» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி நிச்சயம்: கட்சி தொண்டர்களுக்கு விஜய் கடிதம்
புதன் 30, அக்டோபர் 2024 8:41:02 AM (IST)
எப்போதும் ஆக்கப்பூர்வமான அரசியலையே கையில் எடுப்போம். இலக்கை அடைவோம். 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி நிச்சயம் என்று தமிழக வெற்றிக் கழக தொண்டர்களுக்கு விஜய் அறிவுறுத்தி உள்ளார்.
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த 27-ந்தேதி அன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள், ரசிகர்கள் திரண்டனர். இந்த மாநாடு தமிழக அரசியல் கட்சிகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கட்சி தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட கடித வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அரசியலில் கடிதமுறை என்பது ஆகப்பெரும் ஆயுதம். பேரறிஞர் அண்ணா தந்த ஆயுதம். இந்த கடிதம் எழுதும்போது, என்னென்னவோ எண்ண அலைகள் இதயத்தில் அலைமோதுகின்றன. என் நெஞ்சம் நிறைந்ததில் எதை சொல்வது? எதை விடுப்பது?. மாநாடு நடத்த பல்வேறு காரணங்களால் நமக்கு கிடைத்தது மிக குறைந்த கால இடைவெளிதான். அதிலும் அடைமழை வேறு குறுக்கிட்டது.
இருந்தும் எல்லாவற்றையும் சமாளித்து சூறாவளியாக சுழன்று, நம் கட்சியின் முதல் மாநில மாநாட்டை வெற்றி பெற செய்த உங்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றி. நாடே வியக்கும் வகையில் நம் மாநாட்டை மாபெரும் வெற்றி பெற செய்த உங்கள் ஒவ்வொருவரின் மனதையும் கோடிப்பூக்களை தூவி, போற்றி மனம் நிறைகிறேன்.
உங்கள் ஒவ்வொருவரின் அன்பிலும் மனம் நெகிழ்ந்து, கண்களில் ஆனந்த கண்ணீர் தேங்க, அரசியல் வெற்றி பயணத்தை தொடங்கி இருக்கிறோம். தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியோடு, தமிழகத்தின் வெற்றிக்கான வெள்ளோட்டத்தையும் கண்டேன். தீர்க்கமான அரசியல் வெற்றிக்கான திசைகள் திறக்க கண்டேன்.
உங்களை என் தோழர்களாக, தூய குடும்ப உறவுகளாக பெற்றது என் வாழ்நாள் வரம். என் எல்லா வார்த்தைகளுக்கும் நீங்கள் உயிர் கொடுத்தீர்கள். அதனால்தான் நமது மாநாட்டின் வாயிலாக பொறுப்புணர்வுடன் கூடிய கடமையுடன், கட்டுப்பாடான, கண்ணியமான, ஆரோக்கியமான, உத்வேகமான, உரிமைகளை மீட்டெடுக்கும் அரசியலை இந்த மண்ணிலே விதைத்திருக்கிறோம். மாநாட்டில் நம்மை கண்ட நம் தமிழக மக்களும் அதை உணர்ந்திருப்பார்கள்.
நம்முடைய அரசியல் பயணத்தை நாம் தொடங்கும் முன்னரே நம்மை விமர்சித்தவர்கள் இனி இன்னும் கடுமையாக விமர்சிப்பார்கள். அத்தகைய விமர்சனங்களில் ஏதேனும் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் தெரிந்தால் அவற்றை மட்டுமே கருத்தில் கொள்வோம். மற்றவற்றை மறந்தும்கூட மனதில் ஏற்றி விடாமல் கடந்து செல்ல பழகி கொள்வோம்.
நம்மை தாயுள்ளத்தோடு வரவேற்கும் நம் தமிழ்நாட்டு மக்களுக்காக இன்னும் அதி தீவிரமாக, தீர்க்கமாக, தீர்மானமாக உழைப்போம். தங்கள் மண்ணை சேர்ந்த மகன்களான, மகள்களான நம்மை தக்க இடம் நோக்கி, தகுதியான அங்கீகாரம் நோக்கி மக்களே அழைத்து செல்வார்கள். எனவே அவர்களின் மனதில் நிறையும் அளவுக்கு அதிக நம்பிக்கையுடனும், நன்றியுடனும் ரெட்டை போர் யானைகளின் பலத்துடன் உழைப்போம்.
வாகை பூக்கள் நமக்காகவே நாடெங்கும் பூத்துக்குலுங்க போகின்றன. நமது மாநாட்டின் மூலம் வி.சாலை நமது வியூக சாலையாகவும், விவேக சாலையாகவும், வெற்றி சாலையாகவும் ஆனது போலவே நம்மை யாராலும் வெல்ல இயலாத, வித்தியாசமான, யதார்த்த அரசியல் சாலைக்கும் நம்மை அழைத்து செல்லும். எப்போதும் ஆக்கப்பூர்வமான அரசியலையே கையில் எடுப்போம். 2026-ல் (சட்டமன்ற தேர்தல்) நம் இலக்கை அடைவோம். வெற்றி நிச்சயம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.