» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

புதிய மின் இணைப்பு சேவை பெற இணையதளம் வழியாக பதிவு செய்யலாம்!

சனி 10, ஆகஸ்ட் 2024 12:04:15 PM (IST)

புதிய மின் இணைப்பு சேவை பெற இணையதளம் வழியாக பதிவு செய்யலாம் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. 

இதுகுறித்து குமரி மாவட்ட மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் பத்மகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நுகர்வோர் தங்களது வீடுகள், வணிக பயன்பாடு உள்பட அனைத்து வகையான புதிய மின் இணைப்புகளுக்கும் www.tangedco.org என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது தேவையான ஆவணங்கள் மற்றும் கட்டண விவரங்கள் இணையதளத்தில் தரப்பட்டுள்ளது.

இணையவழி விண்ணப்ப தளத்தில் ஆதார் அட்டை, விண்ணப்பதாரரின் புகைப்படம் மற்றும் சமீபத்திய சொத்து வரி, கட்டிட வரி ரசீது, விற்பனை பத்திரம், பகிர்வு பத்திரம், ஒதுக்கீடு கடிதம், கணினி பட்டா அல்லது வருவாய்துறை அதிகாரி வழங்கிய உரிமை சான்றிதழ் அல்லது கோர்ட்டு தீர்ப்பு போன்ற உரிமையின் சான்றுகளின் நகல் வழங்க வேண்டும்.

கூட்டு சொத்தில் சட்டப்பூர்வமாக வாரிசு சான்றிதழ் மற்றும் மேலே குறிப்பிட்ட சான்றிதழ்கள் மற்றும் இணை உரிமையாளரிடம் இருந்து ஒப்புதல் கடிதங்கள், ஒப்புதல் கடிதம் சமர்ப்பிக்கபடாவிட்டால், மேம்பட்ட பாதுகாக்கப்பட்ட வைப்புத்தொகையுடன் இழப்பீடு பத்திரம் ஆகியவை சமர்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர், உரிமையாளர் இல்லையென்றால் படிவம் 5-ல் உரிமையாளரிடம் இருந்து ஒப்புதல் கடிதம் அல்லது படிவம் 6-ல் உள்ள ஆக்கிரமிப்பு மற்றும் இழப்பீட்டு பத்திரத்தின் சான்றினை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் விண்ணப்ப வகையை தேர்ந்தெடுத்து தேவையான விவரங்களை நிரப்பி பிற விவரங்களாகிய பெயர், முகவரி, அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் ஆகியவற்றை நிரப்ப வேண்டும். விண்ணப்பத்திற்கான கட்டணங்களை உடனடியாக இணையதளம் வழியாகவே செலுத்தி விடலாம். 

எனினும் இணையதளத்தில் கோரும் அனைத்து ஆவணங்களும் முழுமையாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை தெளிவு படுத்திய பின்னர் கட்டணங்களை செலுத்தலாம். விண்ணப்பதாரர் மின்வாரிய அலுவலகங்களுக்கு சென்று எந்தவித விண்ண நகலும் கொடுக்க தேவையில்லை.

வீடு கட்டுமானத்திற்கு மட்டுமே நிரந்தர மின் இணைப்பாக படிவம் 6-ல் புதிய மின் இணைப்பு பெற்றுக்கொள்ளலாம். வீடு தவிர அனைத்து கட்டுமானங்கள், விழா நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்கு நாட்கள் அடிப்படையில் தற்காலிக படிவம் 6-ல் மின் இணைப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இதேபோல் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்கள், மின்பாதைகள் ஆகியவற்றை மாற்று இடம் அல்லது பாதை வழியாகவோ மாற்றியமைக்க விரும்பினால் புதியதாக மாற்றியமைக்க வேண்டிய இடத்தின் வரைபடம் மற்றும் ரூ.500-க்கான இழப்பீடு பத்திரம் ஆகியவற்றுடன் வைப்புதொகை பங்களிப்பு வேலை விண்ணப்பம் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் பதிவு கட்டணம் செலுத்திய பின்னர் தொழில்நுட்ப சாத்திய கூறினை ஆராய்ந்து அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

விண்ணப்பதாரர் இருந்த இடத்தில் இருந்து கொண்டே மின்னணு பரிவர்த்தனை www.tangedco.org என்ற இணையதளம் வழியாக டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, ஆன்லைன் பேங்கிங், மொபைல் பேங்கிங், யு.பி.ஐ. ஆகியவை மூலம் விண்ணப்ப கட்டணங்களை செலுத்தலாம். நுகர்வோர் தங்களது மின் இணைப்புகளுக்கான மின் நுகர்வு கட்டணத்தையும் இதேபோன்று மின்னணு பரிவர்த்தனை மூலமாக செலுத்தி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இதுதொடர்பான சிரமங்களுக்கு சம்பந்தப்பட்ட கோட்ட செயற்பொறியாளர்களை அணுகலாம். நாக்கோவில் மின் வினியோக செயற்பொறியாளர் 9445854489, தக்கலை செயற்பொறியாளர் 9445854514, குழித்துறை செயற்பொறியாளர் 9445854531, நாகர்கோவில் மின் பகிர்மான மக்கள் தொடர்பு அலுவலர் 9445854477 என்ற கைபேசி எண்களில் தொடர்பு தங்களது குறைபாடுகளை தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory