» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
சம்மந்தமில்லாத தகவல்களை ஆர்.டி.ஐ.யில் கேட்க கூடாது : ஆட்சியர் அறிவுறுத்தல்
சனி 12, அக்டோபர் 2024 4:40:32 PM (IST)
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில், சம்மந்தமில்லாத தகவல்களை கோருவதை பொதுமக்கள் தவிர்த்திட வேண்டும் என்று ஆட்சியர் ஆர்.அழகுமீனா கூறினார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில் அனைத்து துறை சார்ந்த பொதுத்தகவல் அலுவலர்களுக்கான தகவல் அறியும் உரிமைச்சட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்குபின் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவிக்கையில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் வாரம் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 5-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. தகவல் பெறும் உரிமைச்சட்ட வாரத்தை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையிலும், பொதுத் தகவல் அலுவலர்களுக்கு விழிப்புணர்வு வழங்கிடும் பொருட்டும், மாநில தகவல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் தகவல் கோரி வரப்பெறும் மனுக்களுக்கு உரிய காலத்திற்குள் முறையான பதில் வழங்கப்படுவது குறித்தும், வேறு துறை சார்ந்திருப்பின் உரிய காலத்திற்குள் சம்மந்தப்பட்ட துறையினருக்கு பொதுத்தகவல் அலுவலர் தகவல் அறியும் உரிமைச்சட்டம், பிரிவு 6(3)-ன் படி மனுக்கள் கிடைக்கப்பெற்ற 5 தினங்களில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பது குறித்தும் விளக்கி கூறப்பட்டது.
தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் முக்கியத்துவம் கருதி பொதுமக்களும் அத்தியாவசியமான மற்றும் தேவைப்படுகின்ற தகவல்களை மட்டும் பொதுத் தகவல் அலுவலர்களுக்கு முறையீடு செய்ய வேண்டும். சம்மந்தமில்லாத மற்றும் கேள்வி வடிவத்திலான தகவல்களை கோருவதை பொதுமக்கள் தவிர்த்திட வேண்டும். அனைத்து அலுவலகங்களிலும் பொதுத் தகவல் அலுவலர் மற்றும் மேல்முறையீட்டு அலுவலர் குறித்த விபரங்கள் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் விளம்பரம் செய்யப்பட்டிருக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.
கூட்டத்தில் பொதுத்தகவல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கு.சுகிதா, மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) ரெ.செந்தில்வேல் முருகன், அலுவலக மேலாளர் (பொது) சுப்பிரமணியம் மற்றும் அனைத்து துறையை சார்ந்த பொதுத் தகவல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.