» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பைக் மீது வேன் மோதி விபத்து: 2 நண்பர்கள் பரிதாப சாவு
திங்கள் 2, செப்டம்பர் 2024 8:10:36 AM (IST)
சங்கரன்கோவில் அருகேபைக் மீது வேன் மோதி 2 நண்பர்கள் பரிதாபமாக இறந்தனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராதாகிருஷ்ணன் மகன் காளீஸ்வரன் (25), கோவிந்தராஜ் மகன் மாரிமுத்து (28). நண்பர்களான இவர்கள் 2 பேரும் நேற்று தென்காசி மாவட்டம் நெற்கட்டும்செவலில் நடந்த பூலித்தேவன் பிறந்தநாள் விழாவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
பின்னர் மாலையில் அவர்கள் மோட்டார் சைக்கிளில் தங்களது ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். சங்கரன்கோவில்- ராஜபாளையம் சாலையில் சோலைசேரி பகுதியில் சென்றபோது, எதிரே வந்த வேன் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளின் மீது மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட காளீஸ்வரன், மாரிமுத்து ஆகிய 2 பேரும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடியவாறு கிடந்தனர்.
உடனே அங்கிருந்தவர்கள் அவர்களை சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி சிறிதுநேரத்தில் அடுத்தடுத்து 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேன் டிரைவரான தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தைச் சேர்ந்த தர்மரிடம் (50) விசாரணை நடத்தி வருகின்றனர். சங்கரன்கோவில் அருகே வேன் மோதி 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.