» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகர்கோவில் - பெங்களூர் ரயில் பயணிகள் மத்தியில் அமோக வரவேற்பு!
ஞாயிறு 9, பிப்ரவரி 2025 8:59:32 PM (IST)
குமரி மற்றும் நெல்லை மாவட்டத்திலிருந்து பெங்களூர் மற்றும் ஓசூர் மதுரை வழியாக தினசரி ரயில் இயக்க வேண்டும் என்பது தென்மாவட்ட பயணிகள் கோரிக்கை ஆகும். பல ஆண்டு கடுமையான போராட்டத்துக்கு பின் தென் மாவட்ட பயணிகளின் கோரிக்கையை ஏற்று ரயில்வேதுறை நாகர்கோவிலிருந்து பெங்களூருக்கு செல்ல 2013-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் ரயில் பட்ஜெட்டில் நாகர்கோவில் - பெங்களூர் வழித்தடத்தில் புதிய தினசரி ரயில் நாமக்கல் வழியாக அறிவிக்கப்பட்டது.
பட்ஜெட் அறிவிப்பை தொடர்ந்து அதே வருடம் ஜுலை மாதம் வெளியிடப்பட்ட ரயில்கால அட்டவணையில் இந்த தினசரி ரயில் இயங்கும் காலஅட்டவணையும் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து 2014-ம் ஆண்டு பெப்ரவரி மாதம்7 -ம் தேதி பெங்களூரில் இந்த ரயிலை அப்போதைய ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே துவங்கி வைத்தார்.
இந்த ரயில் தமிழகத்தில் உள்ள கடைசி மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலிருந்து புறப்பட்டு திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி என 11 மாவட்டங்கள் வழியாக பயணித்து இந்த 11 மாவட்ட பயணிகளுக்கு பெங்களுர் செல்லதக்க வகையில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் மட்டுமே தமிழகத்தில் உள்ள அதிக பகுதி பயணிகள் பயன்படும் படியாக பெங்களுருக்கு இயக்கப்படும் ரயில் ஆகும். ஆகையால் இந்த ரயிலுக்கு மற்ற ரயில்களை காட்டிலும் அதிக முக்கியத்துவம் கொடுத்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கை தென்மாவட்ட பயணிகளால் தொடர்ந்து வைக்கப்படுகின்றது.
நாகர்கோவிலிருந்து பெங்களூருக்கு செல்லும் இந்த ரயில் பெங்களூர்க்கு காலையில் 9:20 மணிக்கு சென்று சேர்கிறது. இவ்வாறு காலதாமதமாக செல்வதால் இந்த ரயிலில் செல்லும் பயணிகள் பள்ளி கல்லூரி, வேலைவாய்ப்பு என்று பல்வேறு பணிகள் நிமித்தம் செல்லும் பயணிகள் அரை நாள் விடுமுறை எடுக்க வேண்டியுள்ளது. மறுமார்க்கமாக இந்த ரயில் பெங்களூரில் இருந்து மாலை ஐந்து மணிக்கு புறப்படுகிறது. இவ்வாறு சீக்கிரமாக புறப்படுவதால் அலுவல் பணிகளை முடித்து இந்த ரயிலில் பயணம் செய்ய முடியாத நிலை உள்ளது. இந்த ரயிலின் முனையம் மாற்றப்பட்டதால் முனைய இடநெருக்கடி பிரச்சனை இல்லை என்பதால் இந்த ரயிலின் கால அட்டவணை மாற்றம் செய்வதில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்பதை ரயில்வே அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆகவே இந்த ரயிலின் கால அட்டவணை மாற்றம் செய்து பெங்களூரில் இருந்து மாலை 6:30 மணிக்கு பிறகு புறப்படுமாறும் காலஅட்டவணை அமைத்தும் மறுமார்க்கமாக பெங்களூர்க்கு காலை 7:00 மணிக்கு சென்று சேருமாறு காலஅட்டவணை அமைத்து வேகத்தை அதிகரித்து பயண நேரத்தை கணிசமான அளவில் குறைத்து இயக்க வேண்டும் என்று தென்மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர். இந்த ரயில் இயக்கப்பட்டு ஆண்டுகள் 11 உருண்டோடிவிட்டன. ஆனால் இதுவரை இது போன்ற ஒரு தினசரி ரயில் பெங்களூரில் இருந்து தமிழ்நாட்டுக்கு இதுவரை அறிவித்து இயக்கப்படவில்லை அல்லது ரயில்வே துறையால் அறிவித்து இயக்க முடியவில்லை என்பதை பார்க்கும் போது தமிழ்நாடு ரயில் பயணிகள் கானல் நீராக உள்ளது.
கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு புதிய ரயில் இயக்க மறுக்கும் ரயில்வே துறை
கர்நாடகத்திலிருந்து (சென்னை தவிர) தமிழகத்தில் மைசூர் - தூத்துகுடி தினசரி ரயில், மைசூர் - மைலாடுதுறை தினசரி ரயில் ரயில்கள் மட்டுமே உள்ளன. பெருகிவரும் போக்குவரத்து கருத்தில் கொண்டு பெங்களூரில் இருந்து தமிழகத்துக்கு அதிக ரயில்கள் இயக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் ஆகும். இதற்காக தமிழக எம்.பி க்கள் முயற்சி செய்ய வேண்டும். பெங்களூரில் இருந்து கேரளாவிற்கு அதிக அளவில் ரயில்கள் சேலம், ஈரோடு வழியாக இயக்கப்படுகிறது. இந்த ரயில்களும் நள்ளிரவு நேரங்களில் இந்த வழியாக செல்வதால் இந்த பகுதி மக்களுக்கு எந்த பயனும் இல்லை. கேரளா எம்.பி க்கள் அனைவரும் இணைந்து கேரளா வளர்ச்சிக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கிறார்கள். இதைபோல் தமிழக எம்.பிக்கள் செய்ய வேண்டும் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
திருச்சி – பெங்களூர் தினசரி சிறப்பு ரயில் நிறுத்தம்:-
கடந்த சில வருடங்களுக்கு முன் திருச்சியில் இருந்து விருத்தாசலம் ஆத்தூர் வழியாக பெங்களூருக்கு தினசரி சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயில் இந்த பகுதி பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த ரயிலை தொடர்ந்து நிரந்தர ரயிலாக இயக்காமல் தென்மேற்கு ரயில்வே அதிகாரிகள் சதி செய்த நிறுத்திவிட்டனர்.
தமிழக பயணிகள் எதிர்பார்ப்பு:-
தமிழக பயணிகள் தமிழ்நாட்டிலிருந்து கர்நாடக மாநிலத்தின் பெங்களூர், மைசூர், ஹப்ளி, சிமோகா, போன்ற பகுதிகளிலிருந்து தமிழக நகரங்களுக்கு அதிக ரயில்கள் இயக்க வேண்டும்
1. திருச்சி - பெங்களூர் வழி விருத்தாச்சலம் தினசரி ரயில்
2. ராமேஸ்வரம் - மைசூர் தினசரி ரயில்
3. மதுரை - பெங்களூர் பகல் நேர இன்டர்சிட்டி அல்லது ஜனசதாப்தி தினசரி ரயில்
4. செங்கோட்டை - பெங்களூர் தினசரி ரயில்
5. புதுவை - பெங்களூர் தினசரி இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயில்
6. வேளாங்கண்ணி - பெங்களூர் தினசரி இரவு நேர ரயில்
7. கன்னியாகுமரி - ஹப்ளி தினசரி ரயில் வழி மதுரை, பெங்களூர்
8. மதுரை - சிமோகா தினசரி இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயில்
9. திருச்சி - ஹப்ளி தினசரி இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயில்
10. கன்னியாகுமரி – மங்களுர் வழி சேலம், பெங்களூர், ஹாசன், சுப்ரமண்ய ரோடு
இது போன்ற பல்வேறு கோரிக்கைகள் நீண்ட காலமாக கிடப்பில் உள்ளன. இந்த கோரிக்கைகளில் ஒரு வருடத்துக்கு ஒரு கோரிக்கையானது நிறைவேற்றி இருந்தால் பெங்களூரில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள ஒருசில நகரங்களுக்கு நேரடி ரயில் சேவை கிடைத்திருக்கும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக்குகள் மோதி விபத்து: ஜவுளிகடை உரிமையாளர் சாவு
செவ்வாய் 11, மார்ச் 2025 7:57:26 PM (IST)

குமரி மாவட்டத்தில் பரவலாக மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
செவ்வாய் 11, மார்ச் 2025 7:54:35 PM (IST)

வாகனங்களை சேதப்படுத்தி, வேன் டிரைவருக்கு அரிவாள் வெட்டு: மர்ம கும்பல் வெறிச்செயல்!
செவ்வாய் 11, மார்ச் 2025 7:44:33 PM (IST)

கன்னியாகுமரியில் விமான நிலையம் : பாராளுமன்றத்தில் விஜய் வசந்த் எம். பி கோரிக்கை
செவ்வாய் 11, மார்ச் 2025 5:49:51 PM (IST)

ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் பணம் திருட்டு: மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
செவ்வாய் 11, மார்ச் 2025 5:47:57 PM (IST)

புனேயில் இருந்து கன்னியாகுமரிக்கு கடத்தி வந்த 12 கிலோ கஞ்சா பறிமுதல்!!
செவ்வாய் 11, மார்ச் 2025 10:28:59 AM (IST)
