வழங்கக்கூடாது என தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது. 

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை பகுதியைச் சேர்ந்த பெருமாள்சாமி என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை முக்கியமான உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதனை பற்றி பார்ப்போம்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை நீர்நிலைகள், சாலைகள், வாய்க்கால்கள், ஓடைகள், மேய்ச்சல் நிலங்கள் உள்பட பல்வேறு ஆட்சேபனைக்குரிய புறம்போக்கு இடங்களில் குடியிருப்போருக்கு எந்த காலத்திலும் பட்டா வழங்க முடியாது என்று அரசு அறிவித்துவிட்டது. ஆனாலும் பல ஊர்களில் சாலைகளில், நீர் நிலைகளில் ஆக்கிரமித்து குடியிருக்கிறார்கள். 

அவர்களுக்கு மின் இணைப்பும், குடிநீர் இணைப்பும் எப்படியோ கடந்த 20 ஆண்டுகளில் வாங்கிவிட்டனர். இதுதான் நீர்நிலைகளில், பொதுப்பாதைகளில், சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாத நிலைக்கு காரணமாக உள்ளது. இந்நிலையில் அரசு நிலங்களை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக கட்டப்படும் கடைகளுக்கு மின் இணைப்பு வழங்கக்கூடாது என மின்வாரியத்துக்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை பகுதியைச் சேர்ந்த பெருமாள்சாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறுகையில், "திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா வேம்பூர் அருகே நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக ஏராளமான கட்டிடங்கள் கட்டப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் அப்பகுதியில் எனக்கு சொந்தமான பட்டா இடத்துக்கு செல்ல முடியாத நிலையில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டிருக்கிறது . மேலும் பொதுப்பாதையை ஆக்கிரமித்து கடைகள் கட்டப்பட்டு உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் உள்பட பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள், எனவே சாலை ஆக்கிரமிப்பை அகற்றும்படி அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே எங்கள் மனுவின் அடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும்" இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி முகமது சபீக் ஆகியோர் முன்பு மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் திரவியம் ஆஜராகி, மனுதாரர் பகுதியில் 13 கடைகள் கட்டப்பட்டு இருந்தன. அவை அகற்றப்பட்டு வருகின்றன. 11 கடைகள் இடிக்கப்பட்டுவிட்டன. இன்னும் 2 கடைகள் விரைவில் இடிக்கப்படும் என்று கூறினார்.

அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி வாதாடுகையில். அந்த 11 கடைகளில் சில கடைகள் மீண்டும் கட்டப்பட்டு உள்ளன. சட்டவிரோதமாக கட்டப்பட்ட கடைகளுக்கு மின் இணைப்பை துண்டிக்காமல், தொடர்ந்து மின்சாரம் வினியோகிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

இந்த வழக்கின் விசாரணை முடிவில் தலைமை நீதிபதி தலைமையிலான நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவில், தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக கூறப்படும் கடைகளுக்கு எதன் அடிப்படையில் மின்சாரத்தை தமிழ்நாடு மின்வாரியம் தொடர்ந்து வினியோகிக்கிறது? எனவே சட்டவிரோதமாக கட்டப்படும் கடைகளுக்கு மின்சாரம் வினியோகிக்கக்கூடாது என தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு உத்தரவு பிறப்பிக்கிறோம். 

சம்பந்தப்பட்ட பகுதியில் 13 கடைகள் சட்டவிரோதமாக கட்டப்பட்டு உள்ளன என்று மனுதாரர் தரப்பிலும், அரசு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே உரிய வழிகாட்டுதல்களின்படி 13 கடைகளையும் விரைவாக இடிக்க வேண்டும்" என உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory