» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் ரூ.29கோடி போதைப்பொருள் பறிமுதல் : 3பேர் கைது!
திங்கள் 2, செப்டம்பர் 2024 3:28:31 PM (IST)
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்த முயன்ற ரூ.29 கோடி மதிப்பிலான அதிபோதை பொருளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா, பீடி இலைகள், வலி நிவாரண மாத்திரைகள் கடத்தப்பட்டு வருகிறது. கடத்தலை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் கியூ பிரிவு போலீசார் மற்றும் கடலோர பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் கியூ பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த படகில் சோதனையிட்டபோது, அதில், 58 கிலோ சாரஸ் என்ற அதிபோதை பொருள் இருந்துள்ளது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.29 கோடி என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக தூத்துக்குடி சவேரியார்புரம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் அமல்ராஜ், தெர்மல் நகர் பகுதியைச் சேர்ந்த நிஷாந்த், தாளமுத்து நகர் பகுதியை சேர்ந்த விக்டர் ஆகிய 3 பேரை பிடித்து கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கியூ பிரிவு போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இந்த போதைப் பொருள் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது. கஞ்சாவை உருக்கி ஒரு கிலோ சாரஸ் ஆக உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. அண்மை காலமாக தூத்துக்குடியில் இருந்து போதைப் பொருள் இலங்கைக்கு கடத்தப்படுவது வழக்கமாக நடந்து கொண்டிருந்தாலும். தற்போதைய இந்த கடத்தல் மிகப்பெரிய அளவில் பார்க்கப்படுகிறது.