» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மோதல் போக்கு: பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர், எஸ்ஐ இடமாற்றம்: டி.ஐ.ஜி. உத்தரவு

வியாழன் 17, அக்டோபர் 2024 10:01:57 AM (IST)

நாகர்கோவிலில் மோதல் போக்கு உருவான நிலையில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் சாந்தி. அதே காவல் நிலையத்தில் ஆஷா ஜெபகர் என்பவர் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவர்கள் 2 பேருக்கும் இடையே பணி தொடர்பாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

இதனால் 2 பேருக்குமிடையே மோதல் போக்கு உருவானது. இதைத் தொடர்ந்து ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றச்சாட்டுகளை கூறி வந்தனர். மேலும் இதுதொடர்பாக 2 பேரும் தனித்தனியாக மாவட்ட கண்காணிப்பாளர் சுந்தரவதனத்திடம் புகார் மனுவும் அளித்தனர். இந்த விவகாரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர் தான் ராஜினாமா செய்யப்போவதாக உயர் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பினார். 

அந்த கடிதத்தில், "நான் காவல் நிலையத்தில் இல்லாத நேரத்தில் வரும் புகார்தாரர்களிடம் புதிதாக வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை காட்டி இவர் தான் சப்-இன்ஸ்பெக்டர் என்று இன்ஸ்பெக்டர் கூறினார். கடந்த ஆகஸ்டு மாதம் சப்-இன்ஸ்பெக்டர் அறையில் உள்ள இருக்கையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அமா்ந்து பணியாற்றினார். இதுபற்றி இன்ஸ்பெக்டரிடம் கேட்டால் மருத்துவ விடுப்பில் செல்லுங்கள் என்று கூறினார். இதனால் என்னால் பணியாற்ற முடியவில்லை” என்று கூறப்பட்டு இருந்தது.

இதே போல இன்ஸ்பெக்டர் சாந்தி அளித்த புகார் மனுவில், "சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர் தனது பணியை ஒழுங்காக செய்யவில்லை. இன்ஸ்பெக்டருக்கு மரியாதை கொடுக்கவில்லை. பணியில் அலச்சியமாக உள்ளார்”் என்று கூறப்பட்டு இருந்தது.

இதைத்தொடர்ந்து 2 பேரின் புகார் மனுக்கள் தொடர்பாக விசாரணை நடத்த போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவிட்டார். அதன்பேரில் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதற்கிடையே 2 பேரும் நாகர்கோவில் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். அப்போது ஆயுதப்படையில் இருந்து குலசை தசரா விழா பாதுகாப்பு பணிக்காக 2 பேரும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர் ஆகியோர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அந்த வகையில் இன்ஸ்பெக்டர் சாந்தி தென்காசி மாவட்டம் புளியங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார். சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர் நெல்லை மாநகருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை நெல்லை சரக டி.ஐ.ஜி. மூர்த்தி பிறப்பித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory