» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்!
புதன் 6, நவம்பர் 2024 12:24:00 PM (IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நீக்கம், திருத்தம் செய்ய சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
01.01.2025-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் (31.12.2006 அன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ பிறந்தவர்கள்), விடுபட்ட வாக்காளர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளவும், வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் ஆதார் எண் இணைத்தல் ஆகியவைகளை மேற்கொள்ளவும் ஏதுவாக வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்- 2025 கால அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் 29.10.2024 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் ஆதார் எண் இணைத்தல் ஆகியவைகளை மேற்கொள்ள 29.10.2024 முதல் 28.11.2024 வரை விண்ணப்பங்கள் பெறப்படும். ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், தொகுதி / முகவரி மாற்றம் மற்றும் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அடடையுடன் இணைத்தல் தொடர்பாக சிறப்பு முகாம் நடத்த 09.11.2024, 10.11.2024, 23.11.2024 மற்றும் 24.11.2024 ஆகிய நாட்கள் அறிவிக்கப்பட்டது.
தற்போது, மேற்படி தினங்களில் சிறிய மாற்றம் செய்யப்பட்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், தொகுதி / முகவரி மாற்றம் மற்றும் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அடடையுடன் இணைத்தல் தொடர்பாக வாக்குச்சாவடி அமைவிடங்களில் 16.11.2024, 17.11.2024, 23.11.2024 மற்றும் 24.11.2024 (சனி மற்றும் ஞாயிறு) ஆகிய தினங்களில் நடைபெறும் என தேதி மாற்றம் செய்து இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மேற்படி சிறப்பு முகாம்களை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ள தெரிவிக்கப்படுகிறது.
வாக்காளர்கள் தங்களது சந்தேகம், கோரிக்கைகள் தொடர்பான விபரங்களை வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் அல்லது கட்டணமில்லா தொலைபேசி எண் 1950-ஐ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.