» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லை : எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

சனி 7, செப்டம்பர் 2024 8:05:43 AM (IST)



தமிழகத்தில் மக்களைப் பாதுகாக்கும் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்று அதிமுக பொதுச்செயலரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே பழனிசாமி கூறினார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அவர் செய்தியாளரிடம் கூறியது: திமுக ஆட்சியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண் புகார் கொடுக்க சென்றால் கூட அதனை பதிவு செய்யாமல் மறுக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. இந்த ஆட்சியில் பெண்கள் மட்டுமன்றி ஒட்டுமொத்த மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை. காவல்துறைக்கு சுதந்திரம் அளிக்கவில்லை. 

பாலியல் சம்பவங்கள், பட்டியிலின மக்கள் மீதான தாக்குதல் தொடர்கிறது. நிர்வாக திறனற்ற அரசாக இருப்பதால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன. ஏற்கெனவே முதல்வர் ஸ்டாலின் துபாய், ஜப்பான், சிங்கப்பூர், ஸ்பெயின் போன்ற நாடுகளுக்கு சென்று வந்தது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட கோரினோம். ஆனால், இதுவரை வெளியிடவில்லை. தற்போது அவர் அமெரிக்கா சென்றிருப்பது முதலீடுகளை ஈர்ப்பதற்காக அல்ல. அவரது மருத்துவ சிகிச்சைக்குத்தான் என பரவலாக பேசப்படுகிறது.

ஜெயலலிதா ஆட்சியின்போது இருங்காட்டுக்கோட்டை சோழபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள மைதானத்தில் கார் பந்தயம் நடத்தாமல் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சென்னை மத்திய பகுதியில் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் செலவு செய்து நடத்தியுள்ளனர். இது நாட்டுக்கு தேவைதானா?ரேஷன் கடைகளில் பொருள்கள் முறையாக வழங்கப்படுவதில்லை. நாட்டு மக்களுக்கு எவ்வளவு பிரச்சினை இருக்கிறது என்று தெரியாமல் இன்றைக்கு விளையாட்டு துறை அமைச்சர் அரசின் கஜானாவை காலி செய்து வருகிறார்.

திருநெல்வேலி- தென்காசி நான்கு வழிச்சாலை பணி தாமதமாக நடந்து வருகிறது. பவானி - மேட்டூர் - தொப்பூர் தேசிய நெடுஞ்சாலை திட்டம் கைவிடப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் கிடப்பில் போடப்படுகின்றன. ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா மாநில நிதி ரூ.1000 கோடியில் சேலத்தில் அதிமுக ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாகயும் திறக்கப்படவில்லை. ஆனால், கட்டாத எஸ்ம்ஸ் பற்றியே பேசுகின்றனர்.

அதிமுக ஆட்சியில் மருத்துவத் துறையில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இன்று காலிப்பணியிடங்கள் அதிகமாக உள்ளன. மருத்துவக் கல்லூரிகளுக்கு டீன் நியமிக்கவில்லை என உயர்நீதிமன்றமே கண்டித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் தான் உயர்ந்த நிலைக்கு வந்துள்ளனர். எனவே, ஒட்டுமொத்தமாக கல்வித்தரத்தை சொல்வது பொருந்தாது. திமுகவின் 40 மாத கால ஆட்சியில் ரூ.3.50 கோடி லட்சம் கடன் வாங்கி உள்ளனர். ஆனால், எந்த புதிய திட்டங்களையும் நிறைவேற்றவில்லை என்றார்.

பேட்டியின்போது, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கடம்பூர் செ.ராஜூ, நத்தம் விஸ்வநாதன், முன்னாள் அமைச்சர்கள் மா.பா. பாண்டியராஜன் ராஜலட்சுமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory