» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தாம்பரம் - ஐதராபாத் ரயில் கன்னியாகுமரி நீட்டித்து இயக்க கோரிக்கை

திங்கள் 13, மே 2024 11:39:03 AM (IST)

கன்னியாகுமரி முனைய நெருக்கடி தீர்வு காணவும், கன்னியாகுமரியிலிருந்து கூடுதல் ரயில்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 

ரயில்வே வாரியம் ரயில்கள் இயக்கம், ரயில்கள் பராமரிப்பு, பயணிகள் பாதுகாப்பு குறித்து பல்வேறு வழிமுறைகளை வகுத்துள்ளது. இந்த விதிகளின் படி ரயில்வே கோட்டங்கள்  மற்றும் மண்டலங்கள் ரயில்களை இயக்கும்.  இந்த விதிகளின் படி கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் சென்னை – கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த வாரம் முதல் மாற்றம் செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது.  ஒரு ரயில் நிலையத்திலிருந்து ரயில் புறப்பட்டு இயங்க வேண்டும் என்றால் ரயில் பெட்டிகளை பராமரிப்புக்கு என்று பிட்லைன், காலி ரயில் பெட்டிகளை நிறுத்திவைக்கும் ஸ்டேபளிங்லைன்கள், மிகவும் முக்கியமாக ரயில் பயணிகளை ஏற்றி செல்ல போதிய நடைமேடைகள் வேண்டும். இந்த வசதிகள் அதிகம் உள்ள ரயில் நிலையங்களிலிருந்து அதிக ரயில்கள் இயக்கப்படுவதை காணலாம்.

நமது மாவட்டத்தில் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இது போன்ற வசதிகள் குறைவாக இருக்கின்ற காரணத்தால் ரயில்வே துறை பல்வேறு  மாற்று ஏற்பாடுகளை செய்து ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாகர்கோவில் - கோயம்புத்தூர் சூப்பர் பாஸ்ட் ரயில் பெட்டிகளை கொண்டு நாகர்கோவில் - கொல்லம் பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. இதைப்போல் நாகர்கோவில் - பெங்களுர் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளை கொண்டு நாகர்கோவில் - கொச்சுவேளி பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. 

இவ்வாறு இயக்கபடவில்லை என்றால் நாகர்கோவில் - கோயம்புத்தூர்  மற்றும் நாகர்கோவில் - பெங்களுர் ரயில்களின்  கால பெட்டிகள் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பகல் முழுவதும் நிறுத்தி வைக்க இரண்டு முழு ஸ்டேபளிங் லைன் தேவைப்படும். 

இந்த நாகர்கோவில் - பெங்களுர் ரயில் ஆச்சரியம் என்னவென்றால் நாகர்கோவில் - பெங்களுர் ரயில் சென்னை – கன்னியாகுமரி ரயில் இயங்குவது போன்று பெங்களுர் சென்று விட்டு அதே பெட்டிகள் உடனடியாக பெங்களுர் - காச்சிகுடா ரயில் சென்று கச்சிகுடா ரயில் நிலையத்தில் பராமரிப்பு செய்யப்படுகிறது. இது ரயிலில் ஒட்டப்பட்டுள்ள பெயர் பலகைகளை பார்த்தால் தெரிந்துவிடும்.  இவ்வாறு அகில இந்திய அளவில் ஆயிரக்கணக்கான ரயில்கள் இவ்வாறுதான் இயக்கப்படுகின்றது.  

இவ்வாறு இயக்கப்படும் போது ஒரு ரயில் தொழில்நுட்ப காரணங்களுக்காக , ஏதேனும் அசம்பாவிதங்கள் , ரயில் அவசரகால சங்கிலியை பிடித்து இழுத்தல், சிறிய விபத்துகள்,  மின்சார கம்பி அறுத்துவிழுத்துவிடுதல், மழை வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர், பொதுமக்கள் போராட்டம், அரசியல் கட்சிகள்  ரயில் மறியல் போராட்டம் போன்ற காரணங்களால் காலதாமதமாக வந்தால் அந்த ரயில் பெட்டிகளை கொண்டு இயக்கப்படும் அடுத்த ரயில் கால தாமதமாக இயக்கப்படும். இதற்கான அறிவிப்புகள் பயணநேரத்தில் ஐந்து மணி நேரத்துக்கு முன்னதாகவே பயணிகளுக்கு அலைபேசி வழியாக தெரிவிக்கப்படும். கன்னியாகுமரியிலிருந்து திப்ருகருக்கு இயக்கப்படும் ரயில் வாரத்துக்கு ஒரு நாள் காலதாமதமாகவே இயக்கப்பட்டு வருகின்றது.

ரயில்கள் இயக்கம் எளிமையாகவும், ரயில் பெட்டிகள் மற்றும் வளங்களை அதிக அளவில் பயன்படுத்தும் நோக்கத்தின் விளைவாக கன்னியாகுமரி – பெங்களுர் ரயில் பெட்டிகளை கொண்டு கன்னியாகுமரி – சென்னை ரயில் கடந்த வாரம் முதல் இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இயக்கப்படுவதால் ஒரு 22 பெட்டிகள் கொண்ட ரயில் செட் ரயில்வே துறை சேமிக்கப்படுகிறது.  

இதுமட்டுமில்லாமல் கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் பகல் முழுவதும் கன்னியாகுமரி – சென்னை ரயில் காலி பெட்டிகள் நிற்கபடுவது தவிர்க்கப்படுகின்றது. இதைப்போல் இரவு முழுவதும் கன்னியாகுமரி – பெங்களுர் ரயில் காலி பெட்டிகள் நிற்கபடுவது தவிர்க்கப்பட்டுள்ளது. இதனால் கன்னியாகுமரி ரயில் நிலையத்தின் நடைமேடைகள் காலியாக இருக்கும். இவ்வாறு இருக்கின்ற காரணத்தால் தான் கன்னியாகுமரியிலிருந்து புதிய ரயில்கள் இயக்க திட்டம் வகுத்துள்ளனர்.

தாம்பரம் - ஐதராபாத் ரயில் கன்னியாகுமரி நீட்டிப்பு:

சென்னையிலிருந்து ஹைதராபாத் செல்லும் சார்மினார் ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்ய ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. இந்த ரயில் இரவு முழுவதும் கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் காலி பெட்டிகள் நிறுத்தப்படும். இவ்வாறு நிறுத்த வேண்டும் என்றால் காலி நடைமேடை வேண்டும். இவ்வாறு காலி நடைமேடை இருந்தால்தான் இந்த சார்மினார் ரயில் கன்னியாகுமரி நீட்டிக்கப்படுவதற்க வசதி வாய்ப்புகள் வரும். இந்த காரணத்திற்காக தான் கன்னியாகுமரி –பெங்பளுர் ரயில் பெட்டிகளை கொண்டு  கன்னியாகுமரி – சென்னை ரயில் இயக்கப்படுகிறது.  

ஆகவே தற்போது கன்னியாகுமரி ரயில் நிலையம் நடைமேடை காலியாக இருக்கின்ற காரணத்தால் அடுத்த ஜூன் அல்லது ஜூலை  மாதம்  வெளியிடப்பட இருக்கின்ற ரயில் கால அட்டவணையில் தாம்பரம் - ஐதராபாத் சார்மினார் ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டித்து இயக்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தாம்பரம் - நாகர்கோவில் ரயில் கன்னியாகுமரிக்கு நீட்டிப்பு:

நாகர்கோவிலிருந்து வாரத்திற்கு மூன்று நாள் தாம்பரத்துக்கு இயக்கப்படும் ரயிலை கன்னியாகுமரியிலிருந்து இயக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. இவ்வாறு கன்னியாகுமரி நீட்டிக்கும் பட்சத்தில் இந்த ரயிலை தினசரி ரயிலாக இயக்க ரயில்வே துறையிடம் திட்டமும் உள்ளது.  இந்த ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என்றால் கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் காலி நடைமேடை இருந்தால் மட்டுமே முடியும்.

இந்த கன்னியாகுமரி – பெங்களுர் ரயில் மற்றும் கன்னியாகுமரி – சென்னை ரயில் பெட்டிகளை கொண்டு இயக்கம் குறித்து திருவனந்தபுரம் அதிகாரிகளிடம் கேட்டபோது  கடந்த ஒரு வருடத்தில் பெங்களுர் - கன்னியாகுமரி ரயில்  சுமார் 4 அல்லது 5 நாட்கள் மட்டுமே கன்னியாகுமரிக்கு கால தாமதமாக  வந்தது. இந்த புள்ளியல் விபரம் வைத்துதான் தெற்கு ரயில்வே மண்டலத்தின் இவ்வாறு இயக்குவதற்கு அனுமதி பெறப்பட்டது.  

கடந்த 10-ம் தேதி வெள்ளிக்கிழமை இந்த பெங்களுர் - கன்னியாகுமரி ரயில் பெங்களூரிலிருந்து பராமரிப்பு காரணமாக காலதாமதமாக புறப்பட்ட காரணத்தால் சென்னை செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் காலதாமதம் ஏற்பட்டது. தற்போது அடுத்த நாட்களில் இனி இது போன்ற சம்பவங்கள் ஏற்படாதவாறு செய்து தொடர்ந்து பெங்களுர் - கன்னியாகுமரி ரயிலை கண்காணித்து கொண்டு இருக்கின்றோம் என்று கூறினார்.

தற்போது நாகர்கோவிலிருந்து சென்னைக்கு முதல் ரயில் நாகர்கோவில் -தாம்பரம் அந்தோதையா ரயில் சென்னைக்கு புறப்படுகிறது. இந்த ரயிலில் அதிக அளவில் பயணிகள் பயணம் செய்து விடுகின்றனர். இரண்டாம் ரயில்  நாகர்கோவில் - தாம்பரம் மற்றும் நாகர்கோவில் - சென்னை எழும்பூர் வாராந்திர ரயில்கள்; என்று நான்கு நாட்கள் ரயில்கள் இருப்பதால் சென்னைக்கு முதலில் அதிகாலை 4:00 மணிக்கு செல்ல வேண்டும் என்று விரும்பும் பயணிகள் பயணம் செய்து விடுகின்றனர். அடுத்த ரயில் கொல்லம் - சென்னை அனந்தபுரி ரயில் புறப்படுகிறது. 

இந்த மூன்று ரயிலிலும் மாவட்டத்தில் உள்ள கணிசமான பயணிகள் நமது தலைநகர் சென்னைக்கு பயணம் செய்து விடுகின்றனர். அதிலும் குறிப்பாக வேலைவாய்ப்பு நேர்காணல், விமான நிலையம் செல்லும் பயணிகள், சென்னையிலிருந்து அடுத்த நெடுந்தூர ரயிலில் பயணம் செய்யும் பயணிகள், பல்வேறு தேர்வுகளுக்கு என்று செல்லும் பயணிகள் முதல் தேர்வாகவே இந்த ரயில்கள் உள்ளன. மாவட்டத்திலிருந்து கடைசி ரயில் தான் இந்த கன்னியாகுமரி – சென்னை ரயில் மாவட்டத்திலிருந்து புறப்பட்டு சென்னைக்கு செல்கிறது.

கன்னியாகுமரி – நாகர்கோவில் - திருநெல்வேலி இருவழி பாதை பணிகள் முடிவு பெற்ற பிறகு இந்த மார்க்கத்தில் எந்த ஒரு ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டு ரயில் கால அட்டவணை மாற்றம் செய்யப்படவில்லை.  அடுத்த மாதம் வருகின்ற புதிய ரயில் கால அட்டவணையில் புதிய கால அட்டவணையில் இந்த கன்னியாகுமரி – சென்னை ரயில் வேகம் அதிகரிக்கப்பட்டு கன்னியாகுமரியிலிருந்து இன்னமும் கால தாமதமாக புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட இருக்கிறது. இவ்வாறு செய்யும் போது ஒரு சில காரணங்களுக்காக பெங்களுர் - கன்னியாகுமரி ரயில் காலதாமதமாக வந்தாலும் இனி கன்னியாகுமரி ரயில் சரியான நேரத்துக்கு இயங்கும் என்று திருவனந்தபுரம் கோட்ட அதிகாரி தெரிவித்தார்.  

இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் சங்க நிர்வாகியிடம் கூறியதாவது கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா மற்றும் ஆன்மீக பக்தர்கள் வசதிக்காக சூரிய மறைவை பார்த்துவிட்டு இந்த ரயிலில் பயணம் செய்யும் விதத்தில் ரயிலின் வேகத்தை அதிகரித்து பயண நேரத்தை குறைத்து கால அட்டவணை மாற்றம் செய்து இரவு 7:00 மணிக்கு கன்னியாகுமரியிலிருந்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.  இவ்வாறு இயக்கும் போது பெங்களுர் - கன்னியாகுமரி ரயில் காலி பெட்டிகளை வைத்து தொடர்ந்து கன்னியாகுமரி – சென்னை ரயிலை இயக்க முடியும்.  

இவ்வாறு தொடர்ந்து இயக்குவதன் மூலம் 22 பெட்டிகள் கொண்ட ரயில் செட் ரயில்வே துறை சேமித்துள்ளது. இவ்வாறு சேமித்த ரயில் பெட்டிகளை வைத்து நாகர்கோவில் -தாம்பரம் வாரம் மூன்று முறை ரயிலை தினசரி ரயிலாக வருகின்ற ரயில் கால அட்டவணையில் அறிவித்து இயக்க வேண்டும். இவ்வாறு இயக்கும் போது அனந்தபுரி ரயில் நாகர்கோவில் டவுன் வழியாக இயக்கப்படுகிறது காரணத்தால் அதற்கு இழப்பீடாக சந்திப்பு ரயில் நிலைய பயணிகளுக்கு பயன்படும் வகையில் இந்த ரயில் அமையும்.

நாகர்கோவில் - சென்னை சென்ட்ரல் வாராந்திர ரயிலையும் தினசரி ரயிலாக இயக்க வேண்டும். இவ்வாறு இந்த இரண்டு ரயில்களும் தினசரி ரயிலாக அறிவித்து இயக்கும் போது கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் முழுக்க முழுக்க சுற்றுலா மற்றும் ஆன்மீக பக்தர்களுக்கான ரயில் இருக்கும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory