» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
திருநெல்வேலி - ஷாலிமார் வாராந்திர ரயிலை நாகர்கோவிலிருந்து இயக்க கோரிக்கை!
வியாழன் 28, நவம்பர் 2024 3:45:27 PM (IST)
திருநெல்வேலி - ஷாலிமார் வாராந்திர ரயிலை நாகர்கோவிலிருந்து இயக்க வேண்டும் என குமரி மாவட்ட பயணிகள் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தெற்கு ரயில்வே திருநெல்வேலியிலிருந்து விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி,விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி, அரக்கோணம், சென்னை பெரம்பூர், விஜயவாடா வழியாக மேற்குவங்கம் மாநிலத்தின் தலைநகர் ஷாலிமார் க்கு வாராந்திர சிறப்பு ரயிலை அறிவித்து இயக்கி வருகிறது. இந்த ரயில் இரண்டு முறை நீட்டிப்பு செய்து தொடர்ந்து சிறப்பு ரயிலாக இயங்கிவருகின்றது. இந்த ரயிலின் அறிவிப்பு காலம் முடிந்த பிறகு மீண்டும் சிறப்பு ரயிலாக அறிவித்து தொடர்ந்து இயக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுத்து வருகிறது.
தற்போது கன்னியாகுமரியிலிருந்து ஹவுராவுக்கு திருநெல்வேலி, மதுரை, திருச்சி, சென்னை வழியாக வாராந்திர ரயில் சேவை மட்டுமே உள்ளது. இந்த ரயில் 2003-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு இதுவரை வாராந்திர ரயில் சேவையாகவே இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் சராசரியாக 184 சதமானம் (occupancy) பயணிகள் உபயோகத்தின் இயங்கிவருகின்றது என்பதை தென் கிழக்கு ரயில்வே மண்டலம் சார்பாக கண்டறியப்பட்டு இந்த தென்மாவட்ட பகுதிகளில் இருந்து கிழக்கு மாநிலமான ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் பகுதிகளுக்கு கூடுதல் ரயில்கள் தேவை நல்ல வரவேற்பு உள்ளது ரயில்வேக்கு அதிக வருவாய் கிடைக்கும் என்பதை ஆய்வு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து தென்மாவட்டத்தில் கூடுதல் ரயில்கள் இயக்க திட்டத்தையும் வகுத்துள்ளனர்.
ஆனால் இத்தனை ஆண்டுகள் ஆகியும் தெற்கு ரயில்வே இதுபற்றி எந்த ஒரு நடவடிக்கையும் இன்றி ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளார்கள். கன்னியாகுமரி திருவனந்தபுரம் கோட்டத்தில் உள்ளதால் அவர்கள் இதுபற்றி எந்த ஒரு ஆய்வும் மேற்கொள்ள மாட்டார்கள். ஒரு சில வேளைகளில் தெற்கு ரயில்வே புதிய ரயில் அறிவித்தால் அந்த ரயில் சென்னையிலிருந்து இயக்குவார்கள் அல்லது கேரளாவிலிருந்து இயக்குவார்கள். தமிழ்நாடு வழியாக ரயில்கள் இயக்க அவர்களுக்கு மனது வரவே வராது.
தென்மாவட்டங்களில் இருந்து இந்தியாவில் உள்ள கிழக்கு பகுதி மாநிலங்களுக்கு கூடுதல் ரயில் சேவை வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இதன்படி தற்போது திருநெல்வேலியிருந்து ஷாலிமார் க்கு இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயில்தான் அமித் பாரத் ரயில் பெட்டிகள் வந்த பிறகு அமித் பாரத் ரயிலாக இயக்கப்பட இருக்கின்றது என்பது ரயில்வேதுறையின் திட்டம் ஆகும். இந்த ரயிலில் 13 ஏசி பெட்டிகள் உள்ளன. இது மட்டுமல்லாமல் இந்த ரயில் சென்னை பெரம்பூர் வழியாக இயக்கப்படுவதால் தென்மாவட்ட பயணிகள் மாநில தலைநகருக்கு செல்ல வாராந்திர ரயில் சேவை கூடுதலாக கிடைக்கும்.
திருவண்ணாமலை ரயில் இணைப்பு:
கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து நேரடியாக திருவண்ணாமலைக்கு செல்ல எந்த ஒரு ரயில் சேவையும் தற்போது இல்லை. ஆனால் திருநெல்வேலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயிலையும் சேர்த்து வாரத்துக்கு மூன்று ரயில் சேவை உள்ளது. கன்னியாகுமரி மாவட்ட்ட இருப்புhதைகள் திருவனந்தபுரம் கோட்டத்தில் கீழ் உள்ளதால்தான் தமிழ்நாடு வழியாக பயணிக்கும் இது போன்ற ரயில்கள் மதுரை கோட்டத்தில் உள்ள திருநெல்வேலியுடன் நிறுத்தப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி – மதுரை - ஹவுரா மார்க்கம் சராசரி பயணிகள் நெருக்கடி அல்லது பயணிகள் பயன்பாடு (occupancy)
இரண்டடுக்கு ஏசி – 183 %
மூன்றடுக்கு ஏசி -162 &
இரண்டாம் வகுப்பு படுக்கை -196 &
மொத்தம் - 184 % (occupancy)
மறுமார்க்கமாக ஹவுரா- மதுரை- கன்னியாகுமரி மார்க்கம் சராசரி பயணிகள் நெருக்கடி அல்லது பயணிகள் பயன்பாடு (occupancy)
இரண்டு அடுக்கு ஏசி – 164%
மூன்றடுக்கு ஏசி -134 %
இரண்டாம்வகுப்பு படுக்கை -183%
மொத்தம் - 166 % (occupancy)
நாகர்கோவில் - ஷாலிமார் வாராந்திர ரயில்:
நாகர்கோவிலிருந்து திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோயம்புத்தூர் மார்க்கமாக ஷாலிமார்க்கு வாராந்திர ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் கேரளா வழியாக சுற்றி செல்வதால் இவ்வளவுக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு இல்லை. இந்த ரயிலில் கேரளாவை சார்ந்த பயணிகள் மட்டுமே பயணம் செய்கிறார்கள். ஆகவே இந்த திருநெல்வேலி - ஷாலிமார் வாராந்திர ரயிலை நாகர்கோவில் அல்லது திருவனந்தபுரம் வரை நீட்டிப்பு செய்து இயக்கி விட்டு அதற்கு பதிலாக நாகர்கோவில் - ஷாலிமார் ரயிலை திருவனந்தபுரத்துடன் நிரந்தரமாக நிறுத்தி விடலாம். இவ்வாறு செய்யும் போது நாகர்கோவில் ரயில் நிலையத்தில் உள்ள இடநெருக்கடி வெகுவாக குறையும் என குமரி மாவட்ட பயணிகள் நலச்சங்கம் தெரிவித்துள்ளது.