» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சென்னையில் பார்முலா4 கார்பந்தயம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

ஞாயிறு 1, செப்டம்பர் 2024 10:29:24 AM (IST)



சென்னையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இரவு நேர பார்முலா4 கார்பந்தயத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த ஆண்டுக்கான பார்முலா4 கார்பந்தயம் இந்தியாவில் 5 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 2-வது சுற்று போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது. இதையொட்டி சென்னை தீவு திடலை சுற்றியுள்ள 3.5 கிலோ மீட்டர் சாலை பந்தயத்திற்கான ஓடுதளமாக மாற்றப்பட்டது. தெற்காசியாவில் முதல்முறையாக ஸ்டீரிட் சர்க்யூட்டில் நடக்கும் இந்த போட்டிக்காக இரவிலும் பகல்போல் ஜொலிக்கும் வகையில் இருபுறமும் மின்னொளி பொருத்தப்பட்டுள்ளது. 

மேலும், பார்வையாளர்களுக்காக சுவாமி சிவானந்தா சாலையில் 5 இடங்களில் பிரத்யேக இருக்கைகள் அமைக்கப்பட்டன. பிற்பகல் 2.30 மணிக்கு பயிற்சியுடன் போட்டியை தொடங்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் முந்தைய நாள் இரவு பெய்த மழை காரணமாக ரேஸ் நடத்துவதற்கான சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பின் (எப்.ஐ.ஏ.) தரச்சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் பிற்பகலில் நடக்க இருந்த பயிற்சி, தகுதி சுற்றும் அனைத்து ஒத்திவைக்கப்பட்டது.

மாலையில் எப்.ஐ.ஏ. அனுமதி சான்றிதழ் முறையாக கிடைத்தபின் பயிற்சி சுற்றுகள் மட்டும் நடத்தப்படும் என்று போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இரவு 7.10 மணிக்கு அண்ணாசாலையில் போட்டியின் தொடக்க விழா நடந்தது. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, நேரு, கலாநிதிமாறன் எம்.பி., மேயர் பிரியா, இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாதரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இரவு 9 மணிக்கு பிறகு ஜே.கே. எப்.எல்.ஜி.பி., இந்தியன் தேசிய லீக் (ஐ.ஆர்.எல்.), பார்முலா4 கார்பந்தய டிரைவர்கள் பயிற்சியில் உற்சாகமாக ஈடுபட்டனர். அவர்கள் போட்டி போட்டுக் கடும் இரைச்சலுடன் முந்தி சென்றது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. முன்னதாக கார்களின் சாகச நிகழ்ச்சியும் அரங்கேறியது. ஜே.கே. டயர்ஸ் கார்கள் ஒரு பக்கம் சாய்ந்தபடி இரண்டு சக்கரம் மட்டும் சாலையில் உராய்ந்து சீறிப்பாய்ந்ததையும், திடீரென பிரேக் போட்டு கார் சுழன்று திரும்பியதையும் பார்த்து மக்கள் சிலிர்த்து போனார்கள்.

இன்று காலை தகுதி சுற்று மற்றும் இரவில் பார்முலா 4 கார்பந்தயங்கள் நடக்கின்றன. இதில் 8 அணிகளை சேர்ந்த 16 வீரர்கள் பங்கேற்கிறார்கள். பந்தயத்திற்கு 25 நிமிடங்கள் ஒதுக்கப்படும். இதற்குள் யார் அதிக தடவை 3.5 கிலோ மீட்டர் தூரத்தை சுற்றி வருகிறார்களோ அவர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள். இதற்கு மத்தியில் இந்தியன் தேசிய லீக் போட்டியும் நடக்க உள்ளது.


பார்முலா 4 கார்பந்தயத்திற்காக ஏறக்குறைய 9 ஆயிரம் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. போட்டியை காண பிற்பகல் 1 மணியில் இருந்தே மக்கள் தீவு திடல் பகுதியில் குவிய தொடங்கினர். போட்டி தொடங்க தாமதம் ஆனாலும் அங்கு பொறுமையாக காத்திருந்தனர். ஏனெனில் நகரின் மையப்பகுதியில் புதுமையான இந்த இரவு நேர பந்தயத்தை காணும் ஆர்வம் அவர்களிடையே அதிகம் காணப்பட்டது. வீரர்களின் பயிற்சி மற்றும் சாகச நிகழ்ச்சியை உற்சாகமாக கண்டுரசித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory