» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கடன் தொல்லையால் விபரீதம்: 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று தந்தை தற்கொலை!

வியாழன் 11, ஜூலை 2024 12:46:05 PM (IST)

பணகுடியில் கடன் தொல்லையால் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று தந்தை  தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது

நெல்லை மாவட்டம் பணகுடி அண்ணாநகரைச் சேர்ந்தவர் ரமேஷ் ( 41), கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி உமா. இவர்களுக்கு ராபின் (14) என்ற மகனும், காவியா (11) என்ற மகளும் உண்டு. அப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் ராபின் 9-ம் வகுப்பும், காவியா 6-ம் வகுப்பும் படித்து வந்தனர். மிகவும் வறுமையில் வாழ்ந்து வந்த ரமேஷ் கடந்த 10 மாதங்களுக்கு முன் தனது மனைவியை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பி ைவத்தார்.

இதற்காக ரமேஷ் தனக்கு தெரிந்த நபர்களிடம் கடன் வாங்கினார். பின்னர் அவர் பணத்தை திருப்பி கொடுக்காததால், கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு வந்தனர். பணத்தை திருப்ப கொடுக்க முடியாததாலும், தனது மனைவி வெளிநாட்டுக்கு சென்ற பிரிவை தாங்க முடியாமலும் ரமேஷ் மனவேதனையில் இருந்து வந்தார்.

நேற்று காலையில் வெகு நேரமாகியும் ரமேஷ் வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று ஜன்னல் வழியாக வீட்டுக்குள் பார்த்தனர். அப்போது ரமேஷ், அவருடைய மகன் ராபின், மகள் காவியா ஆகியோர் வாயில் நுரை தள்ளியவாறு இறந்த நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து உடனடியாக பணகுடி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். இறந்து கிடந்த 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கடன் தொல்லை மற்றும் மனைவி வெளிநாடு சென்ற ஏக்கத்தில் ரமேஷ் இருந்து வந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் நேற்று முன்தினம் தனது 2 குழந்தைகளுக்கும் வாழைப்பழத்தில் குருணை மருந்து (விஷம்) கலந்து கொடுத்தார். பின்னர் தானும் அதனை சாப்பிட்டுள்ளார். இதில் 3 பேரும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory