» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தமிழக சட்டப்பேரவையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அறிவிப்புகள்

புதன் 16, ஏப்ரல் 2025 3:52:31 PM (IST)



மாற்றுத்திறனாளிகள் சுய தொழில் மேற்கொள்வதற்காக செயல்படுத்தப்படும் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள் (Motorised Sewing Machines) வழங்கும் திட்டத்தினை விரிவுபடுத்தி 40 சதவிகிதத்திற்கு மேல் பாதிப்பிற்குட்பட்ட மூளை முடக்குவாதம், தசைச்சிதைவு நோய், புறஉலக சிந்தனையற்ற / மதிஇறுக்கம் ஆகிய 2000 மாற்றுத்திறனாளிகள் அல்லது பெற்றோர்கள் பயன்பெறும் வகையில் ரூ.1.30 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

1. தசைச்சிதைவு நோய் மற்றும் முதுகுத் தண்டுவட பாதிப்பால், கைகள் மற்றும் கால்கள் பாதிக்கப்பட்ட (Tetraplegic / Quadriplegic) மாற்றுத் திறனாளிகளுக்கு மின்கலனால் இயங்கும் சக்கர நாற்காலி (Battery Operated Wheel Chair) வழங்கும் திட்டத்தினை பிற வகையினால் கை மற்றும் கால்கள் பாதிக்கப்பட்டு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் மற்றும் நீயோ போல்ட் போன்ற உபகரணங்களை பயன்படுத்த இயலாத நிலையிலுள்ள 600 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6.87 கோடி மதிப்பில் விரிவுபடுத்தி வழங்கப்படும்.

தற்பொழுது தசைச்சிதைவு நோய் மற்றும் முதுகுத் தண்டுவட பாதிப்பால், கைகள் மற்றும் கால்கள் இரண்டும் பாதிக்கப்பட்ட (Tetraplegic / Quadriplegic) மாற்றுத்திறனாளிகளுக்கு, மின்கலனால் இயங்கும் சக்கர நாற்காலி வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வுபகரணம் தன்னிச்சையாக பிறர் உதவியின்றி நடமாட்டத்திற்கு பெரிதும் உதவியாக இருப்பதால், இத்திட்டத்தினை விரிவுபடுத்தி, 80 சதவீதம் மற்றும் அதற்கு மேல் இரண்டு கால்கள் மற்றும் கைகள் பாதிக்கப்பட்ட, மூளைமுடக்குவாதம், போலியோ, பக்கவாதம் மற்றும் நடுக்குவாதம் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் மற்றும் நீயோ போல்ட் போன்ற உபகரணங்களை பயன்படுத்த இயலாத நிலையிலுள்ள மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு மின்கலனால் இயங்கும் சக்கர நாற்காலிகள் வழங்கப்படும்.
 
2. தசைச்சிதைவு நோய், முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டோர் மற்றும் பல்வகைக் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு, இயற்கை உபாதைகளை கழிக்கும் வகையிலான சக்கர நாற்காலி (Commode Wheel Chair) வழங்கும் திட்டம் 1000 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.20 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும்.
தசைச்சிதைவு நோய், முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டோர் மற்றும் பல்வகைக் குறைபாடுடன் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே, இயற்கை உபாதைகளைக் கழிக்கும் வசதியுடன் கூடிய ரூ.12,000/- மதிப்புள்ள மடக்கு சக்கர நாற்காலிகள், முதற்கட்டமாக ரூ.120.00 இலட்சம் மதிப்பில் 1000 பயனாளிகளுக்கு வழங்கப்படும். 
மாற்றுத்திறனாளிகள், இவ்வுபகரணத்தில் அமர்ந்த நிலையிலேயே குளியலறை மற்றும் கழிப்பறைக்கு தன்னிச்சையாக செல்ல இயலும் என்பதால், இவ்வுபகரணம் மாற்றுத்திறனாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

3. மூளை முடக்குவாதம் (Cerebral Palsy) உள்ளிட்ட இதர குறைபாட்டினால் இரண்டு கால்கள் பாதிப்படைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு மின்கலன் பொருந்திய சக்கர நாற்காலியாகவும், மூன்று சக்கர வாகனமாகவும் பயன்படுத்தக்கூடிய இணைக்கும் வசதி கொண்ட மின்கலனால் இயங்கும் உபகரணம் (Attached Wheel Chair with Electric Equipment (Neobolt)) 600 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6.30 கோடி மதிப்பில் வழங்கப்படும்.

தசைச்சிதைவு நோய் மற்றும் முதுகுத் தண்டுவட பாதிப்பால், கைகள் மற்றும் கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மின்கலனால் இயங்கும் சக்கர நாற்காலி வழங்கும் திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகள் தாங்கள் விரும்பும் உபகரணங்களின் வகை மற்றும் மாதிரியை, தாங்களே தேர்வு செய்யும் முறையில் (Choice Based System), சக்கர நாற்காலியாகவும், மூன்று சக்கர வாகனமாகவும் பயன்படுத்தக்கூடிய இணைக்கும் வசதி கொண்ட மின்கலனால் இயங்கும் உபகரணம் (Attached Wheel Chair with Electric Equipment (Neobolt)) 2022–23 ஆம் நிதியாண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

இதனை விரிவுபடுத்தி மூளை முடக்குவாதம் (Cerebral Palsy) உள்ளிட்ட இதர குறைபாட்டினால் இரண்டு கால்கள் பாதிக்கப்பட்ட நடக்க இயலாத 18 வயதிற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் வீட்டினுள்ளும் வெளியிலும் இயங்க உதவுவதற்கு மின்கலன் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலி இணைக்கப்பட்ட நவீன மூன்று சக்கர வாகனம் ரூ. 1.05 இலட்சம் மதிப்பீட்டில் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
4. மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் உறுப்பினர்கள் மகள்/மகன் திருமணத்திற்கான உதவித்தொகையை ரூ.2,000/-லிருந்து ரூ.5,000/- ஆக உயர்த்தி வழங்கப்படும்.

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் 

2007 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டு வாரிய உறுப்பினர்களுக்கும், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
கடந்த 2023-24 ஆம் நிதியாண்டில் இவ்வாரியத்திற்கான கல்வி உதவித்தொகை, மருத்துவம், விபத்து மரணம் ஆகியவற்றின் உதவித் தொகையை உயர்த்தப்பட்டடு, கூடுதல் நிதி ஒதுக்கீடு ரூ.200.00 இலட்சம் ஒதுக்கியும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தற்போது, இவ்வாரியத்தின் திட்டங்களை மேம்படுத்தும் நடவடிக்கையாக மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினர்களின் மகள் / மகன் திருமணத்திற்கான உதவித்தொகையை ரூ.2,000/- லிருந்து ரூ.5,000/- ஆக உயர்த்தி வழங்கப்படும்.

5. மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் உறுப்பினர்கள் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கிற்கான உதவிதொகையை ரூ,17,000/-லிருந்து ரூ.30,000/- ஆக உயர்த்தி வழங்கப்படும். தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் 2007 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டு வாரிய உறுப்பினர்களுக்கும், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

 கடந்த 2023-24 ஆம் நிதியாண்டில் இவ்வாரியத்திற்கான கல்வி உதவித்தொகை, மருத்துவம், விபத்து மரணம் ஆகியவற்றுக்கான காப்பீட்டுத்தொகை ஆகியவற்றை உயர்த்தியும், கூடுதல் நிதி ஒதுக்கீடு ரூ. 200.00 இலட்சம் ஒதுக்கியும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. உறுப்பினர்கள் இயற்கை மரணத்திற்கும் ஈமச்சடங்கிற்காகவும் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.17,000/-லிருந்து ரூ.30,000/- ஆக உயர்த்தப்படும். 
 
 6. அனைத்து மாவட்டங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைகள் வழங்குவதற்கு தேவையான பணிகளை மேற்கொள்ள கூடுதலாக சேவை நிறுவனம் ரூ.86.00 இலட்சம் செலவில் ஈடுபடுத்தப்படும்.
அனைத்து அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் சிறப்பு மருத்துவர்கள் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் ”மாற்றுத்திறனாளி” என்பதற்கான சான்றிதழ் மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID) ஆகியவற்றை வழங்க ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்கனவே பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அதனை துரிதப்படுத்தும் நோக்கில் ஒப்பந்த முறையில் ஆண்டிற்கு ரூ.86.00 இலட்சம் செலவில் சேவை வழங்கும் நிறுவனம் ஈடுபடுத்தப்படும்.

7. பத்து வருடங்களுக்கு முன்னர் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள் (Motorised Sewing Machines) பெற்ற பயனாளிகளுக்கு மீண்டும் புதிய மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள் வழங்கப்படும் 
2009-2010 நிதியாண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும், இயக்க மாற்றுத்திறனாளிகள் மற்றும் செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கு, மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி 
கடந்த 2018 – 19 ஆம் நிதியாண்டு முதல் 75 சதவீதத்திற்கு மேல் அறிவுசார் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளின் தாய்மார்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. 

அவ்வகையில், கடந்த 2009–2010 ஆம் நிதியாண்டு முதல் 2014–2015 ஆம் நிதியாண்டு வரை (பத்து வருடங்களுக்கு முன்பு வரை) 9,960 மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வுபகரணம், மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்திற்கு மிகவும் உதவியாக இருப்பதால், பத்து வருடங்களுக்கு முன்பு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள் பெற்ற பயனாளிகளின் உபகரணங்கள் பழுதடைந்து, அவர்கள் விண்ணப்பிக்கும் பட்சத்தில், பழுதடைந்த உபகரணத்திற்கு மாற்றாக ஒவ்வொரு ஆண்டும் கொள்முதல் செய்யப்படும் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்களில் 25 சதவீதம், 2025–2026 ஆம் நிதியாண்டு முதல் புதிதாக வழங்கப்படும். மேற்குறிப்பிட்டவாறு வழங்கப்படும் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்களுக்கான செலவினம், இவ்வுபகரணத்திற்காக அரசால் ஒதுக்கீடு செய்யப்படும் நிதி ஒதுக்கீட்டிற்குள் வழங்கப்படும்.


8. மாற்றுத்திறனாளிகள் சுய தொழில் மேற்கொள்வதற்காக செயல்படுத்தப்படும் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள் (Motorised Sewing Machines) வழங்கும் திட்டத்தினை விரிவுபடுத்தி 40 சதவிகிதத்திற்கு மேல் பாதிப்பிற்குட்பட்ட மூளை முடக்குவாதம், தசைச்சிதைவு நோய், புறஉலக சிந்தனையற்ற / மதிஇறுக்கம் ஆகிய 2000 மாற்றுத்திறனாளிகள் அல்லது பெற்றோர்கள் பயன்பெறும் வகையில் ரூ.1.30 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும்.

மாற்றுத்திறனாளிகள் சுய தொழில் செய்து தங்கள் வாழ்வாதாரத்தைப் பெருக்கிக் கொள்ள உதவும் வகையில், இயக்க மாற்றுத்திறனாளிகள், செவித்திறன் மாற்றுத்திறனாளிகள், அறிவுசார் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 75 சதவீதத்திற்கு மேல் அறிவுசார் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளின் தாய்மார்களுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள் வழங்கும் திட்டத்தைனை மேலும் விரிவுபடுத்தி, 2025 – 2026 ஆம் நிதியாண்டு முதல் 40 சதவீதத்திற்கு மேல் தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோரின் பெற்றோர் / பாதுகாவலர், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர்/பாதுகாவலர் மற்றும் புறஉலக சிந்தனையற்ற / மதிஇறுக்கம் குறைபாடுடையோரின் பெற்றோர் / பாதுகாவலர் ஆகியோர்களுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள் வழங்கப்படும்.

9. மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்கள் மூலம் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் உதவி உபகரணங்கள் பெறுவதில் தன்னிறைவு அடையும் திட்டம் ரூ.131.25 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும். தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிநவீன மற்றும் உயர்ரக உதவி உபகரணங்கள் வழங்கி இந்தியாவிலேயே முன்மாதிரியாக செயல்படுகிறது. இவ்வுபகரணங்கள், மாற்றுத்திறனாளிகள் தன்னிச்சையாக செயல்பட உதவுகின்றன.

இந்நிலையில் கடைகோடியில் உள்ள கிராமத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளும் தங்களுக்குத் தேவையான உயர்ரக உதவி உபகரணங்களை, தங்களின் தகுதிக்கு ஏற்றவாறு விரும்பும் மாதிரியை தெரிவு செய்து பெற்று, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும் உதவி உபகரணங்களை பெறுவதில் தன்னிறைவு அடையும் நிலைக்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

சுமார் 3 மாத கால அளவில் 99 மாநகராட்சி மண்டலங்கள், 138 நகராட்சிகள், 388 ஊராட்சி ஒன்றியங்கள் உட்பட்ட பகுதிகளில் 625 முகாம்கள் நடத்தப்படும்.
எனவே, இத்திட்டத்தை சீரிய முறையில் செயல்படுத்தும் வகையில், மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாவட்டவாரியாகவும், ஊராட்சி, ஒன்றிய, நகராட்சி மற்றும் மாநகராட்சி, மண்டல வாரியாக அனைத்துத் தரப்பு அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் குழு ஏற்படுத்தி முகாம் நடத்தப்படும். 

மாற்றுத்திறனாளிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு துறையின் களப்பணியாளர்கள் மூலம் முகாம் பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்பட்டு, மிகவும் இயலாதவர்களுக்கு போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டு முகாமிற்கு வரவழைக்கப்படுவார்கள். மாற்றுத்திறனாளிகளுக்கு முகாமிலேயே உபகரணங்கள் பொருத்துவதற்கான அளவீடு செய்தும், தேவையானவற்றை தெரிவு செய்ய உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டும், இணையதளம் மூலம் தெரியப்படுத்தி, பதிவேற்றம் செய்து முகாம் முடிந்த 3 மாதத்திற்குள் இருப்பிடத்திலேயே வழங்கப்படும். இம்முகாமில், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் பட்டியலிடப்பட்ட முகமைகள், அலிம்கோ நிறுவனமும் பங்குகொண்டு உபகரணங்கள் வழங்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படும். இதற்காக ரூ.125 கோடி மதிப்பீட்டில் உபகரணங்கள் உட்பட மொத்தம் ரூ.131.25 கோடி மதிப்பில் உபகரணங்கள் வழங்கும் தன்னிறைவு திட்டம் செயல்படுத்தப்படும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory