» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 2பேருக்கு 25 ஆண்டு சிறை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
வியாழன் 29, ஆகஸ்ட் 2024 8:24:57 AM (IST)
சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 2 வாலிபர்களுக்கு தலா 25 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது..
நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள ஊர்க்காடு பகுதியைச் சேர்ந்தவர்கள் சங்கர் என்ற மூர்த்தி (31), மாரியப்பன் (28). இவர்கள் 2 பேரும் கடந்த 16-1-2020 அன்று 14 வயது சிறுமியை ஒரு மறைவான இடத்திற்கு அழைத்து சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இதுகுறித்து சேவை மைய ஆலோசகர் ராஜம்மாள் அம்பை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராதா வழக்குப்பதிந்து சங்கர், மாரியப்பன் ஆகியோரை கைது செய்தார். இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை மாவட்ட போக்சோ கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி (பொறுப்பு) சுரேஷ்குமார் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த அவர், குற்றம் சாட்டப்பட்ட சங்கர், மாரியப்பன் ஆகியோருக்கு தலா 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு வக்கீல் உஷா ஆஜரானார்