» செய்திகள் - விளையாட்டு » உலகம்

வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார்

செவ்வாய் 30, டிசம்பர் 2025 10:51:19 AM (IST)

வங்கதேச முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சி தலைவருமான கலிதா ஜியா உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 80. 

வங்கதேச முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சி தலைவருமான கலிதா ஜியா, உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த நவம்பர் 23-ந்தேதி தலைநகர் டாக்காவில் உள்ள எவர்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் கலிதா ஜியா இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி இறந்தார். 

இதுதொடர்பாக வங்க தேச தேசியவாத கட்சி வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், வங்கதேச தேசியவாதக் கட்சி தலைவர்-முன்னாள் பிரதமர் கலிதா ஜியா நம்மிடையே இல்லை என்று தெரிவித்தது. கலிதா ஜியா 2 முறை பிரதமராக பதவி வகித்தார். 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரையும், 2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரையும் பிரதமாக இருந்தார். அவர் வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமர் ஆவார்.

கடந்த 1960-ம் ஆண்டு அப்போதைய ராணுவ அதிகாரியான ஜியாவுர் ரகுமானை திருமணம் செய்தார். வங்கதேச சுதந்திரப் போரில் முக்கிய பங்காற்றிய ஜியாவுர் ரகுமான், வங்கதேச தேசியவாத கட்சியை உருவாக்கி 1977-ம் ஆண்டு அதிபராக பொறுப்பேற்றார். 1981-ம் ஆண்டு மே மாதம் ஜியாவுர் ரகுமான் படுகொலை செய்யப்பட்டார். அதன்பின் 1984-ம் ஆண்டு வங்க தேச தேசியவாத கட்சியின் தலைவராக கலிதா ஜியா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2007-ம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் கலிதா ஜியா கைது செய்யப்பட்டார். ஊழல் வழக்கில் அவருக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கிடையே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாணவர்கள் போராட்டம் காரணமாக ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்து அவர் இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

இதையடுத்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. அதன்பின் சில மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்து கலிதா ஜியா விடுதலை செய்யப்பட்டார். இதற்கிடையேதான் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கலிதா ஜியா தனது அரசாங்கத்தில் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். இலவச மற்றும் கட்டாய ஆரம்பக் கல்வி, 10-ம் வகுப்பு வரை சிறுமிகளுக்கு இலவசக் கல்வி, பெண் மாணவர்களுக்கு உதவித்தொகை, கல்விக்காக உணவுத் திட்டங்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கலிதா ஜியா உடல்நிலை மோசமடைந்ததையடுத்து அவரது மகன் தாரிக் ரகுமான் லண்டனில் இருந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் வங்கதேசம் திரும்பினார். ஷேக் ஹசீனா ஆட்சி காலத்தில் தாரிக் ரகுமான் மீது பல வழக்குகள் தொடரப்பட்டு இருந்த நிலையில் அந்த வழக்குகளை இடைக்கால அரசாங்கம் ரத்து செய்தது. இதையடுத்து தனது தாய் கலிதா ஜியாவை பார்க்க தாரிக் ரகுமான் நாடு திரும்பினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory