» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மார்த்தாண்டம் மேம்பாலத்தில் சீரமைக்கும் பணி முடிந்தது போக்குவரத்து தொடங்கியது

செவ்வாய் 15, அக்டோபர் 2024 8:54:48 PM (IST)

மார்த்தாண்டம் மேம்பாலத்தில் பள்ளத்தை சீரமைக்கும் பணி நிறைவடைந்ததையடுத்து இன்று போக்குவரத்து தொடங்கியது.

மார்த்தாண்டத்தில் போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் வகையில் பம்மம் முதல் குழித்துறை ஆற்றுப்பாலம் வரை 2½ கிலோ மீட்டர் தூரம் இரும்பு மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தில் கடந்த மே மாதம் பம்மம் பகுதியில் பள்ளம் ஏற்பட்டு கம்பிகள் தெரிந்தது. இதனால் மேம்பாலம் வழியாக வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டது. பின்னர் சில நாட்களில் அந்த பள்ளம் சீரமைக்கப்பட்டு மீண்டும் போக்குவரத்து நடைபெற்று வந்தது.

இந்நிலையில் கடந்த 2-ந் தேதி மேம்பாலத்தில் பம்மம் பகுதியில் ஏற்கனவே பள்ளம் ஏற்பட்ட இடத்திற்கு அருகே மீண்டும் பள்ளம் ஏற்பட்டு கம்பிகள் தெரிந்தது. இதனால் மேம்பாலத்தில் பம்மம் பகுதியில் பஸ், லாரி, கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அனைத்து வாகனங்களும் மேம்பாலத்தின் கீழ் பகுதி வழியாக சென்று வந்தன. 

இதனால் பாலத்தின் கீழே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. போக்குவரத்து நெரிசலை ஓரளவு குறைக்கும் வகையில் மார்த்தாண்டம் சந்திப்பு முதல் குழித்துறை ஆற்றுப்பாலம் வரை மேம்பாலம் வழியாக போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் மேம்பாலத்தில் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. 

பள்ளத்தில் உடைந்து கிடந்த கான்கிரீட் கலவை அப்புறப்படுத்தப்பட்டு மீண்டும் கான்கிரீட் போடப்பட்டது. தொடர்ந்து பள்ளத்தில் தார் போடப்பட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை முதல் மேம்பாலம் வழியாக வாகனங்கள் இயக்கப்பட்டு போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. 

மேலும் அதிகாரிகள் கூறும்போது, மேம்பாலத்தில் பஸ்கள், கார்கள், இரு சக்கர வாகனங்கள் போன்றவை மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும். லாரிகள், கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது. இவற்றை மாற்று பாதையில் இயக்க வேண்டும்’ என்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory