» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மின்வயர் உரசி தீப்பற்றி எரிந்த கண்டெய்னர் லாரி : 6 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம்!
சனி 31, ஆகஸ்ட் 2024 10:19:19 AM (IST)
கோவில்பட்டியில் மின் வயரில் உரசியதில், கண்டெய்னர் லாரி தீ பிடித்து எரிந்ததில் 6 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து சேதமானது.
விருதுநகரை சேர்ந்த வெங்காய வியாபாரி ரமேஷ்குமார். இவர் தனது குடும்பத்தினருடன் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் உள்ள வீட்டில் குடியேற உள்ளார். இதற்காக இன்று அதிகாலை விருதுநகர் வீட்டில் இருந்த உபயோக பொருட்கள், பைக் உள்ளிட்டவைகளை ஒரு கண்டெய்னர் லாரியில் ஏற்றி கோவில்பட்டியில் உள்ள வீட்டிற்கு கொண்டு வந்துள்ளார்.
லாரியை சேலம் அன்னதானப்பட்டியை சேர்ந்த செல்வம் (66) என்பவர் ஓட்டி வந்துள்ளார். கண்டெய்னர் லாரி பசுவந்தனை சாலையில் வந்த போது, மின்சார வயர் உரசி , அறுந்து கண்டெய்னர் லாரி மீது விழுந்து தீ பிடித்து பற்றி எரிய தொடங்கியது. கண்டெய்னர் லாரியின் வெளிப்பகுதி மட்டுமின்றி, உள்ள பகுதியிலும் தீ பிடித்து பற்றி எரிந்தது. இதில் கண்டெய்னர் லாரி உள்ளே இருந்த டிவி, ஏசி, கட்டில், பீரோ, பிரிட்ஜ், வாசிங் மிஷன், பாத்திரங்கள் என அனைத்து வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் பைக் ஆகியவை முற்றிலுமாக தீ பற்றி எரிந்தது.
இது குறித்த தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி தீயணைப்பு துறையினர் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரமாக போராடி தீயை அணைத்தனர். இருந்த போதிலும் கண்டெய்னர் லாரியில் இருந்த சுமார் 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரித்து நாசமானது. மின்சார வயர் அறுந்து விழுந்ததால் அப்பகுதியில் 2மணி நேரமாக மின்தடையும் ஏற்பட்டது.
விபத்து குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டு உபயோக பொருட்கள் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி தீ பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.