» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் தொடக்கம்

சனி 2, நவம்பர் 2024 10:06:09 AM (IST)



திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் இன்று காலை தொடங்கியது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா இன்று தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.

5.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு எழுந்தருளினார். காலை 7 மணிக்கு யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது. காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும், தீபாராதனையும், பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனையும் நடைபெறுகிறது.

பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்கச்சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடக்கிறது. மாலை 3.30 மணிக்கு மூலவருக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது.

பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு சுவாமி, அம்பாள்களுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சுவாமி, அம்பாள்களுடன் தங்க தேரில் எழுந்தருளி கிரி வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

6-ம் திருநாளான வருகிற 7-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 4.30 மணிக்கு கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. 7-ம் திருநாளான 8-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 11 மணிக்கு மேல் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் வைதீக முறைப்படி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது. 

கந்த சஷ்டி விழா இன்று தொடங்கியதையொட்டி நேற்று காலை முதலே பக்தர்கள் அங்கு குவிந்து வருகிறார்கள். நெல்லை, தூத்துக்குடி மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வரத் தொடங்கினர். தற்காலிக குடில்களிலும், கோவிலுக்கு சொந்தமான விடுதிகள், தனியார் விடுதிகள், திருச்செந்தூர் பகுதிகளில் உள்ள மடங்களிலும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் தங்கி உள்ளனர். 

அவர்கள் கடற்கரையிலும், நாழிக்கிணற்றிலும் புனித நீராடி விரதத்தை தொடங்கி உள்ளனர். சஷ்டி திருவிழாவையொட்டி நடைபெறும் தினமும் 1 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி பக்தர்களுக்காக தற்காலிக கழிப்பறைகள், குடிநீர் வசதி, தற்காலிக பஸ் நிறுத்தும் இடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும் கோவில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை, தீயணைப்பு துறை உள்ளிட்டவைகள் சார்பிலும் முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டு உள்ளது. பக்தர்கள் கடலில் புனித நீராடி வருவதால் கடலோர காவல் படையினரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். காவல்துறை சார்பில் சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளதால் கோவில் வளாகம் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory