» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இலங்கையில் சூறாவளி காற்றுடன் கனமழை: நிலச்சரிவில் சிக்கி 56 பேர் உயிரிழப்பு!

வெள்ளி 28, நவம்பர் 2025 4:01:40 PM (IST)



இலங்கையில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. நிலச்சரிவில் சிக்கி 56 பேர் உயிரிழந்தனர். 

இலங்கையில் கடந்த 17-ம்தேதி முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின. அப்போது கும்புக்கனை நகர சாலையில் சென்ற ஒரு பஸ்சை வெள்ளம் அடித்துச் சென்றது. தகவலின்பேரில் அங்கு விரைந்த மீட்பு படையினர் பஸ்சை மீட்டு பயணிகளை பத்திரமாக வெளியேற்றினர். அதேசமயம் அம்பாறை பகுதியில் கார் அடித்துச்செல்லப்பட்டு 3 பேர் இறந்தனர்.

இதனைத்தொடர்ந்து அங்கு பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. மேலும் பலர் உயிருடன் மண்ணில் புதையுண்டனர். மீட்பு படையினர் அங்கு சென்றதும் அவர்களை தேடும் பணி நடைபெற்றது.

எனினும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 56 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் மாயமாகி இருப்பதால் அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 25 நிர்வாக மாவட்டங்களில் 17 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இதில் பதுல்லா மாவட்டத்தில் அதிக அளவாக பலியாகி உள்ளனர்.

6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வீடு மற்றும் உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். மேலும் சில நாட்களுக்கு மழை தொடரும் என எச்சரிக்கை தரப்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறுகையில், நாட்டின் தென்கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. மட்டக்களப்பின் தென் கிழக்கே 210 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு நோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. எனவே 20 செ.மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்யும் என எச்சரித்துள்ளது.

இதனிடையே வெள்ள பாதிப்பை எதிர்கொள்வது குறித்து அதிபர் அனுர குமார திசநாயகே தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து வெள்ள பாதிப்பை எதிர்கொள்ள தேசிய பேரிடர் மேலாண்மை துறையினர் தயாராக இருக்குமாறு அவர் அறிவுறுத்தினார். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு 117 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory