» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பார்முலா4’ கார்பந்தயம் விளையாட்டு வரலாற்றில் முக்கிய மைல்கல்: தமிழக அரசு

செவ்வாய் 3, செப்டம்பர் 2024 12:55:21 PM (IST)



சென்னையில் நடந்த ‘பார்முலா’ கார்பந்தயம் விளையாட்டு வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல் என்று தமிழக அரசு பாராட்டியுள்ளது.

சென்னையில் இரவு நேரத்தில் சாலையில் பார்முலா 4 கார்பந்தயம் இரண்டு நாட்கள் வெகுவிமரிசையாக நடந்து முடிந்தது. போட்டியை ஏராளமான ரசிகர்கள் கண்டுகளித்தனர். இதையொட்டி தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு அமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் உதயநிதி ஸ்டாலின், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சீரிய குறிக்கோள்களை நிறைவேற்றும் வகையில் செயல்பட்டு ஒவ்வொரு களத்திலும் முத்திரைகள் பதித்து வருகிறார். 

அத்துடன், இளைஞர்களின் அறிவுத் திறன், உடல்திறன் வளர்ச்சிகளுக்கு ஊக்கத்தையும் உந்து சக்தியையும் அளிக்கிறார். அவரது முயற்சியால் சென்னையில் உலகையே கவரும் வண்ணம் கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்று முடிந்துள்ள பார்முலா 4 கார் பந்தயம் பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவிலிருந்து வலைதளப் பதிவில், ‘பார்முலா 4 சென்னை கார் பந்தயத்தை மாபெரும் வெற்றியடையச் செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தைச் சேர்ந்த அலுவலர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தெற்கு ஆசியாவிலேயே இதுவரை நடைபெறாத மிக நீளமான சாலை கார் பந்தயம் இது என்னும் பெருமை இந்த பார்முலா 4 கார் பந்தயத்திற்கு உண்டு. இந்த 3.5 கிலோமீட்டர் நீள கார் பந்தயப் பகுதியில் மொத்தம் 19 வளைவுகள் இருந்தன. பந்தய இடம் சென்னை தீவுத் திடலில் தொடங்கி, போர் நினைவுச் சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தாசாலை, அண்ணாசாலை வழியாக 3.5 கி.மீ., தூரத்தைக் கடந்து தீவுத் திடலிலேயே வந்து முடிவதாக இருந்தது. போட்டியை நடத்துவதில் தனிக் கவனம் செலுத்தி முறையாகத் திட்டமிட்டு எந்தவித இடையூறுமின்றி வெற்றிகரமாக நடத்திடும் ஆர்வத்துடன், போட்டி நடைபெறும் பகுதியில் இரவிலும், பகலிலும் வருகை தந்து பார்வையிட்டு அதிகாரிகளுக்கு உதயநிதி ஸ்டாலின் அறிவுரைகள் வழங்கினார்.

பந்தயத்தையொட்டித் தீவுத் திடலைச் சுற்றியுள்ள சுவாமி சிவானந்தா சாலை, நேப்பியர் பாலம் ஓடுபாதை அனைத்திலும் உயரமான மின்னொளி விளக்குகள் அமைக்கப்பட்டு இரவையும் பகலாக்கி பந்தய வீரர்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளித்தது.

பார்முலா 4 கார் இந்தியன் சாம்பியன்ஷிப் பந்தயம் தனி நபராகவும், இந்தியன் ரேசிங்லீக் அணியாகவும் நடத்தப்பட்டது. பார்முலா4 பந்தயத்தில் 8 அணிகளைச் சேர்ந்த 16 வீரர்கள் பங்கேற்றனர். இந்திய ரேசிங் லீக் பந்தயத்தில் (ஐ.ஆர்.எல்) 6 அணிகள் களம் கண்டன. ஒரு அணியில் 4 பேர் இடம் பெற்றனர். இதில் ஒவ்வொரு அணியிலும் தலா ஒரு வீராங்கனை இடம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் 18 வீரர்கள், 6 வீராங்கனைகள் என மொத்தம் 24 பேர் கலந்து கொண்டனர்.

பார்முலா4 சுற்றின் முதலாவது பந்தயத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஹக் பார்டர் பந்தய தூரத்தை 19 நிமிடம் 42.952 வினாடிகளில் கடந்து வெற்றி பெற்றார். இந்தியாவின் ருஹான் ஆல்வா 2-வது இடத்தையும், அபய் மோகன் 3-வது இடத்தையும் பெற்றனர். இவற்றுடன ஜே.கே.ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியும் நடைபெற்றது.

பிற்பகலில் தொடங்கி மின்னொளியில் இரவுவரை நடைபெற்ற இந்தப் பந்தயம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. பார்வையாளர்கள் போட்டிகளை ரசித்து ஆரவாரம் செய்தது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. ரசிகர்கள் அதிக அளவில் குவிந்ததால் இந்த கார் பந்தயக் கொண்டாட்டத்தால் அந்தப் பகுதியே அதிர்ந்தது.

இறுதியாக வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பெரும் வரவேற்பை பெற்ற இந்த கார்பந்தய போட்டியைஅடுத்த ஆண்டிலும் தொடர்ந்து நடத்துவது குறித்து முதல்-அமைச்சரின் ஆலோசனைகளை பெற்று முடிவு மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

‘இந்த பந்தயம் இந்திய கார்பந்தய வீரர்களுக்கு சர்வதேச தளத்தில் போட்டியிடுவதற்கு முக்கியமான தளத்தை வழங்கும். மேலும் வெளிநாடுகளுக்கு செல்லாமல் அவர்களின் திறன்களை கூர்மைப்படுத்தவும், விலைமதிப்பற்ற அனுபவத்தைப் பெறவும் உதவும்’ என்று இந்தியாவின் முதல் பார்முலா1 கார்பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் பாராட்டினார்.

மொத்தத்தில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முழு முயற்சி செய்து மிகுந்த ஈடுபாட்டுடன் முன்னின்று நடத்திய சென்னை பார்முலா 4 கார் பந்தயம் தமிழ்நாடு விளையாட்டுத்துறை வரலாற்றில் ஒரு முக்கிய மைல் கல்லாக இடம் பெற்றுவிட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory